மே 5 : நற்செய்தி வாசகம்

நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30
அக்காலத்தில்
எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா.
அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————–
யோவான் 10: 22-30
நல்ல ஆயனின் ஆடுகள், அவருடைய குரலுக்குச் செவிசாய்க்கும்
நிகழ்வு
ஒருகாலத்தில் அமெரிக்கப் பேஸ்பால் அணியில் நட்சத்திர விளையாட்டு வீரராக இருந்து, பின் ஆண்டவருடைய வார்த்தையை மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடியவராக மாறியவர் பில்லி சண்டே எனப்படும் வில்லியம் ஆஸ்லே சண்டே (1862-1935).
இவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட புதிதில், இவரிடம் வந்த ஒருவர், “வில்லியம்! நான் சொல்லக்கூடிய ஒரு முக்கியமான செய்தியை உன்னுடைய வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடித்து வந்தால், நீ இயேசுவின் உண்மையான சீடராய் இருப்பாய்” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு, அந்த மனிதர் பில்லி சண்டேயிடம் தொடர்ந்து பேசினார்: “ஒவ்வொரு நாளும் முதல் பதினைந்து வினாடிகள், ஆண்டவர் உன்னோடு பேசுவதைக் கேள்; அதற்கடுத்த பதினைந்து வினாடிகள் ஆண்டவரோடு நீ பேசு. பின்னர் அந்த நாளில் ஒரு பதினைந்து வினாடிகள் ஒதுக்கி, ஆண்டவர் உன்னோடு பேசியதை யாராவது ஒருவரிடம் எடுத்துச் சொல். இப்படிச் செய்தால் நீ இயேசுவின் உண்மையான சீடனாய் இருப்பாய்.”
இதற்குப் பின்பு பில்லி சண்டே, அந்த மனிதர் தன்னிடம் சொன்னது போன்று, ஒவ்வொருநாளும் படுக்கையிலிருந்து எழுந்ததும், முதல் பதினைந்து வினாடிகளை ஆண்டவர் தன்னிடம் என்ன பேசுகின்றார் என்பதை அமைதியான மனநிலையோடு கேட்டார். அதற்கு அடுத்த பதினைந்து வினாடிகளை ஆண்டவரோடு பேசுவதற்கு அவர் செலவழித்தார். பின்னர் அந்த நாளில் ஒரு பதினைந்து வினாடிகளை ஒதுக்கி, ஆண்டவர் தன்னோடு பேசியதை மற்றவருக்கு அறிவித்தார். இவ்வாறு அவர் இயேசுவின் உண்மையான சீடராக மாறியதோடு மட்டுமல்லாமல், மிகச்சிறந்த நற்செய்திப் பணியாளராக மாறினார்.
ஆம், பில்லி சண்டே ஆண்டவருடைய குரலைக் கேட்டு, அவருடைய உண்மையான சீடராக அவருடைய மந்தையைச் சார்ந்த ஒருவராக விளங்கினார். இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவின் மந்தையைச் சார்ந்தவர், அவருடைய குரலுக்குச் செவிகொடுக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தான் மெசியா என்று இயேசு வெளிப்படையாகச் சொல்லவில்லையா?
யோவான் எழுதிய நற்செயதி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், எருசலேமில், கோயில் அர்ப்பண விழா நடந்து கொண்டிருக்கையில், அங்கு வருகின்ற இயேசுவிடம் யூதர்கள், “…நீர் மெசியாவானால், அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று பேசுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசுவிடம் இவ்வாறு சொன்ன யூத்ரகளுக்கு இயேசு என்ன பதில் சொன்னார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பு, யூதர்கள் கொண்டாடிய கோயில் அர்ப்பண விழாவைக் குறித்துச் சிறிது தெரிந்துகொள்வோம்.
யூதர்கள் கொண்டாடிய கோயில் அர்ப்பண விழா என்பது தொடக்கத்திலிருந்து கொண்டாடப்பட்ட விழா அல்ல; யூதா மக்கபேயரின் காலத்திலிருந்து, அதாவது கி.மு. 166 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வந்தது. முன்னதாக அந்தியோக்கு எப்பிபான் என்ற மன்னனால், எருசலேம் திருக்கோயிலின் திருப்பீடம் பன்றி இறைச்சியால் தீட்டுப்படுத்தப்பட்டது (1மக் 4) அதைத்தான் யூதா மக்கபேயர் தூய்மைப்படுத்திக் கோயில் அர்ப்பண விழா கொண்டாடினார் (2மக் 10: 1-8). அதிலிருந்துதான் கோயில் அர்ப்பண விழா கொண்டாடப்பட்டு வந்தது. இப்படிக் கொண்டாடப்பட்ட கோயில் அர்ப்பண விழாவிற்கு இயேசு வருகையில்தான் யூதர்கள் அவரிடம் மேலே கேட்கப்பட்ட கேள்வியைக் கேட்டார்கள்.
இப்பொழுது நமக்கு, இயேசு தன்னை யூதர்களுக்கு வெளிப்படுத்தவில்லையா? என்ற கேள்வி எழலாம். இயேசு தன்னுடைய வார்த்தையின் வழியாகவும் (யோவா 5: 17ff, 6:32) செயல் வழியாகவும் தான் மெசியா என்று மக்களுக்கு அறிவித்தார். யூதர்கள்தான் அவர் மெசியா என்பதை உணரவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தொடர்ந்து சிந்திப்போம்.
இயேசுவின் ஆடுகள் அவருடைய குரலுக்குச் செவிசாய்க்கும்
யூதர்கள், இயேசுவை மெசியா என்று அறிய முடியாமல் போனதற்குக் காரணம், அவர்கள் இயேசுவின் மந்தையாக இல்லை என்பதுதான். ஏனென்றால், இயேசுவின் மந்தையைச் சார்ந்த யாரும் அவருடைய குரலுக்குச் செவிகொடுப்பார்கள்; அவரைப் பின்தொடர்வார்கள். இயேசுவின் குரலுக்கு யூதர்கள் செவிகொடுக்காமலும் அவரைப் பின்தொடராமலும் போனதால், அவர்கள் அவருடைய மந்தையைச் சாராதவர்களாகவும் அவரை மெசியா என்று அறிந்துகொள்ளாதவர்களாவும் ஆனார்கள்.
நாம் இயேசுவின் மந்தையாக இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது நமக்கு இப்பொழுது புரிந்திருக்கும். ஆம், நாம் இயேசுவின் மந்தையாக இருப்பதற்கு அவருடைய குரலைக் கேட்டு, அவரைப் பின்தொடர வேண்டும். நாம் இயேசுவின் குரலைக் கேட்டு, அவரைப் பின்தொடர்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘செவிகொடுங்கள்; நான் கூறுவதைக் கேளுங்கள்; செவிசாய்த்து நான் சொல்வதைக் கவனியுங்கள்” (எசா 28: 23) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் நல்ல ஆயனாம் ஆண்டவர் இயேசுவின் குரலுக்குச் செவிசாய்த்து, அவருடைய ஆடுகளாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.