நற்செய்தி வாசநற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 16)க மறையுரை (ஜூன் 16)

பொதுக்காலம் பதினொன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
மத்தேயு 5: 43-48
நீங்கள் விண்ணகத்தந்தையின் மக்களா? உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்!
நிகழ்வு
பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர் ஹாரிடன் பூம் என்ற பெண்மணி. இவர் தன்னுடைய தந்தையோடு கைக் கடிகாரங்களைச் செய்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரியும் இருந்தார்.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இவர் யூதர்களுக்குத் தன்னுடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றத்திற்காக இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்த ஹிட்லரின் நாசிப்படையினர் இவரையும், இவருடைய தந்தையையும் சகோதரியையும் கைதுசெய்து வதைமுகாமில் அடைத்து வைத்தனர். வதைமுகாமில் நூற்று ஐம்பது பேர் இருக்கவேண்டிய இடத்தில், ஐந்நூறு பேர் அடைத்து வைக்கப்பட்டனர். இதனால் பலர் உயிரிழந்தனர்; அதில் ஹாரிடன் பூமின் தந்தையும் சகோதரியும் உள்ளடங்கும்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஹாரிடன் பூம், வதைமுகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தன்னுடைய வீட்டிற்கு வந்ததும், இவர் செய்த முதல் செயல், தன்னுடைய தந்தை மற்றும் சகோதரியின் இறப்புக்குக் காரணமாக இருந்தவரும், தன்னைக் கொடூரமாகச் சித்திரவதை செய்தவருமான அதிகாரிக்குக் கடிதம் எழுதியதுதான். அந்தக் கடிதத்தில் இவர் இவ்வாறு எழுதினார்: “வதை முகாமில் நான் என்னுடைய தந்தையையும் சகோதரியையும் இழந்தேன்; நான்கூட உங்களால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டேன். இந்தத் துன்பங்கள் எல்லாம் என்னைக் கடவுளிடம் மிக நெருக்கமாகக் கொண்டுசென்றன. அதற்காக உங்களுக்கு நன்றி. மேலும் இன்றிலிருந்து என் வாழ்நாள் முழுக்க உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளப் போகிறேன். இப்படிக்கு ஹாரிடன் பூம்.”
தன்னுடைய தந்தை மற்றும் சகோதரியின் இறப்புக்குக் காரணமாக இருந்தவரும், தன்னைத் துன்புறுத்தியவருமான அதிகாரியை மன்னித்து, அவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளப்போவதாகச் சொன்ன ஹாரிடன் பூம் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியராக இருக்கின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, உங்கள் பகைவரிடம் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என்று சொல்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அன்பு செலுத்துபவர்களையே அன்புசெய்யும்பொழுது பிற இனத்தவர்களாகின்றோம்
யூதர்கள், லேவியர் புத்தகத்தில் இடம்பெறும், “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்குக் அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ (லேவி 19: 18) என்ற கட்டளையை வைத்துக்கொண்டு, தங்களுடைய இனத்தைச் சார்ந்தவர்களே அன்புசெய்துவந்தார்கள். அதே நேரத்தில் ‘பகைவர்களிடம் வெறுப்புக் கொள்வாயாக’ என்று எங்கேயும் சொல்லப்படாவிட்டாலும், திருப்பாடல் 139: 19-22, 140: 9-11 ஆகிய பகுதிகளில் இடம்பெறும் இறைவார்த்தைகளைப் பிடித்துகொண்டு, அவர்கள் பகைவர்களை வெறுத்து வந்தார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் இயேசு அவர்களிடம், அன்பு செலுத்துபவர்களிடம் மட்டும் அன்பு செலுத்தி, பகைவர்களை வெறுத்தால், நீங்கள் வரிதண்டுபவர்களைப் போன்றும் பிற இனத்தவர்களைப் போன்றும் இருப்பீர்கள் என்கின்றார். ஏனெனில், அவர்கள் தங்களை அன்பு செலுத்துபவர்களிடம் மட்டுமே அன்பு செலுத்தியும், தங்களுக்கு வாழ்த்துக் கூறுபவர்களுக்கே வாழ்த்துக் கூறியும் வந்தார்கள்.
பகைவர்களையும் அன்பு செய்கின்றபொழுது கடவுளின் மக்களாகின்றோம்
பிற இனத்தவர்கள் அல்லது இவ்வுலகைச் சார்ந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை எடுத்துச் சொன்ன இயேசு, தொடர்ந்து விண்ணகத் தந்தையின் மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றார்.
விண்ணகத் தந்தையின் மக்களாக இருப்பவர்கள், தங்களை அன்பு செய்பவர்களை மட்டுமல்ல, தங்களுடைய பகைவர்களையும் அன்பு செய்வார்கள்; மட்டுமல்லாமல், தங்களைத் துன்புறுத்துபவர்களுக்காக இறைவனிடம் வேண்டுவார்கள் என்கின்றார் இயேசு. ஆம், விண்ணகத்தந்தை நல்லோர் மீது மட்டுமல்ல, தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கின்றார். நேர்மையுள்ளோர் மீது மட்டுமல்ல, நேர்மையற்றோர்மீதும் மழை பெய்யச் செய்கின்றார். ஆகையால், அவருடைய மக்களாக இருக்கின்ற ஒவ்வொருவரும் தன்னை வெறுப்பரையும் அன்பு செய்யவேண்டும்; தன்னைத் துன்புறுத்துவோருக்காகவும் இறைவனிடம் வேண்டவேண்டும்.
இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், நம்மை வெறுப்பவரையும் அன்பு செய்து, நம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுகின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். பல நேரங்களில் நாம் வெறுப்புக்கு வெறுப்பையும், தீமைக்குத் தீமையும் செய்துகொண்டிருக்கின்றோம். இயேசுவின் சீடர்களாக இருக்கின்ற நாம் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு இருக்க வேண்டாமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘உங்கள் பகைவரை அன்பு செய்யுங்கள். ஏனெனில், அவர்கள்தான் உங்களிடமுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள்’ என்பார் பெஞ்சமின் பிராங்கிளின். பகைவர்கள் நம்முடைய தவறுகளைச் சுட்டுக்காட்டுவார்கள் என்பதற்காக மட்டுமல்ல, நாம் கடவுளின் மக்கள் என்பதற்காக நம்முடைய பகைவர்களை அன்பு செய்வோம்; நம்மைத் துன்புறுத்துபவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.