ஜூன் 30 : நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 23-27
அக்காலத்தில்
இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.
மக்கள் எல்லாரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
மறையுரைச் சிந்தனை (ஜூன் 28)
அச்சம் எதற்கு?, ஆண்டவர் துணை நமக்கிருக்க
நான்கு வயது சிறுவன் ஒருவன் ஐஸ்கிரீம் பார்லருக்குச் சென்று, தனக்குப் பிடித்த ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி, வரும் வழியில் அதை சாப்பிட்டுக்கொண்டே வந்தான். அப்போது எதிர்திசையில் ஓடிவந்த சேட்டைக்கார சிறுவர்கள் ஒருசிலர், அவன் வைத்திருந்த ஐஸ்கிரீமைத் தட்டிவிட்டு, அதைக் கண்டுகொள்ளாதவர்கள் போல் ஓடிப்போனார்கள்.
தான் சாப்பிட்டுக்கொண்டு வந்த ஐஸ்கிரீம் இப்படிக் கீழே விழுந்துவிட்டதே என்று அழுது அடம்பிடித்தான் அந்தச் சிறுவன்.
இதைத் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருத்தி, அவனிடத்தில் வந்து, “தம்பி இதை நினைத்து நீ அழவேண்டாம். நான் உனக்கு ஒரு காரியம் சொல்வேன். எனக்காக அதை நீ செய்வாயா?” என்று கேட்டாள். சிறுவனும் சரி என்றான்.
பின்னர் அந்தப் பெண்மணி சிறுவனைப் பார்த்து, “இப்போது நீ கீழே கிடக்கின்ற ஐஸ்கிரீமில் குதித்துக் குதித்து விளையாடு” என்றாள். அவனும் ஐஸ்கிரீமில் குதித்துக் குதித்து விளையாடத் தொடங்கினான். இந்த அனுபவம் அவனுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஐஸ்கிரீம் அவன் கால் முழுவதும்பட்டு, அவனுக்கு ஒருவிதமான சிலிர்ப்பையும், குளிர்ச்சியையும் தந்தது.
அப்போது அந்த பெண்மணி சிறுவனிடம், “இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள். அவன், “மிகவும் நன்றாக இருக்கிறது” என்று ஆச்சரியத்தோடு பேசினான். பின்னர் அவள் சிறுவனிடம், “வாழ்க்கையில் நமக்கு வரும் எந்தக் கஷ்டத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதை நாம் சந்தோசமாக மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும்” என்று ஆறுதல்மொழி பேசி அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
வாழ்க்கையில் நமக்கு வரும் துன்பங்கள், இடர்கள் யாவற்றையும் பெரிதாக எடுத்துக் கொண்டால், நமது வாழ்வே பாழ்பட்டுப்போய்விடும். மாறாக நமக்கு வரும் இடர்களையும், துன்பத்தையும் சந்தோசமாக மாற்றிக்கொள்ளக் கூடிய வித்தை நமக்குத் தெரிந்தால், நமது வாழ்வில் என்றும் பெருமகிழ்ச்சிதான்.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவும், அவருடைய சீடர்களும் கடலிலே போய்கொண்டிருக்கும்போது, கடல் கொந்தளிப்பு ஏற்படுகிறது; படகுக்கு மேல் அலைகள் எழும்புகின்றன. இதைக் கண்டு சீடர்கள் திகிலுறுகிறார்கள். “ஆண்டவரே நாங்கள் சாகப் போகிறோமே, உமக்குக் கவலை இல்லையா?” என்று அலறுகிறார்கள். அதற்கு இயேசு, “நம்பிக்கை குற்றியவர்களே! ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று சொல்லி காற்றையும், கடலையும் கடிந்துகொள்கிறார். உடனே பேரமைதி உண்டாகிறது.
இந்த நிகழ்வில் சீடர்கள், இயேசு தங்களோடு இருக்கிறார் என்ற உண்மைகூட உணர்ந்துகொள்ளாமல் அலறுகிறார்கள். இது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. எல்லா அதிகாரமும், ஆற்றலும் கொண்ட இறைமகனாகிய இயேசு தங்களோடு இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளாத சீடர்களைப் போன்றுதான், நாமும் பலநேரங்களில் இருக்கின்றோம்; அவரது பிரசன்னத்தை சந்தேகம் கொள்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசுவோ என்றுமே நம்மோடு உடனிருக்கிறார்.
வாழ்க்கையில் நமக்கு வரும் பிரச்சனைகள், துன்பங்கள் யாவும், நாம் நம்பி வாழும் ஆண்டவர் இயேசுவைவிட பெரியவை அல்ல என்று உணர்ந்து வாழ்ந்தோம் என்றால், நமக்கு வரும் துன்பங்களை நாம் எளிதாக வெற்றிகொள்ள முடியும்.
எசாயா புத்தகம் 43:2 ல் வாசிக்கின்றோம், “நீர் நிலைகள் வழியாக நீ செல்லும்போது நாம் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்துபோகும்போது அவை உன்னை மூழ்கடிக்கமாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றி எரியாது” என்று. ஆக, நம்மைக் காத்து வழிநடத்தும் இறைவன் நம்மோடு இருக்கும்போது நாம் எதற்கு பயப்படவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
எனவே, ‘உலக முடிவுவர எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்’ என்று சொன்ன இயேசுவின் வாக்குறுதியை நம் நினைவில்கொண்டு, வாழ்வில் துன்பங்கள் வந்தாலும், தொடர்ந்து நடப்போம் அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.