ஜுன் 21 : நற்செய்தி வாசகம்

உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 26-33
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது:“உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள். ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பது இல்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.
உங்கள் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள். மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
மறையுரைச் சிந்தனை
எனவே அஞ்சாதீர்கள்!
முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் தனது குழந்தை பிறக்கும் நேரத்தை வைத்து, அதன் ஜாதகத்தைத் துல்லியமாகக் கணித்துத் தருமாறு பல ஜோதிடர்களுக்கு ஆணையிட்டான்.
அதன்படியே, ஜோதிடர்கள் அனைவரும் அரண்மனையில் திரண்டனர். குழந்தை பிறந்தவுடன், அறையில் இருந்து அரசன் எலுமிச்சம் பழம் ஒன்றை உருட்டிவிட, அந்த நேரத்தை வைத்து ஜோதிடர்கள் குழந்தையின் வருங்காலத்தைக் கணித்தனர். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளுடன், நல்லாட்சி புரிந்து, புகழோடு வாழ்வான் என்று கூற, ஒரே ஒரு ஜோதிடர் மட்டும், “அரசே! உங்கள் மகன் தனது 16வது வயதில் பன்றியால் தாக்கப்பட்டு, உயிரிழப்பான்” என்று கூறினார்.
ஜோதிடரின் சொற்களைக் கேட்ட அரசன் வெகுண்டான். உடனே தன் படைவீரர்களை அழைத்து, அவரைச் சிறையிலிட கட்டளையிட்டான். அதன்பிறகு அவன் தனது மகனை கண்ணின் மணியாய்ப் பாதுகாத்து வளர்த்தான். பதினாறாவது வயது தொடங்குவதற்குச் சில நாட்களே மிச்சமிருக்க, மகனை உயர்ந்த மாளிகையின் உப்பரிகையில் வைத்துக் காவல் இருந்தான்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. அனைவரும் உப்பரிகையின் மேலே சென்று பார்த்தபோது, இளவரசன் உலோகக் கம்பக் கொடியால் தாக்குற்று, இறந்து கிடந்தான். அவனது உடல் மீது பன்றிக்கொடி கிடந்தது. மகன் இறந்த துக்கம் ஒருபுறம் இருந்தாலும், மிகச் சரியாக, அதே நேரத்தில் எதற்கும் அஞ்சாமல், துணிச்சலுடன் உண்மையைக் கூறிய, குறிப்பிட்ட அந்த ஜோதிடரின் அறிவுத் திறனும் அவையஞ்சாமையும் அரசனை வெகுவாகக் கவர்ந்தன. உடனே அவன் தன் படைவீரர்களை அழைத்து, அந்த ஜோதிடரை சிறையிலிருந்து விடுதலை செய்யச் சொன்னான். அது மட்டுமல்லாமல் துணிச்சல் மிக்க அந்த ஜோதிடரை தன்னுடைய அமைச்சராக அமர்த்திக்கொண்டான்.
இது நடந்து ஒருசில நாட்கள் கழித்து, அரசன் முன்பு ஜோதிடராக இருந்து தற்போது தன் அமைச்சராக மாறியவரைக் கூப்பிட்டு, “உம்மால் மட்டும் எப்படி துல்லியமாக அதைச் சொல்ல முடிந்தது?” என்று கேட்டதற்கு அவர், “மற்ற ஜோதிடர்கள் அனைவரும் பழம் உருண்டு வெளியே வந்த நேரத்தை வைத்துக் கணக்கிட்டார்கள். நானோ குழந்தை பிறந்த நேரத்தை அதற்கு இரண்டு மணித்துளிகள் முன்பாகக் கணக்கிட்டு ஜாதகத்தைச் சொன்னேன்” என்றார். இதைக் கேட்ட அரசன் அவருடைய அஞ்சாமையை மட்டுமல்ல, அவருடைய அறிவுக்கூர்மையையும் வெகுவாகப் பாராட்டினார்.
அரசனிடத்தில் உண்மையைச் சொன்னால் அவன் என்ன செய்வானோ என்றெல்லாம் நினைக்காமல், அஞ்சாது மிகத் துணிச்சலாகச் செயல்பட்ட அந்த ஜோதிடர் நம்முடைய கவனத்திற்கு உரியவர்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புவதைக் குறித்தும் அப்போது அவர் அவர்களுக்குச் சொல்லக்கூடிய அறிவுரையைக் குறித்தும் வாசிக்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மீண்டும் மீண்டுமாக (மூன்றுமுறை) சொல்லக்கூடிய அறிவுரை அல்லது ஆறுதலான வார்த்தைகள் “அஞ்சாதீர்கள்” என்பதாகும். மூன்றுமுறையும் மூவேறு காரணங்களுக்காக அஞ்சாதீர்கள் என்று சொல்கின்றார் இயேசு.
முதலாவதாக, அர்த்தமற்ற விதத்தில் விமர்சனம் செய்யக்கூடியவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள் என சொல்கின்றார். இயேசு கிறிஸ்து தூய ஆவியின் வல்லமையால் பல்வேறு அருமடையாளங்களைச் செய்தார். தீய ஆவிகளை விரட்டி அடித்தார். ஆனால், அவரைப் பிடிக்காதவர்களோ அவர் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் என்று விமர்சனம் செய்தார்கள். இப்படித் தன்னை எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், அர்த்தமும் இல்லாமல் விமர்சிக்கின்றவர்கள் தன்னுடைய சீடர்களையும் அப்படி விமர்சிப்பார்கள் என்பதால், அவர் தன்னுடைய சீடர்களிடத்தில் அஞ்சாதீர்கள் எனச் சொல்கின்றார்.
அடுத்ததாக, உயிரைக் கொல்பவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள் எனச் சொல்கின்றார். இறைப்பணியை செய்கின்றபோது ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ சீடர்களைக் கொன்றுபோடலாம். ஆனால் அவர்களால் உயிரை மட்டுமே கொல்ல முடியுமே ஒழிய ஆன்மாவைக் கொல்லமுடியாது. ஆகவே, அப்படிப்பட்டவர்களைக் கண்டும் அஞ்சவேண்டாம் என்று இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில் கூறுகின்றார்.
நிறைவாக, இறைப்பராமரிப்பு எப்போதும் உண்டு, அதனால் எதற்கும் அஞ்சவேண்டாம் என்கின்றார் இயேசு. சிட்டுக்குருவிகள் சாதாரணமானவை, அதிகமாக விலைபோகாதவை. அவற்றையே கடவுள் தன்னுடைய கண்ணின் மணிபோல பராமரிக்கின்றபோது, படைப்பின் மணிமகுடமாக இருக்கின்ற மனிதர்களை அதுவும் குறிப்பாக சீடர்களை பராமரிக்காமல் போவாரா? ஆகவே, எதற்கும் அஞ்சாதீர்கள் என்கின்றார் இயேசு.
எனவே, இயேசுவின் சீடர்களாகிய நாம், அவருடைய பாதுகாப்பையும் பராமரிப்பையும் உணர்ந்தவர்களாய் துணிவோடு இருப்போம். துணிவோடு பணிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.