புனித வியாழன் (ஏப்ரல் 09)

I விடுதலைப் பயணம் 12: 1-8, 11-14
II 1கொரிந்தியர் 11: 23-26
III யோவான் 13: 1-15
போதியுங்கள்_தேவைபட்டால்_வார்த்தையைப்_பயன்படுத்துங்கள்
நிகழ்வு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் தோன்றிய மிகப்பெரிய மறைப்பணியாளர் டாசன் ட்ரோட்மன் (Dawson Trotman) என்பவர். பல நாடுகளுக்குச் சென்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து வந்த இவர், ஒருமுறை தைவானில் உள்ள பழங்குடி மக்கள் நடுவில் நற்செய்தி அறிவிக்கச் சென்றார். இவர் அந்த மக்கள் இருந்த இடத்திற்குச் சென்ற நேரம், மழை பெய்து, வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய் இருந்தன. இதையெல்லாம் பொருள்படுத்தாமல், இவர் அந்த மக்கள் நடுவில் சென்று நற்செய்தி அறிவித்தார். இவர் அங்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும்போது, தன்னோடு ஓர் உள்ளூர்வாசியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.
இவர் அந்தப் பழங்குடி மக்களிடம் நற்செய்தி அறிவித்துவிட்டுச் சென்ற சில நாள்களுக்குப் பின், அவரை அந்த மக்களிடம் கூட்டிவந்த உள்ளூர்வாசியிடம் ஒரு பழங்குடி மனிதர், “டாசன் ட்ரோட்மனைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த உள்ளூர்வாசி சிறிதும் தாமதியாமல், “டாசன் ட்ரோட்மன் மிகவும் தாழ்ச்சியுடையவர்” என்றார். “எதை வைத்து இப்படிச் சொல்கின்றீர்கள்?” என்று அந்த மனிதர் மீண்டுமாகக் கேட்டபொழுது, உள்ளூர்வாசி இவ்வாறு சொன்னார்: “டாசன் ட்ரோட்மன் இங்கு வந்தபொழுது, வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய் இருந்தன. இதனால் அவரும் நானும் அதற்குள்தான் நடந்துவரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சேறும் சகதியுமாய் இருந்த பகுதியைக் கடந்து வந்ததும், ஒரு நீரோடை வந்தது, அதில் அவருடைய காலணிகளை மட்டுமல்ல, என்னுடைய காலணிகளையும் கழுவினார். இத்தனைக்கும் நான் அவரை எவ்வளவோ தடுத்தபோதும்கூட, அவர் என்னுடைய காலணிகளைக் கழுவினார். இதனால்தான் நான் அவரை மிகவும் தாழ்ச்சியுடையவர் என்று சொல்கிறேன்.”
ஒரு சாதாரண மனிதருடைய காலணிகளைக் கழுவுவது எளிதான செயலல்ல; ஆனால் டாசன் ட்ரோட்மன் அத்தகைய செயலைச் செய்தார். இவ்வாறு அவர் தன்னுடைய வாழ்வால் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார். இன்றைய நாளில் இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவியதை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது, இந்த நிகழ்வு இயேசு ஏற்படுத்திய நற்கருணைக்கும் அவர் கொடுத்த அன்புக் கட்டளைக்கும் எப்படி அடிநாதமாக இருக்கின்றது என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இந்த நாள் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் மிக முக்கியமான நாள். ஏனெனில், இந்த நாளில் இயேசு நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்; இந்த நாளில்தான் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவினார்; இந்த நாளில்தான் இயேசு தன் சீடர்களுள் ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டார். இப்படிப்பட்ட நாளில், நாம் நற்செய்தியாகப் படிக்கக்கேட்ட பகுதியில், இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவுவதைக் குறித்துத்தான் வாசிக்கின்றோம். அப்படியானால் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியது எவ்வளவு முக்கியமான ஒரு நிகழ்வு என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளை ஏன் கழுவவேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்குக் நாம், இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கு முன்பு (லூக் 22: 24) இயேசுவின் சீடர்கள் தங்களுக்குள் பெரியவராக எண்ணப்படவேண்டியவர் யார் என்பது பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இதனால் இயேசு, தன்னுடைய சீடர்கள் தனக்குப் பின்பு, தான் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து ஆற்றவேண்டியவர்கள்… அவர்கள் இப்படி யார் பெரியவராக எண்ணப்பட வேண்டும் என்ற விவாதத்தில் ஈடுபடுவது நல்லதில்லை என்பதால், அவர் அவர்களுடைய காலடிகளைக் கழுவி, பெரியவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் கற்பிக்கின்றார்.
அன்று சீடர்கள்தான் தங்களுக்குள் பெரியவராக எண்ணப்படவேண்டியவர் யார் என்று விவாதத்தில் ஈடுபட்டார்கள் என்று இல்லை. இன்றைக்கும் நம்முடைய பங்கு அமைப்பில், குடும்பங்களில் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெறுகின்றது. மிகவும் கேவலான அரசியலும் நடக்கின்றது. இப்படிப்பட்ட வேளைகளில் ஈடுபடுவர், பெரியவர் யார் என்பதற்கு இயேசு அளிக்கின்ற விளக்கத்தினை நன்கு உணரவேண்டும்.
தாழ்ச்சியோடு_சீடர்களின்_காலடிகளைக்_கழுவிய_இயேசு
இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவினார் என்றால், அது எவ்வளவு பெரிய செயல் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். வீட்டிற்கு வருகின்ற விருந்தினருடைய காலடிகளைக் கழுவுகின்ற வழக்கம் யூதர்களின் நடுவில் இருந்தாலும் (லூக் 7: 44), இப்படிப்பட்ட வேலையினை அடிமைகள்தான் செய்துவந்தனர் (1 சாமு 25: 41). இயேசு தன்னை ஓர் அடிமை போன்று பாவித்து அல்லது அடிமையின் வடிவை (பிலி 2: 7) எடுத்துத் தன்னுடைய சீடர்களுடைய காலடிகளைக் கழுவுகின்றார். அப்படியானால் இயேசுவின் உள்ளத்தில் எவ்வளவு தாழ்ச்சி இருந்திருந்தால், அவர் இவ்வளவு இறங்கித் தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியிருப்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளலாம். இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகின்றவர் உங்கள் தொண்டராகவும் உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகின்றவர் உங்கள் பணியாளராகவும் இருக்கட்டும் (மத் 20: 26-28) என்று சொல்லி வந்தார். இங்கு அவர் தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவுவதன் வழியாக, அதை வாழ்ந்து காட்டவும் செய்கின்றார்.
இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவிட்டு, “ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கின்றீர்கள்” என்று கூறுகின்றார். இதுதான் நாம் வாழ்ந்து காட்டவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஆம், ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவவேண்டும் என்றால் அல்லது தொண்டு செய்யவேண்டும் என்றால், அதற்கு அவருடைய உள்ளத்தில் அன்பு இருக்கவேண்டும். இயேசுவுக்குச் சீடர்களிடத்தில் (எல்லாரிடமும்) அன்பு இருந்தது (யோவா 13: 34). அந்த அன்பின் மிகுதியால், அவர் சீடர்களின் காலடிகளைக் கழுவினார். நமக்கு அடுத்தவரிடம் அன்பு இருந்தால்தான், அவர்களுக்குத் தொண்டும் பணிவிடையும் செய்யவேண்டும்.
இப்படி நாம் அடுத்தவருக்குத் தொண்டும் பணிவிடையும் செய்வதற்குத் தேவையான அன்பினை, இயேசு ஏற்படுத்தி, நாம் உட்கொள்கின்ற நற்கருணையால் மட்டும்தான் தரமுடியும். வேறு விதமாகச் சொல்லவேண்டும் என்றால், நாம் உட்கின்ற நற்கருணை நற்கருணை நம்மை அடுத்தவரிடம் அன்பு கொள்ளச் செய்து, அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தூண்டவேண்டும். இல்லையென்றால் நாம் உட்கின்ற நற்கருணையால் பயனொன்றும் இல்லை.
ஆகையால், இயேசு தன் சீடர்கள்மீதுகொண்ட அன்பினால், அடிமை போன்று தன்னைத் தாழ்த்திக்கொண்டு, அவர்களுடைய காலடிகளைக் கழுவியது போன்று, நாமும் உள்ளார்ந்த அன்பினால் நம்மைத் தாழ்த்திக்கொண்டு, அடுத்திருப்பவருக்குத் தொண்டும் பணிவிடையும் செய்யத் தயாராவோம். அதற்கான ஆற்றலை நாம் உட்கொள்ளும் நற்கருணை தரவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.
‘போதியுங்கள். தேவைப்பட்டால் வார்த்தையைப் பயன்படுத்துங்கள்’ (Preach the Gospel at all times and if necessary use words) என்பார் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ். ஆகையால், இயேசு தன்னுடைய வார்த்தையால் மட்டுமல்ல, செயலாலும் போதித்தது போன்று, நாமும் நம்முடைய செயல்களால் இயேசுவுக்குச் சான்று பகர்வோம். மேலும் நாம் செய்யக்கூடிய தொண்டுகளாலும் பணிவிடையாலும் நாம் உட்கொளும் நம் ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்திற்கு – நற்கருணைக்கு அர்த்தம் தருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.