நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 25)

பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் வியாழக்கிழமை
மத்தேயு 7: 21-29
சொல்பவரல்ல, செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்
நிகழ்வு
1952 ஆம் ஆண்டு அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர் ஜெர்மனியை சார்ந்த ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer 1875- 1965). மெய்யியலாளராக, இறையியலாளராக, மறைப்பணியாளராக, மருத்துவராக அறியப்படும் இவர், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லாம்பரேன் (Lambarene) என்ற இடத்தில் இருந்த தொழுநோயாளர்கள் நடுவில் ஆற்றிய பணிகளை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
இவர் விடுமுறைக்காக ஆப்பிரிக்காவிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு வந்திருந்தபொழுது, ஒருசில தாய்மார்கள் இவரிடம் வந்து, “எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி ஒருசில அறிவுரை கூறுங்கள்” என்றார்கள். ‘ஆல்பர்ட் சுவைட்சர் கற்றறிந்தவர், அதனால் அவர் பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்பது பற்றி நீண்டநேரம் பேசுவார்’ என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர், “வாழ்ந்து காட்டுகள், வாழ்ந்து காட்டுங்கள், வாழ்ந்து காட்டுங்கள்” என்று மூன்றுமுறை சொல்லித் தன்னுடைய அறிவுரையை முடித்துக்கொண்டார்.
ஆம், பிள்ளைகள் இப்படி இருக்க வேண்டும்… அப்படி இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதற்குப் பதில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த அறிவுரையாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்ததால்தான், ஆல்பர்ட் சுவைட்சர் தன்னிடம் வந்த தாய்மார்களுக்கு அப்படியோர் அறிவுரை சொன்னார். அவருடைய போதனையை நாம் வேறுவிதமாகச் சொல்வதென்றால், “சொல்லை விடவும் செயலே சிறந்த போதனை’ என்று சொல்லலாம்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு விண்ணரசுக்குள் யார் செல்வார் என்பதற்கான பதிலைத் தருவார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவர் விண்ணரசுக்குள் செல்வதில்லை
இன்றைய நற்செய்தி வாசகம் மலைப்பொழிவின் நிறைவுப் பகுதியாக இருக்கின்றது. இப்பகுதியில் ஆண்டவர் இயேசு, தன்னுடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களிடம், சீடர்களிடம் தீர்க்கமான ஒரு முடிவினை எடுக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றார். ஒருவர் இறைவார்த்தைக் கேட்ட பின்பு இரண்டு முடிவுகளில் ஏதாவது ஒரு முடிவினை எடுக்கலாம். ஒரு முடிவு, இறைவார்த்தையைக் கேட்பதோடு நிறைவடைவது. இரண்டாவது முடிவு, இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல், அதன்படி நடப்பது. இது குறித்து நாம் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
நேற்றைய நற்செய்தியில் போலி இறைவாக்கினர்களைக் குறித்து வாசித்தோம் அல்லவா! இவர்கள் அல்லது இவர்களைப் போன்றவர்கள் இறைவனுடைய வார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடுவார்கள் இன்னும் சொல்லப்போனால் இவர்கள் இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது கிடையாது; மாறாக, அவற்றைத் தங்களுடைய பெயரையும் புகழையும் பெருக்கிக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். அதனால் அவர்கள் பெரிய அளவில் இலாபம் அடைவார்கள். இப்படிப்பட்டவர்களைக் குறித்துத்தான் இயேசு, என்னை நோக்கி ஆண்டவர் ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்ல முடியாது என்று கூறுகின்றார்.
ஆம், இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், அந்த வார்த்தையைப் பயன்படுத்தியே இலாபம் அடைகின்றவர்கள்… பலநேரங்களில், மக்களைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லக்கூடியவர்கள் எப்படி விண்ணரசுக்குள் செல்ல முடியும்? நிச்சயமாகச் செல்ல முடியாது.
தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்
இறைவார்த்தையைக் கேட்பதோடு நிறைவடைவது ஒரு முடிவு என்றால், இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல், அதன்படி வாழ முயற்சி செய்வது இன்னொரு முடிவு இன்னொரு முடிவு. இறைவார்த்தையின் படி வாழ்வதற்கு நாம் இயேசுவுக்கு முதலில் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். அப்படி நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்பொழுது மழை, பெருங்காற்று போன்று ஏராளமான துன்பங்கள் வரும். அப்படிப்பட்ட துன்பங்களுக்கு நடுவில் நாம் மனம் உடைந்துபோகாமல், உறுதியாக இருந்தோம் எனில், நிச்சயமாக நம்மால் விண்ணரசுக்குள் செல்ல முடியும்.
இன்றைக்குப் பலர், இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் வரும் துன்பங்களுக்கு அஞ்சியே எல்லாரையும் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இயேசு சொல்வது போல், ‘உலகில் துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். எனினும் துணிவோடு இருக்கவேண்டும்’ (யோவா 16: 33). அப்படி நாம் துணிவோடு இருந்து, இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து நடந்தோமெனில் அல்லது தந்தையின் திருவுளத்தின் படி நடந்தோமெனில், நாம் விண்ணரசுக்குள் செல்லலாம்.
ஆகையால், நாம் விண்ணரசுக்குள் செல்ல, சொல்பவர்களாக அல்லாமல், செயல்படுபவர்களாக இருப்போம்.
சிந்தனை
‘சாதனையாளர்களின் வழி, பேசுவதை நிறுத்திவிட்டுச் செயலில் இறங்குவது’ என்பார் வால்ட் டிஸ்னி. ஆகையால், நாம் ஆண்டவரே ஆண்டவரே என்று சொல்லிக்கொண்டிருக்காமல், விண்ணுலகில் உள்ள தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்வோம். அதன்வழியாக விண்ணரசுக்குள் செல்வோம். இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
இந்த மறையுரையின் காணொளி இணைப்பு

Comments are closed.