சமய சுதந்திரத்தை ஊக்குவிக்க வத்திக்கான் வலியுறுத்தல்

உலகில் அதிகரித்துவரும் சமய சகிப்பற்றதன்மைகளுக்கு மத்தியில், சமய சுதந்திரத்தை ஊக்குவிக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று, OSCE எனப்படும், பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பின் ஐரோப்பிய அமைப்பை, திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடிநிலையில், அதிகரித்துவரும், சமய சகிப்பற்றதன்மை மற்றும், பாகுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், OSCE அமைப்பு, இத்திங்கள், செவ்வாய் (மே 25, 26)  ஆகிய இரு நாள்களில் இணையதள கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

திருப்பீடத்தின் சார்பில் OSCE அமைப்பில் பணியாற்றும் அருள்திரு Janusz Urbańczyk அவர்கள், இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு, கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் சகிப்பற்றதன்மை குறித்து எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவர்கள் மற்றும், ஏனைய மதத்தவர்கெதிராக இடம்பெறும் வெறுப்புக் குற்றங்கள், மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரங்களையும் அனுபவிப்பதற்குத் தடைகளாக உள்ளன என்று கூறிய அருள்திரு Urbańczyk அவர்கள், இந்த வெறுப்புக் குற்றங்கள் வெளிப்படுத்தப்படும் முறைகள் பற்றியும் விளக்கினார்.

சிறுபான்மை மதத்தவர், அச்சுறுத்தலுக்கும், வன்முறைத் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர் மற்றும், கொலைசெய்யப்படுகின்றனர் என்று கூறிய அருள்திரு Urbańczyk அவர்கள், ஆலயங்கள், வழிபாட்டுத்தலங்கள், கல்லறைகள், சிறுபான்மை மதத்தவரின் சொத்துகள் போன்றவற்றின் மீது வன்முறை தாக்குதல்கள் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டினார்,.

சமய உணர்வால் தூண்டிவிடப்பட்ட, சகிப்பற்றதன்மையும், சமத்துவமின்மையும், அதிகரித்து வருகின்றன என்று எச்சரித்துள்ள அருள்திரு Urbańczyk அவர்கள், மத நம்பிக்கைக்கும், அதை வாழ்வில் வெளிப்படுத்துவதற்கும் இடையேயுள்ள முரண்பாடுகள் குறித்து திருப்பீடம் அதிக கவலை கொண்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.

இணையதளம் மற்றும், சமுதாய ஊடகங்களில் இடம்பெறும், கலாச்சார, தேசிய மற்றும், மதம் சார்ந்த பாகுபாடுகள் பற்றியும் குறிப்பிட்ட அருள்திரு Urbańczyk அவர்கள், இப்போதைய சமுதாய தனித்திருத்தல் காலத்தில், மக்கள் அதிகநேரம் இணையதளத்தில் செலவிடுவதால், இந்தப் பாகுபாடு அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

கேலிசெய்தல் மற்றும், சமுதாய சகிப்பற்றதன்மை உட்பட, டிஜிட்டல் உலகில் இடம்பெறும் பாகுபாடுகள், வன்முறைக்குக்கூட இட்டுச்செல்லும் எனவும் எச்சரித்த  அருள்திரு Urbańczyk அவர்கள், ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கின்ற மாண்பு மற்றும், மனித சமுதாயத்தின் அடிப்படை ஒற்றுமையை OSCE அமைப்பு ஊக்குவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Comments are closed.