ஏழை நாடுகளின் கடன்கள் இரத்து செய்யப்பட காரித்தாஸ்

இந்த பூமிக்கோளம், கோவிட்-19 கொள்ளைநோயால் அடுக்கடுக்காய் சவால்களைச் சந்தித்துவரும் இவ்வேளையில், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறவும், வறிய நாடுகளின் வெளிநாட்டு கடன்கள் இரத்து செய்யப்படவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், G20 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உலகின் பொருளாதாரத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பது மற்றும், நீடித்த நிலையான பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து  ஜூலை 18, இச்சனிக்கிழமையன்று,  சவுதி அரேபியாவின் ஜெட்டா (Jeddah) நகரில், G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும், மத்திய வங்கியின் மேலாளர்கள், மெய்நிகர் உச்சி மாநாட்டைத் துவக்கவிருப்பதை முன்னிட்டு, காரித்தாஸ் நிறுவனம், இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா கொள்ளைநோயால் இலட்சக்கணக்கான மக்களின் துன்பங்கள் மேலும் அதிகரித்துள்ள இவ்வேளையில், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பத்திற்கு, உலகை முக்கியமாக  இயக்குபவர்களும், போரில் ஈடுபட்டுள்ளவர்களும் செவிகொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது, காரித்தாஸ் நிறுவனம்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், உலக வங்கியும், G20 நாடுகளும், கொரோனா கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடிநிலையால், அதிக அளவு துன்புறும் மிக வறிய நாடுகள், தங்களின் கடன்களை செலுத்துவதை, தற்காலிகமாக நிறுத்திவைப்பதைற்கு இசைவு தெரிவித்திருந்தன.

இதை தன் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ள காரித்தாஸ் அமைப்பு, கடன்கள் செலுத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதைவிட, அவை நிரந்தரமாக இரத்துசெய்யப்படுவதற்கு உறுதியான செயல்திட்டங்களை உருவாக்குவதே இன்றையத் தேவை என்று, ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளது.

கத்தோலிக்கத் திருஅவையின் மனிதாபிமான அமைப்பான உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார், அதன் பொதுச்செயலர் அலாய்சியஸ் ஜான்.

உலக அளவில் காரித்தாஸ் அமைப்பு திரட்டிய ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு அதிகமான யூரோக்கள் பணத்தைக் கொண்டு, இந்த கொள்ளைநோய் காலத்தில், ஒரு கோடியே 50 இலட்சம் முதல், ஒரு கோடியே 60 இலட்சம் மக்கள் வரை உதவ முடிந்தது என்றும், ஜான் அவர்கள் கூறினார்.

ஜெட்டா (Jeddah) நகரில் ஜூலை 18,19 அதாவது இச்சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள், G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும், மத்திய வங்கியின் மேலாளர்கள், வலைத்தளம் வழியே, மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்துகின்றனர்.

Comments are closed.