நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 27)
பாஸ்கா காலம் மூன்றாம் வாரம் திங்கட்கிழமை
யோவான் 6: 22-29
நீங்கள் எதற்காக உழைக்கின்றீர்கள்?
நிகழ்வு
ஒரு நகரில் பெரிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவரிடத்தில் ஏராளமான பணியாளர்கள் வேலைபார்த்து வந்தார்கள். ஏறுமுகத்திலேயே சென்றுகொண்டிருந்த இவருடைய தொழில், திடீரென்று இறங்கு முகத்தில் வரத் தொடங்கியது. இவருடைய பணியாளர்கள் எல்லாரும் காரணம் புரியாமல் திகைத்தார்கள். இவரும்கூட குழம்பிப் போனார். இவருடைய நண்பர்கள் எல்லாரும் தொழில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்துச் சரி செய்தால், தொழில் முன்புபோல் நன்றாக இருக்கும் என்று இவரிடம் ஆலோசனைகளை அள்ளி வீசியபொழுது, இவர் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. மாறாக, இறைவனைத் தேடத் தொடங்கினார்.
ஆம், தொழில் நன்றாகச் சென்றுகொண்டிருந்தபொழுது, இறைவனைத் தேடாத இவர், தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டதும், இறைவனைத் தேடத் தொடங்கினார்; இறைவனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வாழத் தொடங்கினார். அப்பொழுதுதான் இவருக்கு, ‘தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் காரணம் தான் கடவுளைத் தேடாமல் வாழ்ந்து வந்ததுதான்’ என்ற உண்மை புரிந்தது. மேலும் பணத்தைவிடவும் கடவுள் மிகப்பெரியவர் என்ற உண்மை இவருக்குப் புரிந்தது. இதன் பிறகு இவர் கடவுளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, தொழிலிலும் கவனம் செலுத்தி வந்தார். இப்பொழுது இவருடைய தொழில் முன்பை விட மிகச் சிறப்பாக இருந்தது.
இந்த நிகழ்வில் வருகின்ற தொழிலதிபரைப் போன்றுதான் பலரும் பணம், பொருள்… என்று அழிந்துபோகின்றவற்றிற்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் அழியா உணவை, அழியா வாழ்வை ஆண்டவர் இயேசுவால் மட்டுமே தரமுடியும். அத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
உணவுக்காக இயேசுவைத் தேடிவந்த மக்கள்
நற்செய்தியில், மக்கள் இயேசுவைத் தேடி அவர் இருந்த கப்பர்நாகுமிற்கு வருகின்றார்கள். ‘மக்கள் இயேசுவைத் தேடி வந்தது நல்லதொரு செயல்தானே…?’ என்று நாம் நினைக்கலாம். அவர்களுடைய செயல் நல்லதாக இருந்தாலும், அவருடைய எண்ணம் தவறாக இருந்தது. அதனாலேயே இயேசு அவர்களைக் கண்டிக்கின்றார்.
இந்த நிகழ்விற்கு முன்பாக இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீண்டுகளையும் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருந்தார் (யோவா 6: 1-15). இதனால் மக்களிடத்தில், ‘இயேசுவிடம் சென்றால், வயிறார உணவு கிடைக்கும்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவேதான் அவர்கள் இயேசுவைத் தேடி வந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசு அவர்களைப் பார்த்து, “அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியா உணவுக்காகவே உழையுங்கள்” என்று கூறுகின்றார்.
இங்கு, மக்களுடைய செயல் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், இயேசுவைத் தேடவேண்டும். அது முதன்மையானது; இன்றியமையாததும்கூட; ஆனால், அவரை நல்ல எண்ணத்தோடு தேடவேண்டும். வயிற்றை நிரம்பிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவோ, ஆதாயம் தேடவேண்டும் என்பதற்காகவோ இயேசுவைத் தேடக்கூடாது. அப்படித் தேடினால், எந்தவொரு பயனும் இல்லை.
அழியா உணவுக்காக உழையுங்கள்
தன்னிடம் வந்த மக்களிடம், அழிந்துபோகும் உணவை அல்ல, அழியாத உணவைத் தேடவேண்டும் என்று சொன்ன இயேசு, “அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்” என்று கூறுகின்றார். ஆம், இயேசு ஒருவரால் மட்டுமே அழியா உணவை அல்லது அழியா வாழ்வைத் தரமுடியும். அத்தகைய உணவை அல்லது வாழ்வைப் பெற்றுக்கொள்ள ஒவ்வொருவரும், கடவுள் அனுப்பியவரை நம்பவேண்டும். இதுதான் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய தலையாய செயலாக இருக்கின்றது.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இயேசுவைத் தேடிச் சென்றார்கள். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கையோடும் நல்ல எண்ணத்தோடும் தேடிச் சென்றார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இன்றைக்கும் பலர் இயேசுவைத் தேடிச் செல்கின்றார்கள். ஆனால், நம்பிக்கையோடு தேடிச் சென்று, அந்த நம்பிக்கைக்குக் ஏற்ப வாழ்கின்றார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். அப்படியானால், நாம் இயேசு அளிக்கக்கூடிய அழியா வாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவேண்டும். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப நம்முடைய வாழ்வு இருக்கவேண்டும். அதுதான் நாம் அழியாத வாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கு வழி வகுக்கும்.
நாம், இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கின்றோமா? அந்த நம்பிக்கைக்கு ஏற்ப நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
‘நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாகத் தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர, வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?’ (மீக் 6:8) என்பார் மீக்கா இறைவாக்கினர். ஆகையால், நாம் ஆண்டவர் இயேசு அளிக்கின்ற அழியா வாழ்வினைப் பெற்றுக்கொள்ள, அவர் மீது நம்பிக்கை கொண்டு நேர்மையோடும் இரக்கத்தோடும் தாழ்சியோடும் வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.