மே 24 : நற்செய்தி வாசகம்

தந்தையே உங்கள்மீது அன்புகொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நம்பினீர்கள்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.
நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது ‘உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்’ என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார்.
நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————-
யோவான் 16: 23b- 28
இயேசுவின் பெயரால் தந்தையிடம் கேட்போம்
நிகழ்வு
Lord of the Rings (2001) என்ற ஆங்கிலத் திரைப்படம் வெளிவந்து, சக்கைப்போடு போட்டு, ஓடிக்கொண்டிருந்த நேரம், அந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக, அமெரிக்காவைச் சார்ந்த டேவிட் என்ற பதின்வயதுப் பையன் ஒருவன் தன் தந்தையோடு அந்தத் திரைப்பாடம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கிற்குச் சென்றான்.
படம் தொடங்கி, விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், டேவிட் என்ற அந்தப் பையனின் தந்தை, “டேவிட் எழுந்திடு! டேவிட் எழுந்திடு” என்று உரக்கக் கத்தினார். காரணம், டேவிட் என்ற அந்தப் பையன் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து, பேச்சுக் மூச்சற்றுக் கிடந்தான்.
டேவிட்டின் தந்தை எழுந்திடு, எழுந்திடு என்று உரக்கக் கத்தியதையும் அவன் பேச்சு மூச்சற்றுக் கிடப்பதையும் பார்த்துவிட்டுத் திரையரங்கில் இருந்தவர்கள், என்ன நடக்கின்றது என்று பதறியடித்துக்கொண்டு அவர்களைச் சூழ்ந்துகொண்டார்கள். ஒவ்வொருவரும் டேவிட் தந்தையிடம் ஒவ்வொன்றைச் சொல்லிக்கொண்டிருக்க, அங்கிருந்த நோம் (Norm) என்ற இறைநம்பிக்கையாளர், டேவிட்டின் நெஞ்சுப்பகுதியில் தன் கையை வைத்து, “டேவிட்! இயேசுவின் பெயரால் மூச்சுவிடு” என்று உரக்கச் சொன்னார். அவர் இவ்வாறு சொன்ன மறுநொடி, பேச்சு மூச்சற்றவனாய்க் கிடந்த டேவிட், எழுந்து உட்காரத் தொடங்கினான். இதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த எல்லாரும் வியந்துபோனார்கள்.
ஆம், இயேசுவின் திருப்பெயர் சாதாரண ஒரு பெயர் அல்ல; வல்லமையுள்ள ஒரு திருப்பெயர். அப்படிப்பட்ட பெயரை நம்பிக்கையோடு நாம் சொல்லி மன்றாடினோம் எனில், நம்முடைய மன்றாட்டு கேட்கப்படும் என்பதை இந்த நிகழ்வு மிக அருமையாக எடுத்துச் சொல்கின்றது. நற்செய்தியில் இயேசு, “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கும் வல்லமை
இயேசு தன்னுடைய சீடர்களிடம் தொடர்ந்து பேசும்பொழுது, “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை அவர் உங்களுக்குத் தருவார்” என்கின்றார். இயேசுவின் பெயரைச் சொல்லி மன்றாடுவதால், தந்தை எப்படிப் பதில் தருகின்றார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கும் வல்லமையைக் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
திருத்தூதர் பணிகள் நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம்: “நாம் மீட்பு பெறுமாறு வானத்தின் கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” (திப 4: 12). புனித பவுல், “இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2: 10) என்கின்றார். அப்படியெனில், நாம் மீட்பு பெறுவதற்குக் காரணமாகவும் எல்லாரும் மண்டிடும் திருப்பெயரான இயேசுவின் திருப்பெயரின் வல்லமையை உணர்ந்து, அப்பெயரால் தந்தையிடம் வேண்டுவது மிகவும் இன்றியமையாத இருக்கின்றது.
இயேசுவின் பெயரால் கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள்
இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கும் வல்லமையை உணர்ந்தவர்களாய், அவருடைய பெயரால் தந்தையிடம் கேட்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி, பேதுரு கால் ஊனமுற்றவரை நலப்படுத்தியதைப் பற்றித் திருத்தூதர் பணிகள் நூல் மூன்றாம் அதிகாரம் மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது.
இங்கு நமக்கு ஒரு கேள்வி எழலாம். அது என்னவெனில், இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி நாம் தந்தைக் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் தந்திடுவா…? என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்கான பதிலை, யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் மிக அழகாக எடுத்துச் சொல்கின்றார் அங்கு யோவான் சொல்லக்கூடிய பதில், “நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின் அவர் நமக்குச் செவிசாய்க்கின்றார்” (1 யோவா 5: 14) என்கின்றார் என்பதாகும். அவ்வாறெனில், நாம் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடுகின்ற எல்லா மன்றாட்டுகளும் இறைவனால் கேட்கப்படுவதில்லை; அவருடைய திருவுளத்திற்கு ஏற்ப எது அமைந்திருக்கின்றதோ, அதுவே கேட்கப்படுகின்றது என்பது உறுதியாகின்றது.
அடுத்ததாக, நற்செய்தியில் இயேசு சொல்லும் மிக முக்கியமான ஒரு செய்தி, நாம் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி தந்தைக் கடவுளின் மன்றாடி, அதைப் பெற்றுக்கொள்கின்றபொழுது, நம்முடைய மகிழ்ச்சி நிறைவடையும் என்பதாகும். ஆகையால், நாம் நம்முடைய மகிழ்ச்சி நிறைவடைவதற்கு, தந்தையிடம் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாட முயற்சி செய்யவேண்டும். இத்தகையதொரு செயலை நாம் நம்முடைய வாழ்வில் செய்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்’ (எசா 12: 4) என்பார் இறைவாக்கினர் எசாயா. ஆகையால், நாம் வல்லமையுள்ள இயேசுவின் திருப்பெயரை இறைவனிடம் நம்பிக்கையோடு சொல்லி மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.