நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 25)

பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் சனிக்கிழமை
யோவான் 6: 16-21
ஆண்டவர் இங்கே? அச்சம் எங்கே?
நிகழ்வு
வாழ்க்கையே வெறுத்துப்போன இளைஞன் ஒருவன், கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தன். அவன் அவ்வாறு கடலில் விழுந்து தற்கொலை செய்யும் நேரத்தில் வழிபோக்கர் ஒருவர் அந்த வழியாக வந்தார். அவர் இளைஞனைப் பார்த்துவிட்டு, ‘கடலில் இவன் மகிழ்ச்சியாக நீந்திக் குளிக்கின்றான் போல’ என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாகச் சொன்னார்.
அப்பொழுது அந்த இளைஞனிடமிருந்து, “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்ற குரல் கேட்டதும், அவர் திடுக்கிட்டார். உடனே அவர் வேறு எதையும் யோசிக்காமல், கடலில் விழுந்து, அந்த இளைஞனைக் காப்பாற்றி, கரையில் விட்டார். அவனோ அந்த வழிபோக்கரைப் பார்த்து, “என்னை எதற்கு நீங்கள் காப்பாற்றிக் கரையில் விட்டீர்கள். நான் தற்கொலை செய்துகொள்வதற்காகக் கடலில் குதித்தேன்” என்று கத்தினான்.
வழிப்போக்கருக்கும் ஒன்றும் புரியவில்லை. “என்ன! நீ கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தாயா…? பிறகு எதற்கு, ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று கத்தினாய்?” என்றார். அதற்கு அந்த இளைஞன், “தற்கொலை செய்துகொள்ளும் போது எனக்குச் சாவைக் குறித்த அச்சம் வந்துவிட்டது. அதனால்தான் அப்படிக் கத்தினேன்” என்றான். அந்த இளைஞனைக் காற்றிய வழிபோக்கருக்கு ஏதோபோல் ஆகிவிட்டது. ‘இப்படியும் ஒரு பிறவியா?’ என்று தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துசென்றார்.
தற்கொலை செய்துகொள்ள முயன்றவனுக்குச் சாவைக் குறித்த அச்சம் வந்தது வேடிக்கையாக இருந்தாலும், இன்றைக்குப் பலர் எதற்கெடுத்தாலும் அஞ்சி அஞ்சி வாழ்வது வியப்பாக இருக்கின்றது. நற்செய்தியில் கடலில் நடந்துவருகின்ற இயேசுவைக் கண்ட சீடர்கள் அஞ்சுகின்றார்கள். அப்பொழுது அவர்களிடம், “அஞ்சாதீர்கள்” என்று சொல்லி அவர்களுக்குத் திடமளிக்கின்றார். யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அஞ்சி வாழ்ந்த சீடர்கள்
இயேசு, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐயாயிரம் பேருக்குக் உணவளித்ததைத் தொடர்ந்து, மக்கள், ‘இவர்தான் உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர்’ (இச 18: 15-18) என்று எண்ணிக்கொண்டு, அவரைப் பிடித்து அரசராக்க முயன்றார்கள். தன்னை ‘அரசியல் மெசியா’ என்று நினைத்துகொண்டுதான் மக்கள் இவ்வாறு செய்கின்றார்கள் என்று எண்ணிக்கொண்டு, இயேசு அவர்களிடம் விலகித் தனியாய் மலைக்குச் செல்கின்றார். மறுபக்கமோ இயேசுவின் சீடர்கள் கரைக்கு வந்து, மறுகரையிலுள்ள கப்பர்நாகும் நோக்கிப் படகில் செல்கின்றார்கள்.
சீடர்கள் பயணம் செய்த கலிலேயாக் கடலில் அடிக்கடி பெருங்காற்று வீசும்; புயல் அடிக்கும். இயேசுவின் சீடர்கள் அவரை மலையில் விட்டுவிட்டு, கர்ப்பர்நாகும் நோக்கி வந்தபொழுதும் பெருங்காற்று வீசுகின்றது; கடல் பொங்கி எழுகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு கடல்மீது நடந்து வருவதைப் பார்த்துவிட்டு, பேய் என்று சீடர்கள் அஞ்சுகின்றார்கள். இயேசுவின் சீடர்களில் ஏழு பேர் மீனவர்கள் (யோவா 21: 1-2). அப்படியிருந்தும் பெருங்காற்று வீசி, கடல் பொங்கி எழுந்த வேளையில், கடல்மீது இயேசு நடந்து வருவதைக் கண்டு அஞ்சுவது வியப்பாக இருக்கின்றது.
இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் நாமும் பல நேரங்களில் இறைவனின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் உணராமல் அஞ்சுகின்றோம். இயேசுவின் சீடர்களுக்கு எப்படி தங்களுடைய தலைவர் தங்களுக்குத் துணையாய் வருவார் என்ற நம்பிக்கை இல்லையோ, அப்படி நாமும் இயேசு நமக்குத் துணையாய் இருக்கின்றார் என்பதில் நம்பிக்கை வைக்காமல் அஞ்சி வாழ்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்டவர் நமக்கு எப்படித் திடமளிக்கின்றார் என்பதைக் குறித்து சிந்திப்போம்.
அஞ்சாதீர்கள் என்று சொல்லித் திடமளிக்கும் இயேசு
இயேசுவின் சீடர்கள் அவரைப் பேய் என நினைத்து அஞ்சுகையில், இயேசு அவர்களிடம், “நான்தான், அஞ்சாதீர்கள்” என்று சொல்லி அவர்களுக்குத் திடமளிக்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதும், பேதுரு, “நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” (மத் 14: 28) என்கின்றார். யோவான் நற்செய்தியில் இந்தக் குறிப்பு இல்லாவிட்டாலும், மத்தேயு நற்செய்தியில் இது இருக்கும். இது ஒரு பக்கம் இருந்தாலும், சீடர்களின் அச்சத்திற்குக் காரணம் என்னவென்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ‘அன்பில் அச்சத்திற்கு இடமில்லை’ (1 யோவா 4: 18) என்பார் புனித யோவான். சீடர்களுக்கு இயேசுவின் மேல் உண்மையான அன்பிருந்தால் அல்லது அவர்மீது நம்பிக்கை இருந்தாலும், அவர்கள் இப்படியெல்லாம் அஞ்சியிருக்கமாட்டார்கள்.
நாமும்கூட பலநேரங்களில் இயேசுவிடம் உண்மையான அன்பில்லாமலும் நம்பிக்கையில்லாமலும் அஞ்சி அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆகையால், நாம் இயேசுவிடம் ஆழமான அன்பும் நம்பிக்கையும் கொள்வோம். அதன்மூலம் அச்சத்திலிருந்து வெளிவருவோம்.
சிந்தனை
‘அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்’ (எசா 41: 13) என்கிறார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவர் நமக்குத் துணையாக இருக்கின்றார் என்பதில் நம்பிக்கை வைத்து, அச்சத்திலிருந்து விலகி, ஆண்டவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.