திங்கட்கிழமை. நற்செய்தி வாசகம்.

என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 8-15
அக்காலத்தில்,
கல்லறையில் இயேசுவைக் காணவந்த பெண்கள் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய், அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.
திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரைஅணுகி, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், ‘‘அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.
அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து, அப்படைவீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, ‘‘ ‘நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உட லைத் திருடிச் சென்றுவிட்டனர்’ எனச் சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக்கொள்வோம்” என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“செல்லுங்கள்; சொல்லுங்கள்”
ஆப்பிரிக்கா மக்களிடம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியைக் கொண்டு சென்ற மிகவும் முக்கியமான ஒரு மறைப்பணியாளர் ஸ்டீபன் ஆல்போர்ட் (Stephen Olford 1918- 2004). இவர் இளைஞனாக இருந்தபொழுது, இவருடைய பெற்றோர் இவரிடம் மறைப்பணியாளராக மாறவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள். இவருக்கோ அதில் சிறிதளவுகூட நாட்டமில்லை. மாறாக, கார் ரேசில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற விருப்பம் இவருக்கு இருந்தது. அதற்காகவே இவர் கடுமையாக உழைத்தார்.
ஒருநாள் இவர் ஒரு கார் பந்தயத்தில் கலந்துகொண்டு, வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு போகும்பொழுது, இவர் ஓட்டிச் சென்ற வண்டி, இன்னொரு வண்டியின்மீது மோதி, சுக்குநூறாக உடைந்தது; இவரோ வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட இவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், “இவருக்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் தருகின்றோம். இதில் நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கின்றோம். இவர் உயிர்பிழைத்தால் நல்லது; இல்லையென்றால் எங்களை ஒன்றும் சொல்லாதீர்கள்” என்று நிபந்தனை விதித்துவிட்டு, சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.
இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஸ்டீபன் ஆல்போர்டின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, உயிர்பிழைத்துக் கொண்டார். அப்பொழுது இவருடைய தந்தை இவரிடம், “கடவுள் உனக்கு ஒரு வாழ்க்கையைத்தான் கொடுத்திருக்கின்றார். அந்த வாழ்க்கையை நீ கடவுளுக்குக் அர்ப்பணித்து வாழ்வதுதான் சிறந்தது” என்றார். இவ்வார்த்தைகளால் தொடப்பட்ட ஸ்டீபன் ஆல்போர்ட் தன்னுடைய வாழ்க்கையை இறைப்பணிக்காக அர்ப்பணித்து, ஆப்பிரிக்கக் காண்டத்திற்குச் சென்று, அங்கிருந்த மக்களுக்கு ஆண்டவருடைய நற்செய்தியை அறிவித்துப் பலரையும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளச் செய்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஸ்டீபன் ஆல்போர்டிற்கு, எப்படி இவருடைய பெற்றோரால் ஆண்டவருடைய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டதோ, அப்படி, இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு தன் சீடர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பிக்கின்றார். இந்தக் கட்டளையை நாம் எப்படி நம்முடைய வாழ்வில் கடைப்பிடிக்கப் போகிறோம் என்பதைக் குறித்து இப்பொழுது சிந்திப்போம்.
சீடர்களுக்குத் தோன்றிய உயிர்த்த ஆண்டவர் இயேசு
நற்செய்தியில், இறந்த இயேசுவின் உடலுக்கு நறுமணத் தைலம் பூசுவதற்காக வரும் மகதலா மரியாவும் யாக்கோபின் தாய் மரியாவும் சலோமியும் (மாற் 16: 1) கல்லறையில் இயேசுவின் உடல் இல்லாததைக் கண்டு, அச்சத்தோடும் பெருமகிழ்ச்சியோடும் திரும்பிச் செல்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில் உயிர்த்த ஆண்டவர் இயேசு அவர்கள் முன் தோன்றி, வாழ்த்திவிட்டு, “அஞ்சாதீர்கள்” என்கின்றார்.
இயேசு அந்தப் பெண்சீடர்களிடம், “அஞ்சாதீர்கள்” என்று சொன்னது, நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. ஏனென்றால், கல்லறையில் இயேசுவின் உடலைக் காணாது, ‘இயேசுவின் உடலை யாரோ எடுத்துவிட்டார்கள் போலும்’ என்ற அச்சத்தோடுதான் இவர்கள் இருந்தார்கள்; இவர்கள் இயேசு, தான் சொன்னது போன்று உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கக்கூடும். இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசு அவர்களைப் பார்த்து “அஞ்சாதீர்கள்” என்று சொல்கின்றார். பெண்சீடர்கள் அச்சத்தோடு இருந்தபொழுது, அவர்களைப் பார்த்து இயேசு எப்படி “அஞ்சாதீர்கள்” என்று சொன்னாரோ, அப்படி, பல்வேறு காரணங்களால் அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்ற நம்மையையும் பார்த்து அவர் “அஞ்சாதீர்கள்” என்று சொல்கின்றார். ஆகையால், நாம் இயேசு சொல்லக்கூடிய இவ்வாறுதல் அளிக்கின்ற வார்த்தைகளை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, மனஉறுதியோடு வாழ்வது நல்லது.
செல்லவும் சொல்லவும் பணித்த உயிர்த்த ஆண்டவர் இயேசு
அச்சத்தோடு இருந்த பெண் சீடர்களிடம், “அஞ்சாதீர்கள்” என்று சொல்லி திடப்படுத்திய இயேசு, அவர்களுக்கு முக்கியமான ஒரு கட்டளையைத் தருகின்றார். அதுதான், “என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள்…” என்பதாகும். இயேசு சொல்லக்கூடிய இக்கட்டளையை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், செல்லவும் சொல்லவும் என்று சொல்லலாம்.
ஆம், இயேசு தன் சீடர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லியிருந்தார் (மத் 26: 32); அவர்களோ யூதர்களுக்கு அஞ்சி எருசலேமில் இருந்தார்கள் (லூக் 24: 36). இதனால்தான் இயேசு பெண் சீடர்களிடம் அவ்வாறு சொல்கின்றார். பெண் சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தவாறு, மற்ற சீடர்களிடம் சென்று, இயேசுவைக் கண்டதையும் அவர் சொன்னதையும் சொல்கின்றார்கள்.
அன்று இயேசு தன் சீடர்களுக்கு கொடுத்த அழைப்பினைப் போன்றுதான், இன்று நமக்கும் தருகின்றார். நாம் மக்களிடம் சென்று, இயேசுவைப் பற்றி சொல்வோம். அவரது உண்மையான சீடர்களாவோம்.
சிந்தனை.
‘உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்’ (மாற் 16: 15) என்பார் இயேசு. நாம் இயேசுவின் நற்செய்தியைப் படைப்பிற்கெல்லாம் அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.