வத்திக்கான் நாட்டுக்கொடி அரைக்கம்பத்தில்

இத்தாலியிலும், உலகெங்கும் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருடன் ஒருமைப்பாட்டை வெளியிட்டு, மார்ச் 31, இச்செவ்வாய் முதல், வத்திக்கான் நாட்டின் கொடி, அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோயினால் இறந்தோரின் நினைவாக, இத்தாலியின் அனைத்து நகரங்களிலும் இத்தாலிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று, இந்நாட்டின் அனைத்து நகர மேயர்களும் இணைந்து மார்ச் 31ம் தேதி எடுத்த முடிவையடுத்து, வத்திக்கான் நாடும் இந்த முடிவை ஏற்று செயல்பட்டது என்று, வத்திக்கான் செய்தித்துறையின் அறிக்கை கூறுகிறது.

இத்தாலிய நகர மேயர்கள் கழகத்தின் தலைவரான பாரி மேயர் அந்தோனியோ தெக்காரோ (Antonio Decaro) அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, கோவிட் தொற்றுக்கிருமியால் உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்தும்வண்ணம், இத்தாலியின் அனைத்து நகரங்களிலும், நாட்டுக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இத்தாலியிலும், உலகெங்கும் இறந்தோர், அவர்களின் குடும்பத்தினர், இந்த நோயை முடிவுக்குக் கொணர போராடிவருவோர் ஆகிய அனைவருக்கும் மரியாதை செலுத்தும்வண்ணம் வத்திக்கான் கொடி அனைத்து கட்டடங்களிலும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன என்று வத்திக்கான் செய்தித்துறையின் அறிக்கை கூறுகிறது.

கோவிட்-19ன் தாக்கத்தால், ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, இத்தாலியில் 1,05,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 12,428 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும், 15,729 பேர் நலமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

உலக அளவில், கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், 8,62,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 42,510 உயிரிழந்துள்ளனர், மற்றும், 1,79,104 பேர் நலமடைந்துள்ளனர்.

Comments are closed.