நற்செய்தி வாசக மறையுரை (மே 06)

பாஸ்கா காலம் நான்காம் வாரம் புதன்கிழமை
யோவான் 12: 44-50
தன்னிடம் நம்பிக்கை கொள்வோருக்கு ஒளியாக வரும் இயேசு
நிகழ்வு
ஒருமுறை நியூயார்க்கைச் சார்ந்த, நற்செய்தி அறிவிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இந்தியாவிற்கு வந்து நற்செய்தி அறிவிக்கலாம் என்று திட்டம் தீட்டினார்கள். அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில், அந்த பத்துப் பேரும் நியூயார்க்கிலிருந்து இந்தியாவிற்குக் கப்பலில் கிளம்பி வந்தார்கள்.
கப்பல் அட்லாண்டிக் கடலில் வந்துகொண்டிருந்தபொழுது, அந்தக் கூட்டத்தின் தலைவருக்கு லேசாகப் பதற்றம் தொற்றிக்கொண்டது. ‘இந்தியாவிற்குச் சென்று எங்கு தங்குவது…? நற்செய்திப் பணி செய்கின்றபொழுது பணத்திற்கு என்ன செய்வது…? மக்கள் எங்களை ஏற்றுக்கொள்வாரா…?’ இதுமாதிரியான எண்ணங்கள் அவரைப் பதற்றமடையச் செய்தன. இந்த எண்ணங்களோடு அவர் இறைவனிடம் நம்பிக்கையோடு வேண்டிவிட்டு அப்படியே தூங்கிவிட்டார்.
அப்பொழுது அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், அவர் ஓர் ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்தார். ஆறு சற்று ஆழமாக இருந்ததால், அதை எப்படிக் கடப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருவர், படகுடன் அவருக்கு முன் வந்து நின்றார். பின்னர் அந்தப் படகோட்டி அவரைப் படகில் ஏற்றுக்கொண்டு மறுகரையில் இறக்கிவிட்டார்.
கனவில் இப்படியொரு காட்சியைக் கண்டதும், அந்தக் நற்செய்திப் பணியாளர்களுடைய கூட்டத்தின் தலைவர், ‘ஆண்டவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். அப்படியிருக்கின்றபொழுது எதற்கு நாம் எதைப் பற்றியும் கவலைப்படவேண்டும்!’ என்று எண்ணிக்கொண்டு, ஆண்டவர்மீது முழு நம்பிக்கை வைத்துப் பயணத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பெனாரசிற்கு வந்து, அவரோடு வந்தவர்களோடு சேர்ந்து, ஆண்டவருடைய நற்செய்தியை மிகுந்த உற்சாகத்தோடு அறிவித்தார்கள்.
திருமதி. டபிள்யூ. கே. நோர்டன் எழுதிய “My life of the Pilgrim’s Mission, Benares, Inida” என்ற நூலில் இடம்பெறும் இந்த நிகழ்வு, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோருக்கு ஆண்டவர் வழியாகவும் ஒளியாகவும் அடைக்கலமுமாகவும் வருகின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோரை, அவர் ஒளியாக இருந்து, இருளில் இடராதபடி வழிநடத்துகின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்பிக்கையாளர்களுக்கு ஒளியாக வந்த இயேசு
நற்செய்தியில் இயேசு, தன்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வதன் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றார். யோவான் நற்செய்தின் இந்தப் பகுதியோடு (யோவா 12: 44-50) இயேசு, பொதுவிடத்தில் போதிப்பது நிறைவுபெறுகின்றது. இதன்பிறகு அவர் தன்னுடைய சீடர்களுக்குத்தான் போதிக்கின்றார். இப்படிப் பொதுஇடத்தில் இயேசு போதிக்கும் கடைசிப் போதனை, அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது.
இயேசு மக்களிடம், என்மீது நம்பிக்கை கொள்பவர் என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கின்றார் என்று சொல்வதும், என்னைக் காண்பவர் என்னை அனுப்பியவரையே காண்கின்றார் என்று சொல்வதும், ‘என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்’ (யோவா 14: 9-11) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. மேலும் இயேசு தொடர்ந்து சொல்லக்கூடிய, “என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்” என்ற வார்த்தைகள், “உலகின் ஒளி நானே” (யோவா 8: 12) என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன.
ஆம், இயேசு இந்த உலகிற்கு ஒளியாக வந்தார். அப்படிப்பட்டவரிடம் நம்பிக்கை கொள்ளும் யாரும் இருளில் இடறி விழமாட்டார் என்பது உறுதி.
தீர்ப்பளிக்க அல்ல, மீட்பளிக்க வந்த இயேசு
தன்னிடம் நம்பிக்கை கொள்வோருக்குக் ஒளியாக வந்தேன் என்று சொல்லும் இயேசு, தொடர்ந்து, உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; அதை மீட்கவே வந்தேன் என்று கூறுகின்றார். ஆம். கடவுளின் திருவுளம் எல்லாரும் மீட்படைய வேண்டும் என்பதுதான் (1திமொ 2:4). அதற்காக, அவர், தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். இயேசுவும் கடவுளின் மீட்புத் திட்டத்தினை செவ்வனே செய்து முடித்தார். அப்படியெனில், தண்டனைத் தீர்ப்பு வழங்குவது எது எனக் கேள்வி எழலாம். அது வேறொன்றும் இல்லை. இயேசுவின் வார்த்தைதான் தண்டனைத் தீர்ப்பு அளிக்கும்.
உலகினர் வாழ்வு பெறுவதற்காகக் கொடுக்கப்பட்ட இயேசுவின் வார்த்தையை நம்பாவிடில், அதுதானே அதனை நம்பாதவருக்குத் தீர்ப்பளிக்கும். ஆகையால், நமக்கு நிலைவாழ்வு அளிக்கும் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, அவருடைய வழியில் நடக்கக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக நிலைவாழ்வைப் பெறுவோம்.
சிந்தனை
‘நம்பிக்கை என்பது ஆதாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆதாரமோ மனிதனுக்கே உரியது. ஆனால், நம்பிக்கை என்பது கடவுளின் கொடை’ என்பார் பிரான்சு நாட்டு மெய்யியலாரான ப்ளேஸ் பாஸ்கல் (1623-1662). ஆகையால், நாம் கடவுள் மனிதருக்குக் கொடுத்திருக்கின்ற கொடையாகிய நம்பிக்கையை, அந்தக் கடவுளின்மீது கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.