நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 27)

தவக்காலம் நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை
யோவான் 7: 1,2,10, 25-30
தெரியாததைத் தெரிந்தவர்கள் போல் காட்டிக்கொள்ளும் மனிதர்கள்
நிகழ்வு
ஒருமுறை மிகப்பெரிய அறிஞரான பெஞ்சமின் பிராங்கிளின் ஓர் இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றார். அப்படிச் செல்லும்பொழுது தன்னுடைய பேரனையும் தன்னோடு அவர் கூட்டிச் சென்றார்.
இலக்கியக் கூட்டத்தில் பேசியவர் பிரஞ்சு மொழியில் பேசினார். பிரஞ்சு மொழி பெஞ்சமின் பிராங்கிளினுக்கு கொஞ்சம்கூடத் தெரியாது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அதே கூட்டத்தில் இருந்த, தனக்கு மிகவும் அறிமுகமான பெளலர் என்ற பெண்மணி கையைத் தட்டியபோதெல்லாம், அவரைப் பார்த்து இவரும் கையைத் தட்டினார்.
இலக்கியக் கூட்டம் முடிந்து பெஞ்சமின் பிராங்கிளினும் அவருடைய பேரனும் வெளியே வந்தார்கள். பேரனுக்கு பிரஞ்சு மொழி நன்றாகத் தெரியும். அதனால் அவன் பெஞ்சமின் பிராங்கிளினிடம், “தாத்தா! கூட்டத்தில் பேசியவர் உங்களைப் பற்றிப் பேசும்போது மட்டும் ஏன் மற்றவர்களை விட நீங்கள் சத்தமாகக் கைகளைத் தட்டினீர்கள்…?” என்று கேட்டான். அவரால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. அப்பொழுதுதான் அவர், தெரியாததைத் தெரிந்துபோல் காட்டிக்கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தான் என்று நொந்துகொண்டார்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வருகின்ற பெஞ்சமின் பிராங்கிளினைப் போன்று, இன்றைக்கும்கூட பலர் தெரியாத ஒன்றைத் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்வதைக் காணமுடிகின்றது. இது உண்மையிலேயே மிகப்பெரிய அபத்தம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. நற்செய்தி வாசகத்தில் எருசலேம் நகரத்தவர் சிலர் இயேசுவைப் பற்றி எதுவும் தெரியாமல், அவரைத் தெரிந்தது போல் பேசிக்கொள்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இயேசு சொல்லும் பதில் என்னவாக இருக்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கூடார விழாவிற்குச் செல்லும் இயேசு
நற்செய்தியில் இயேசு எருசலேமில் நிகழவிருந்த கூடார விழாவிற்குச் செல்வதாக வாசிக்கின்றோம். யூதர்கள் கொண்டாடிய கூடார விழாவானது, பாஸ்கா விழாவிற்கு ஆறு மாதங்கள் கழித்து வரும். இவ்விழா செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படும். இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வாக்களிப்பட்ட கானான் நாட்டிற்குக் கடந்து வந்தபொழுது, கூடாரங்களில் வாழ்ந்தார்கள் (லேவி 23:43) என்பதை நினைவுகூரும் வகையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இவ்விழா நேரத்தில் மக்கள் அறுவடையை எல்லாம் முடித்துவிட்டு, எருசலேமிற்கு வந்து சேர்வார்கள். எனவே, எருசலேமில் கூட்டம் மிகுதியாக இருக்கும். இப்படிப்பட்ட சமயத்தில்தான் இயேசு எருசலேமிற்கு வருகின்றார்; ஆனால், மறைவாய் வருகின்றார்.
இயேசுவைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பேசும் மக்கள்
அண்மையில் நிகழவிருந்த கூடார விழாவிற்கு வரும் இயேசு, வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருந்த பார்த்துவிட்டு, எருசலேம் நகரத்தவர் சிலர், “…ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ…? ஆனால் மெசியா வருவது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே!” என்று பேசிக்கொள்கின்றார்கள்.
எருசலேம் நகரத்தவர் இவ்வாறு பேசிக்கொள்வதில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. ஒன்று, மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாது என்பதாகும். யூதர்கள் நடுவில், மெசியா வருவது யாருக்கும் தெரியாமல் என்ற ஒரு கருத்து இருந்தது. இதற்கான குறிப்புகளை திருஅவையால் அங்கீகரிக்கப்படாத முதல் ஏனோக்கு நூல் (1 ஏனோ 48: 6) மற்றும் நான்காம் எஸ்ரா நூலில் (4 எஸ் 1:33ff) காணலாம். இதனாலேயே எருசலேம் நகரத்தவர் மெசியா எங்கிருந்து வருவார் என யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும் என்று பேசிக்கொள்கின்றார்.
எருசலேம் நகரத்தவர் பேசிக்கொண்டதில் இருக்கும் இரண்டாவது செய்தி, இவர்கள் இயேசுவைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் பேசிக்கொண்டதாகும். இவர்கள் இயேசுவைக் கலிலேயாவில் உள்ள நாசரேத்தைச் சார்ந்தவராக மட்டுமே அறிந்திருந்தார்கள். இயேசு தாவீதின் ஊரான பெத்லகேமில் பிறந்தவர் என்பதையும், அவர் தந்தையிடமிருந்து வந்தவர் என்பதையும் அறியாதிருந்தார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் இயேசு, நான் தந்தையிடமிருந்து வந்தவன் என்று கூறுகின்றார்.
தந்தையிடமிருந்து வந்த இயேசு
எருசலேம் நகரத்தவர் அறியாமையில் பேசியபொழுது, இயேசு அவர்களிடம், தான் யார்? எங்கிருந்து வந்தவர்? என்பன குறித்து விளக்கமளிக்கின்றார். இதைக் கேட்ட அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பாமல், பிடிக்க முயல்கின்றார்கள். பலர் நேரங்களில் நாமும் இந்த மக்களைப் போன்று உண்மையை அறியாமல், அறிந்தவர்களைப் போன்று காட்டிக்கொள்கின்றோம். இது மிகப்பெரிய அபத்தம் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஆகவே, நாம் உண்மையை, இறைவனை, இயேசுவை அறிந்துகொள்வதற்குத் தூய ஆவியார் நமக்கு வழிகாட்ட அவரிடத்தில் வேண்டுவோம். உண்மையை, இயேசுவை அறிந்தபின் அவர் வழியில் நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘ஆண்டவரே! ஒளியை நோக்கி வழிநடத்தியருளும்’ என்று வேண்டினார் புனித ஜான் ஹென்றி நியூமன். நாமும் இறைவனிடம் அவ்வாறே வேண்டி, ஞானி ஒளி பெற்று, இயேசுவை அறிந்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.