நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 25)

பொதுக்காலம் பதினாறாம் வாரம் சனிக்கிழமை
மத்தேயு 13: 24-30
பொறுமையோடு இருக்கும் இறைவன்
நிகழ்வு
திருஅவையில் பதினைந்தாம் பெனடிக்ட் திருத்தந்தையாக இருந்த நேரம் அது. ஒருநாள் வழக்கமாக அவர் மக்களுக்கு ஆசிவழங்கும் இடத்திலிருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கும்பொழுது, அவரைச் சுட்டுக் கொல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு அங்கு வந்த மதவெறியன் ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்துத் திருத்தந்தையை நோக்கிக் குறிபார்த்துச் சுட்டான். அவன் வைத்த குறி தப்பிவிடவே, திருத்தந்தைக்கு எதுவும் ஆகவில்லை.
இதைத் தொடர்ந்து, திருத்தந்தையைச் சுட்டுக் கொல்லமுயன்ற அந்த மதவெறியனை வத்திக்கான் பேதுரு பெருங்கோயில் வளாகத்தில் காவல்காத்துக்கொண்டிருந்த காவலர்கள் சுற்றி வளைத்துப் பிடித்து, திருத்தந்தையிடம் இழுத்துக்கொண்டு வந்தார்கள். திருத்தந்தையைக் கொல்ல முயன்றவனோ, ‘நான் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டேன். இன்றைக்கு எனக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது என்று தெரியவில்லையே!’ என்ற அச்சத்தோடு வந்தான். ஆனால், திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் அவனிடம் அவன் நினைத்து மாதிரி எதுவும் பேசவில்லை. மாறாக அவர் அவனிடம், “நீ ஏன் என்னைக் குறிபார்த்துச் சுட முடியவில்லை தெரியுமா…? நான் ஆசி வழங்கிய கூட்டத்தில் இருந்தாய். ஒருவேளை நீ வேறு எங்காவது நின்று கொண்டுயு என்னைக் குறிபார்த்துச் சுட்டிருப்பாய் எனில், உன்னால் என்னைக் குறிபார்த்துச் சுட்டிருக்க முடியும்!” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டுத் திருத்தந்தை அவனிடம் தொடர்ந்து பேசினார்: “நீ என்னைச் சுட முயன்றதற்காக நான் உனக்கு எந்தத் தண்டனையையும் கொடுக்கப்போவதில்லை; உன்னை மனதார மன்னிக்கின்றேன். மேலும், நீ என்னைச் சுட்டுக் கொல்லமுயன்ற செய்தி எப்படியும் உன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவரும். அதை நினைத்து அவர்கள் பெரிதும் வருந்தக்கூடும். அதனால் நீ உன்னுடைய வீட்டிற்கு உடனே சென்று, நான் உன்னை மனதார மன்னித்து, உன்னிடத்தில் பொறுமையாக நடந்துகொண்டதைப் பற்றிச் சொல். இதைக் கேட்கும் அவர்கள் வருத்தப்படமாட்டார்கள்.”
இதற்குப் பின்பு, திருத்தந்தையைக் கொல்லமுயன்ற அந்த மதவெறியன் தன்னுடைய வீட்டிற்குச் சென்று, நடந்த அனைத்தையும் வீட்டிலிருந்தவர்களிடம் சொன்னான். அதற்கு வீட்டில் இருந்தவர்கள், “திருத்தந்தை உன்னைத் தண்டிக்காமல் மனதார மன்னித்து, பொறுமையாக இருந்தாரே, அதற்கு நன்றிக்கடனாக, நீ நல்லவழியில் வாழக் கற்றுக்கொள்” என்றார்கள். அவனும் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, மனம்வருந்தி, நல்ல மனிதனாக வாழத் தொடங்கினான்.
ஆம், திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட், தன்னைச் சுட்டுக்கொல்ல முயன்றவனைத் தண்டிக்காமல், மன்னித்து, அவரிடம் பொறுமையாக நடந்துகொண்டார். அதனால் அவன் தன்னுடைய தவற்றை உணர்ந்து, திருந்தி நடக்கத் தொடங்கினான். கடவுளும்கூட தவறு செய்கின்ற நம்மை உடனே தண்டிப்பதில்லை. மாறாக, நாம் மனம்மாறி, நல்ல வழியில் நடக்கவேண்டும் என்பதற்காக மிகவும் பொறுமையாக இருக்கின்றார். இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து நாம் இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நல்ல விதைகளை விதைத்தும், களைகள்
ஆண்டவர் இயேசு விண்ணரசைப் பற்றி மக்கள் புரிந்துகொள்வதற்கு பல்வேறு உவமைகளைப் பயன்படுத்துகின்றார். அதில் ஓர் உவமைதான், இன்றைய நற்செய்தியில் அவர் பயன்படுத்தக்கூடிய வயலில் தோன்றிய களைகள் உவமை. இந்த உவமையில் வருகின்ற நிலக்கிழார், ஆண்டவர் எப்படித் தான் படைத்த அனைத்தையும் நல்லதாகப் படைத்தாரோ (தொநூ 1:31), அப்படித் தன்னுடைய நிலத்தில் நல்ல விதைகளைத்தான் விதைத்தார்; ஆனால், பகைவர்கள் அவருடைய நிலத்தில் களைகளைத் தூவிவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். இதை அறியும் நிலக்கிழார் தன்னுடைய பணியாளரிடம் அறுவடை வரைக்கும் பொறுமையாக இருக்கச் சொல்கின்றார்.
பொறுமையோடு இருக்கும் கடவுள்
உவமையில் வருகின்ற நிலக்கிழார் அறுவடைவரை பொறுமையாக இருந்தது போன்று ஆண்டவராகிய கடவுளும் பொறுமையாக இருக்கின்றார். அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, தீயவர்களோடு நல்லவர்களும் அழிவுறக்கூடிய நிலை ஏற்படும் என்பதால். இரண்டு, புனித பேதுரு சொல்வது போல் (2 பேது 3: 9), யாரும் அழிந்து போய்விடக்கூடாது; எல்லாரும் மனம்மாறவேண்டும் என்பதால். ஆகையால், நாம் மனம்மாறி நல்ல வழியில் நடக்கவேண்டும் என்று விரும்பும் இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப, நாம் மனம்மாறி வாழத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நீரோ பல்லாண்டுகளாய் அவர்கள் மேல் பொறுமையாய் இருந்தீர்’ (நெகே 9: 30) என்று ஆண்டவரைக் குறித்து நெகேமியா நூலில் சொல்லப்படுகின்றது. ஆகையால் நாம் மனம்மாறப் பொறுமையோடு காத்திருக்கும் ஆண்டவரிடம் திரும்பி வந்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.