இறைமக்களுடன் துணைவந்த மேய்ப்பர், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்துவை ஒவ்வொருநாளும் எங்கள் இல்லங்களுக்குக் கொணர்ந்த உங்களுக்கு நன்றி” “சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து ஒளிபரப்பான திருப்பலிகளுக்காக நன்றி. அவை எங்களை நல்ல உணர்வுகளால் நிறைத்தன”, “எங்களை தனிமையில் விடாமல் துணை வந்தததற்காக நன்றி” என்ற சொற்கள் அடங்கிய நன்றி செய்திகள் திருத்தந்தையை வந்தடைந்த வண்ணம் உள்ளன என்று, வத்திக்கான் செய்தித்துறையின் பொறுப்பாளர்களில் ஒருவரான மாஸ்ஸிமில்லியானோ மெனிக்கெத்தி (Massimiliano Menichetti) அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், ஒவ்வொரு நாளும், காலை 7 மணிக்கு நிறைவேற்றிய திருப்பலிகள், மார்ச் 9ம் தேதி திங்கள் முதல் நேரடி ஒளிபரப்பாக, உலகெங்கும், மக்களை சென்றடைந்தன.

மே 18ம் தேதி, கடந்த திங்களன்று, இத்தாலியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் மக்களின் பங்கேற்புடன் திருப்பலிகள் நிறைவேற்றும் அனுமதியை அரசு வழங்கியதையடுத்து, மக்கள் தங்கள் பங்கு ஆலயங்களில் நடைபெறும் திருப்பலிகளில் பங்கேற்கவேண்டும் என்ற கருத்துடன், சாந்தா மார்த்தா இல்லத் திருப்பலிகளின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்திருந்தார்.

மார்ச் 9ம் தேதி முதல், மே 18ம் தேதி முடிய ஒவ்வொருநாளும் திருத்தந்தை நிறைவேற்றி வந்த திருப்பலிகளிலும், குறிப்பாக, புனித வாரத்தில் அவர் நிறைவேற்றிய பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகளிலும் ஊடகங்கள் வழியே பங்கேற்றுவந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகள் திருத்தந்தைக்கு அனுப்பியிருந்த நன்றி செய்திகளை, வத்திக்கான் செய்தித்துறை தொகுத்து, சமூக வலைத்தளங்கள் வழியே பகிர்ந்துள்ளது.

மார்ச் 9ம் தேதி, திருப்பலியின் துவக்கத்தில், கொரோனா தொற்றுக்கிருமியினால் பாதிக்கப்பட்டோருக்கும், அவர்களுக்காகப் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் ஆகியோருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்றையத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 70 நாள்களாக ஒவ்வொரு நாள் திருப்பலியையும் ஒவ்வொரு கருத்துக்காக ஒப்புக்கொடுத்து வந்த திருத்தந்தைக்கு உலகின் ஐந்து கண்டங்களிலிருந்தும் நன்றி கூறி மக்கள் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

அத்துடன், ஒவ்வொரு நாளும் திருவிருந்துக்குப் பின், ஆன்மீக முறையில் திருவிருந்தில் பங்கேற்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய  செபத்திற்கும், திருப்பலியின் இறுதியில் நடைபெற்ற பத்து நிமிட திருநற்கருணை ஆராதனை, திருநற்கருணை ஆசீர் ஆகியவற்றையும் சிறப்பாக நினைவுகூர்ந்து மக்கள் தங்கள் நன்றியை வெளியிட்டுள்ளனர்.

Comments are closed.