நெருக்கடியையும் தாண்டி வாழ்வது
சிலுவையில், அனைவராலும் கைவிடப்பட்டதைப்போன்ற ஒரு சூழலில் இயேசு இறந்தார் என்ற காரணத்தால், இந்த தொற்றுநோய் பரவலின் காரணமாக இறந்தோர் யாரும் மறக்கப்பட்டவர்கள் அல்ல என்று, இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி (Federico Lombardi) அவர்கள், ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.
“ஆண்டவரில் இறப்பது”
“நெருக்கடி நிலையின் நாளேடு” (Diary of the crisis) அல்லது, “நெருக்கடியையும் தாண்டி வாழ்வது” (Living beyond the Crisis) என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரை, வத்திக்கான் செய்தித்துறையுடன் பகிர்ந்துகொண்டு வரும் அருள்பணி லொம்பார்தி அவர்கள், இத்தொடரின் அடுத்த பதிவாக, “ஆண்டவரில் இறப்பது” (To Die in the Lord) என்ற தலைப்பில் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளார்.
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், இறந்தோரை, குறிப்பாக, மறைசாட்சிகளாக இறந்தோரை நினைவுகூர்வது என்ற பழக்கத்தை, ஆழ்ந்த ஆன்மீக பாரம்பரியமாக விட்டுச் சென்றுள்ளார் என்பதை, அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறையில் தோய்ந்திருந்த 20ம் நூற்றாண்டு
வன்முறையில் தோய்ந்திருந்த இருபதாம் நூற்றாண்டில் இறந்த பல்லாயிரம் மறைசாட்சிகள், மிகக் கொடூரமான முறைகளில், யாரும் அணுக இயலாத முறையில் கொல்லப்பட்டனர் என்பதை தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அருள்பணி லொம்பார்தி அவர்கள், தற்போதைய கோவிட் 19 கொள்ளைநோயால் இறந்தோரில் பலர், அத்தகையைச் சூழலில், இறந்துள்ளனர் என்று கூறினார்.
இத்தாலியின் லொம்பார்தி பகுதியில், பல நாள்கள், ஆலயங்களில் இறந்தோரின் சவப்பெட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததும், நியூ யார்க் நகரில் தோண்டப்பட்டிருந்த ஒரு பெரிய சவக்குழியில் சவப்பெட்டிகள் பல வைக்கப்பட்டிருந்ததும் நம்மால் மறக்க இயலாத படங்களாக மனதில் பதிந்துள்ளன என்பதை, அருள்பணி லொம்பார்தி அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்விதத் துணையும் இன்றி புதைக்கப்பட்ட இந்த மனிதர்களின் நிலை, நம்மிடையே நிலவவேண்டிய அருகாமை, பாசம், பரிவு ஆகியவற்றை மீண்டும் வலியுறுத்துகின்றன என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் இக்கட்டுரையில் கூறியுள்ளார்.
அண்மையில் நாம் கொண்டாடிய ஆண்டவரின் பாடுகள் உயிர்ப்பு ஆகிய நிகழ்வுகள், மனிதரால் கைவிடப்பட்ட நிலையில் இயேசு அடைந்த மரணத்தையும், சாவை வென்று உயிர்த்தெழுந்த நம்பிக்கையையும் நமக்குத் தருகின்றது என்று இக்கட்டுரையின் இறுதியில் அருள்பணி லொம்பார்தி கூறியுள்ளார்.
Comments are closed.