நற்செய்தி வாசக மறையுரை (மே 27)

பாஸ்கா காலம் ஏழாம் வாரம்
புதன்கிழமை
யோவான் 17: 11b-19
“அவர்களைக் காத்தருளும்”
நிகழ்வு
ஒரு சிற்றூரில் விவசாயக் குடும்பம் ஒன்று இருந்தது. அந்தக் குடும்பத்தில் கணவன், மனைவி, மகள் என்று மூவர் வாழ்ந்து வந்தனர். இதில் மனைவிக்கு கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அதனால் அவர் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்த பின்னும், இரவில் தூங்கச் செல்லும் முன்னும் தன்னுடைய குடும்பத்திற்காக மிக உருக்கமாக மன்றாடி வந்தார். அவ்வாறு மன்றாடும்பொழுது, அவர் தன்னுடைய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எல்லாவிதத் தீமைகளிலிருந்தும் இறைவன் காத்தருள வேண்டும் என்று மன்றாடி வந்தார். இதைப் பார்த்துவிட்டு, கடவுள்மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லாத அவருடைய கணவர், ‘எதற்கு இந்த வீண் வேலை?’ என்று அவரைத் திட்டித் தீர்த்துவந்தார். ஆனாலும்கூட, மனைவி இறைவனிடம் தொடர்ந்து மன்றாடி வந்தார்.
இப்படி இருக்கையில் ஒருநாள் மாலை வேளையில், காட்டு வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய கணவர் மிகவும் உற்சாகத்தோடு மனைவியிடம் வந்து, “வா! நாம் இருவரும் சேர்ந்து கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்” என்றார். மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இவருக்குத்தான் கடவுள் நம்பிக்கையே கிடையாதே…! பிறகு எதற்கு இவர் கடவுளுக்கு செலுத்துவோம் என்று என்னை அழைக்கின்றார்’ என்று ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தார்.
அப்பொழுது கணவர் தன் மனைவியிடம் என்ன நடந்தது என்ற விரிவாக விளக்கத் தொடங்கினார்: “வழக்கமாக நான் காட்டு வேலையை முடித்துக்கொண்டு மலையடிவாரத்தின் வழியாக வருவேன். இன்றும் நான் அந்த வழியாகத்தான் வந்தேன். அப்படி வரும்பொழுது எங்கிருந்த வந்த ஒரு நாய் என்னைத் துரத்தத் தொடங்கியது. நான் அந்த நாயிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, கால் கிலோமீட்டருக்கு மேல் வேகமாக ஓடிவந்தேன். அப்படி நான் ஓடிவருகின்றபொழுது திடீரென்று பயங்கரச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அங்கோ மலையிலிருந்து உருண்டுவந்த ஒரு பெரிய பாறை, நான் வழக்கமாக வரும் பாதையில் வந்து விழுந்தது. அப்பொழுதுதான் நான் ‘ஒவ்வொருநாளும் நீ இறைவனிடம் நம் குடும்பத்தையும் என்னையும் எல்லாவிதமான தீமையிலிருந்தும் காப்பாற்றவேண்டும் என்று மன்றாடி வருகின்றாய் அல்லவா! அந்த மன்றாட்டுதான் என்னை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியது’ என்று நினைத்துக்கொண்டேன்.”
தன் கணவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, மிகவும் மகிழ்ந்தவராய், மனைவி அவரோடு சேர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் வரும் மனைவி, இறைவன் தன் கணவரையும் குடும்பத்தையும் எல்லாவிதத் தீமையிலிருந்தும் காத்தருள வேண்டும் என்று மன்றாடி வந்தார். அவர் மன்றாடியதுபோலவே, அவருடைய கணவர் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார். இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்மீது நம்பிக்கை கொண்டவர்களைக் காத்திருளுமாறு இறைவனிடம் மன்றாடுகின்றார். அது எப்படிப் பட்ட மன்றாட்டு என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தன்மீது நம்பிக்கை கொண்டவர்களைக் காத்தருள மன்றாடும் இயேசு
இன்றைய நற்செய்தி வாசகமானது, பெரிய குருவாம் இயேசு, தந்தைக் கடவுளை நோக்கி எழுப்புகின்ற மன்றாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. இதில் இயேசு தன்மீது நம்பிக்கை கொண்டவர்களைக் காத்தருளுமாறு இறைவனிடம் மன்றாடுகின்றார்.
இயேசு, இந்த மண்ணுலகில் வாழ்ந்தபொழுது தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அல்லது தன்மீது நம்பிக்கை கொண்டவர்களை அழிவுறாமல் காத்துக்கொண்டார். யூதாஸ் இஸ்காரியோத்து இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். ஏனெனில், அவன் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக, அவன் பேயாக இருந்தான் (யோவா 6:70). அதனால் அவனுடைய முடிவை அவனே தேடிக்கொண்டான். இவ்வாறு இயேசு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காத்துக்கொண்டார். அத்தோடு, தான் விண்ணகம் வந்தபிறகு, தன்மீது நம்பிக்கை கொண்டவர்களைக் காத்துக் கொள்ளுமாறு தந்தைக் கடவுளிடம் அவர் மன்றாடுகின்றார் .
இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டவர்களைக் கடவுள் ஏன் காக்கவேண்டும்
தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காக்கவேண்டும் என்று இயேசு ஏன் தந்தையிடம் மன்றாடவேண்டும் என்றொரு கேள்வி எழலாம். இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அல்லது அவர்மீது நம்பிக்கை கொண்டவர்கள், இவ்வுலகைச் சார்ந்தவர்களாய் வாழாமல், மறுவுலகைச் சார்ந்தவர்களாய் வாழ்ந்தார்கள், வாழ்வார்கள். அதனால் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை வாழ்பவர்களிடமிருந்து நிச்சயம் எதிர்ப்பு வரும்; பிரச்சனைகள் வரும். அதனால்தான் இயேசு அவர்களைக் காத்துக் கொள்ளுமாறு தந்தையிடம் மன்றாடுகின்றார்.
இயேசு தந்தைக் கடவுளிடம் இவ்வாறு மன்றாடுவது, நாமும் பிறருக்காக, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காக மன்றாடவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. ஆகையால், நாம் நமக்காக மட்டுமல்லாமல், பிறருக்காகவும் மன்றாடுவோம்.
சிந்தனை
‘உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை’ (திபா 25: 3) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்பிக்கையாளர்களை வெட்கமுறச் செய்யாத இறைவனிடம் நமக்காகவும் பிறருக்காகவும் நாம் மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.