கோவிட்-19 நோய்க் காலத்தில், குழந்தைகள் நலப்பணிகள் குறைவு
இந்த கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில், பல நாடுகளில், குழந்தை நல ஆதரவுப்பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளிலும், வட ஆப்பிரிக்காவிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரிய அளவில் உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாக, யுனிசெப் அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.
நல ஆதரவுப்பணிகளில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக, இவ்வாண்டு இறுதிக்குள், இப்பகுதிகளில் மேலும் 51,000 குழந்தைகள் உயிரிழக்கக்கூடும் என தெரிவிக்கும், ஐ.நாவின் குழந்தைகள் நிதி அமைப்பு, பல ஏழை நாடுகளில் குழந்தைகளுக்குரிய நல ஆதரவுப் பணிகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
UNICEF அமைப்பும், WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நல ஆதரவுப்பணிகளின் குறைவும், ஊட்டச்சத்துணவின்மையும், இந்த கொரோனா காலத்தில் இடம்பெறுவதால், மேலும் 51,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என்ற கவலை வெளியிடப்பட்டுள்ளதுடன், வழக்கமான எண்ணிக்கையைவிட, இது 40 விழுக்காடு அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குரிய நலப் பணியாளர்கள், கோவிட்-19 தொற்றுநோய் துயர் துடைப்புப் பணிகளுக்கு என மாற்றப்பட்டுள்ளதாலும், அச்சம் காரணமாக பலர் கிராமப் பகுதிகளுக்குச் செல்லத் தயங்குவதாலும், குழந்தைகள் நல ஆதரவுப்பணிகள் வட ஆப்ரிக்காவிலும், மத்தியக்கிழக்குப் பகுதியிலும் பின்னடைவைக் கண்டுவருவதாகவும் இவ்விரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
தாய்மார்களின் கர்ப்பக்காலத்திலும், குழந்தை பிறப்பின்போதும் தேவையான உதவிகளை வழங்க முடியாமல் இருக்கிறது எனவும், குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்குவதிலும், இடையூறு ஏற்பட்டுள்ளது எனவும் இவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
வட ஆப்ரிக்கா, மற்றும், மத்திய கிழக்கு பகுதிகளிலுள்ள ஏழை நாடுகளில் ஆறு மாதத்தில் ஒரு இலட்சத்து 33 ஆயிரம், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் உயிரிழக்கும் நிலையிருக்க, அடுத்த ஆறு மாதங்களில் இது 1,84,000 ஆக அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Comments are closed.