பாடுகளின் குருத்து ஞாயிறு (ஏப்ரல் 05)

தந்தையின் திருவுளம் நிறைவேறத் தன்னையே தியாகம்செய்த இயேசு
நிகழ்வு
முன்பொரு காலத்தில் ‘மூங்கில்கள் நாடு’ என அழைக்கப்படும் சீனாவில் விவசாயி ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் மூங்கில் மரம் ஒன்றை வளர்த்து வந்தார். தன்னுடைய பிள்ளையைப் போன்று வளர்த்து வந்த அந்த மூங்கில் மரம் அகலமாகவும் உயரமாகவும் வளர்வதைக் கண்டு இவர் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார். அந்த மரத்தின் உயரத்தையும் அகலத்தையும் கண்டு வியந்துபோன பலர், அதைப் பெரிய தொகை கொடுத்து, விலைக்கு வாங்க வந்தபோதும்கூட இவர் முடியாது என்று மறுத்துவிட்டார்.
இப்படியிருக்கையில் இவர் இருந்த பகுதியில் மழை பெய்யாமல் கடுமையான வறட்சி ஏற்பட்டது. விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாததால், நிலங்கள் எல்லாம் வறண்டுபோயின; ஆனால் இவருடைய நிலம் மற்றவர்களுடைய நிலங்களைவிடச் சற்று உயரமான பகுதியில் இருந்ததால், இவருடைய கிணற்றில் தண்ணீர் இருந்தது. அதைக் கொண்டு இவர் விவசாயம் செய்துவந்தார். ஒருநாள் இவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ‘நம்மிடம் தண்ணீர் இருப்பதால் நல்லமுறையில் விவசாயம் செய்கின்றோம். தண்ணீரில்லாத மற்ற விவசாயிகள் என்ன பாடு படுவார்கள்! அவர்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டும்!’ என்ற எண்ணம் இவருக்கு வந்ததால், தான் பிள்ளைபோன்று வளர்த்துவந்த மூங்கில் மரத்திடம் சென்றார்.
“மூங்கில் மரமே! உன்னால் ஒரு நல்லது நடக்கவேண்டும். அதனால் நான் உன்னை வெட்டிக்கொள்ளட்டுமா…?” என்று சற்று வருத்தத்தோடு கேட்டார். அதற்கு மூங்கில் மரம் அவரிடம், “இதில் என்னிடம் கேட்பதற்கு என்ன இருக்கின்றது…? நான், நீங்கள் வளர்த்த மரம்! அதனால் நீங்கள் என்னை உங்களுடைய விரும்பத்திற்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று மகிழ்ச்சியோடு சொன்னது மூங்கில் மரம். உடனே விவசாயி ஒரு பெரிய ரம்பத்தை எடுத்து, மூங்கில் மரத்தின் அடிப்பாகத்தில் வைத்து அறுத்தெடுத்தார். பின்னர் அந்த மூங்கிலை இரண்டாகப் பிளந்து, அதன்வழியாக தண்ணீர் போகிற வண்ணம், அதிலிருந்த தேவையில்லாத பகுதிகளை இவர் வெட்டியெடுத்தார். இவையெல்லாம் மூங்கில் மரத்திற்கு மிகுந்த வேதனையைத் தந்தாலும், ‘தன் தலைவரின் விருப்பம் நிறைவேறினால் போதும்’ என்று மகிழ்ச்சியோடு அது ஏற்றுக்கொண்டது.
இதற்குப் பின்பு விவசாயி இரண்டாக பிளக்கப்பட்ட மூங்கிலை தனது கிணற்றிலிருந்து வறண்டுபோயிருந்த தாழ்வான பகுதிகளை நோக்கி வைத்தார். தண்ணீர் அந்த மூங்கிலின் வழியாகப் பாய்ந்து. தாழ்வான பகுதியை அடைந்ததும், வறண்டு போயிருந்த அந்த நிலங்கள் எல்லாம் ஒருசில மாதங்களில் வளம்கொழிக்கத் தொடங்கின. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். மூங்கில் மரமோ, ‘தலைவர் என் வழியாய் மக்களுடைய துன்பத்தைப் போக்கிவிட்டார்’ என்ற மகிழ்ச்சியில் தன்னுடைய வலிகளை மறந்தது.
இந்த நிகழ்வில் வருகின்ற மூங்கில் மரம் எப்படி தன்னுடைய தலைவரின் விருப்பம் நிறைவேறத் தன்னையே தியாகம் செய்ததோ, அப்படி இயேசு கிறிஸ்து உலகை மீட்கவேண்டும் என்ற தந்தையின் திருவுளம் நிறைவேறத் தன்னையே தியாகமாகத் தருகின்றார். இன்றைய நாளில் நாம் பாடுகளின் குருத்து ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். புனித வாரத்தின் நுழைவாயிலாக இருக்கும் இந்தப் பாடுகளின் குருத்து ஞாயிறு நமக்குச் சொல்லக்கூடிய செய்திகள் என்னவென்று இப்பொழுது நாம் சிந்தித்து பாப்போம்.
இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை
இன்றைய நாளில் இயேசு கிறிஸ்து, எருசலேம் திருநகரில் வெற்றிவீராய்ப் பவனி செல்வதை நினைவுகூருகின்றோம். மக்கள் அனைவரும், ‘தாவீதின் மகனுக்கு ஓசன்னா’ என்று சொல்லி ஆர்ப்பரிகின்றார். ஆனால், இந்த ஆர்ப்பரிப்பெல்லாம் சிறிதுநேரத்திலேயே மாறி, இயேசு மக்களின் கையில் ஒப்புவிக்கப்படுகின்றார். பின்னர் அவர்கள் அவரைக் கொலை செய்கின்றனர். இப்படி இன்பமும் துன்பமும் நிறைந்ததாக இயேசுவின் வாழ்க்கை இருக்கிறது.
மனித வாழ்க்கையும்கூட இப்படி இன்பமும் துன்பமும் நிறைந்துதான். இன்பம் வருகின்றபோது கடவுளை நினைக்காத நாம், துன்பம் வந்ததும், கடவுள் நம்மைக் கைவிட்டதாகப் புலம்புகின்றோம். மனிதராகப் பிறந்த யாருக்கும், அதுவும் இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவருக்கும் துன்பம் வரத்தான் செய்யும். ஆனாலும் நாம் மனவுறுதியோடும் துணிவோடும் இருக்கவேண்டும். யோவான் நற்செய்தியில் இயேசு இதைத்தான், “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவோடு இருங்கள்” என்று கூறுகின்றார் (யோவா 16:33). ஆகையால், நாம் இன்பமும் துன்பமும் நிறைந்த இவ்வாழ்க்கையில் இறைவன்மீது பற்றுக்கொண்டு மனவுறுதியோடும் துணிவோடும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.
தன்னையே தியாகம் செய்த இயேசு
இன்றைய இறைவார்த்தை, தந்தையின் திருவுளம் நிறைவேறுவதற்கு இயேசு தன்னையே தியாகம் செய்வதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு, கடவுள் தன்மையில் விளங்கியதையும் தம்மையே வெறுமையாக்கியதையும் சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்குத் தாழ்த்திக் கொண்டதையும் எடுத்துக்கூறுகின்றது. இயேசுவுக்கு, உலகை மீட்கவேண்டும் என்ற தந்தைக் கடவுளின் திருவுளம்தான் கண்முன்னால் இருந்தது. அதனாலேயே இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்துமுடிப்பதும்தான் தன்னுடைய உணவு (யோவா 4: 34) என்றும் வாழ்ந்துவந்தார்.
அப்படியானால் இயேசுத் எப்படி தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் தன்னைத் தியாகம் செய்தாரோ, அப்படி நாம் ஒவ்வொருவரும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மையே நாம் தியாகம் செய்யவேண்டும். இன்றைய இரண்டாம் வாசகத்தின் முந்தைய இறைவார்த்தையில் (பிலி 2:5) புனித பவுல், “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்” என்பார். இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்காகத் தன்னையே தியாகம் செய்தாரெனில், நாமும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மையே தியாகம் செய்யவேண்டும். இதுதான் கிறிஸ்துவின் மனநிலையாகும்.
எப்பெயருக்கும் மேலான பெயர் இயேசுவுக்கு அருளப்படல்
இயேசு தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றத் தன்னையே தியாகம் செய்ததால், கடவுள் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அருளுகின்றார். அந்தப் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் என்கிறார் புனித பவுல். ஆம், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவருக்கு அவர் தருகின்ற ஆசி அளப்பெரியது.
நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான், அது மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா 12: 24) என்பார். அதுபோன்றுதான் ஒருவர் கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்றால், அவர் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றவேண்டும். கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றும்பொழுது நிறையத் துன்பங்களும் சவால்களும் நம்முடைய வாழ்வையே தியாகம் செய்யவேண்டும் நிலையும் வரலாம். அவற்றையெல்லாம் செய்து நாம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும்பொழுது கடவுளால் நிச்சயம் உயர்த்தப்படுவோம். ஆகவே, நாம் கடவுளால் உயர்த்தப்படவும் கடவுள் தருகின்ற ஆசியைப் பெறவும் இயேசுவைப் போன்று நம்மையே தியாகம் செய்ய முன்வருவோம்.
சிந்தனை
‘தன்னலத்தால் அல்ல; தியாகத்தாலேயே உலகம் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றது’ என்பார் நெப்போலியன் ஹில் என்ற அமெரிக்க எழுத்தாளர். ஆகையால், நாம், தந்தையின் திருவுளம் நிறைவேற இயேசு எப்படித் தன்னையே தியாகம் செய்தாரோ, அப்படி இந்த மானுடம் தழைக்க நம்மையே நாம் தியாகம் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.