மார்ச் 19 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்.

நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் (இ) 1: 2, 11-19
அந்நாள்களில் அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்: உமது பெயரை முன்னிட்டு எங்களை என்றும் கைவிட்டு விடாதீர்; உமது உடன்படிக்கையை முறித்து விடாதீர். உம் அன்பர் ஆபிரகாமை முன்னிட்டும், உம் ஊழியர் ஈசாக்கை முன்னிட்டும், உம் தூயவர் இஸ்ரயேலை முன்னிட்டும், உம் இரக்கம் எங்களைவிட்டு நீங்கச் செய்யாதீர். விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் அவர்களின் வழிமரபினரைப் பெருகச் செய்வதாக நீர் அவர்களுக்கு உறுதி அளித்தீர்.
ஆண்டவரே, எங்கள் பாவங்களால் மற்ற மக்களினங்களைவிட நாங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டோம்; உலகெங்கும் இன்று தாழ்வடைந்தோம். இப்பொழுது எங்களுக்கு மன்னர் இல்லை, இறைவாக்கினர் இல்லை, தலைவர் இல்லை; எரிபலி இல்லை. எந்தப் பலியும் இல்லை; காணிக்கைப் பொருளோ தூபமோ இல்லை; உம் திருமுன் பலியிட்டு, உம் இரக்கத்தைப் பெற இடமே இல்லை.
ஆயினும், செம்மறிக்கடாக்கள், காளைகளால் அமைந்த எரிபலி போலும் பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான பலிபோலும் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவோமாக. அவ்வாறே எமது பலி இன்று உம் திருமுன் அமைவதாக; நாங்கள் முழுமையாக உம்மைப் பின்பற்றுவோமாக; ஏனெனில் உம்மில் நம்பிக்கை வைப்போர் வெட்கத்திற்கு ஆட்படமாட்டார். இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன் உம்மைப் பின்பற்றுகிறோம். உமக்கு அஞ்சி, உம் முகத்தை நாடுகிறோம். எம்மை வெட்கத்துக்கு உள்ளாக்காதீர்; மாறாக, உம் பரிவிற்கு ஏற்பவும், இரக்கப் பெருக்கிற்கு ஏற்பவும் எங்களை நடத்தும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

Comments are closed.