மார்ச் 18 : நற்செய்தி வாசகம்

கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
விண்ணரசில் யார் பெரியவர்?
நிகழ்வு
காந்தியடிகள் சுதேச இயக்கத் தொடங்கி, உள்ளாட்டுப் பொருள்களையே மக்கள் வாங்கவேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டிருந்த நேரம் அது. அப்பொழுது சபர்மதி ஆசிரமத்தில் இருந்த காந்தியடிகளின் துணைவியார் கஸ்தூரிபாய்க்குக் காலில் காயம் ஏற்பட்டு, இரத்தம் வழிந்தோடத் தொடங்கியது.
உடனே அவர், ஆசிரமத்தில் இருந்த பணிப்பெண்ணிடம், “காலில் கட்டுப்போடுவதற்கு ஒரு துணியைக் கொண்டு வா” என்றா. அந்தப் பணிப்பெண் ஓடிச் சென்று ‘மில்துணியைக்’ கொண்டுவந்து கொடுத்தார். அதை வாங்க மறுத்த கஸ்தூரிபாய், “வெளிநாட்டவரின் தயாரிப்பான இந்த மில் துணி வேண்டாம். நம்முடைய நாட்டவரின் தயாரிப்பான கதர்த் துணியைக் கொண்டு வா” என்றார். “அம்மா! கதர்த் துணியை காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் உறுத்தும். மில் துணிதான் காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டுவதற்கு ஏற்றது” என்றார் அந்தப் பணிப்பெண்.
பதிலுக்குக் கஸ்தூரி பாய் அந்தப் பணிப்பெண்ணிடம், “காயத்தில் கதர்த் துணியை வைத்துக் கட்டினால் உறுத்தத்தான் செய்யும்! அதற்காக காந்தியடிகளின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மீறிச் செயல்பட முடியுமா…?” என்றார். பணிப்பெண்ணோ வேறு எதுவும் பேசாமல், அவர் கேட்ட கதர்த் துணியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
கதர்த் துணியை காயத்தில் வைத்துக் கட்டுவது உறுத்துவதாக இருந்தாலும், காந்தியடிகளின் கொள்கைகளை மீறக்கூடாது என்று செயல்பட்ட, கஸ்தூரிபாய் நமக்கு கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். இறைவார்த்தையும் ஆண்டவரின் திருச்சட்டமும் கூட கடைப்பிடித்து வாழ்வதற்குச் சற்றுக் கடினமானவையான இருந்தாலும், அவற்றின் படி நடக்கின்றபொழுது விண்ணரசில் மிகப்பெரியவர்கள் ஆவோம் என்கிறது இன்றைய இறைவார்த்தை. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வந்தவரா?
இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் இறைப்பணியைச் செய்தபொழுது, பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அவர்மீது வைத்த குற்றச்சாற்று, ‘இயேசு ஓய்வுநாள் சட்டத்தையும் மூதாதையர் மரபையும் மீறுகின்றார்’ என்பதுதான். உண்மையில் இயேசு ஓய்வுநாள் சட்டத்திற்கும் அல்லது திருச்சட்டத்திற்கும் இறைவாக்குகளுக்கும் புதிய பொருள் தந்தாரே ஒழிய, அவற்றை மீறவில்லை. அப்படியானால் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் திருச்சட்ட அறிஞர்கள், இயேசு சட்டத்தையும் மூதாதையர் மரபையும் மீறிவிட்டார் என்று குற்றம் சுமத்தினார்களே… அவையெல்லாம் என்ன என்று நமக்கு முன் ஒரு கேள்வி எழலாம்.
இயேசு மீறியதெல்லாம் அறிவுக்கு ஒவ்வாத பரிசேயச் சட்டங்கள் அன்றி, ஆண்டவரின் திருச்சட்டங்கள் அல்ல. அதனால்தான் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில், “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” என்று கூறுகின்றார். இதன்மூலம் இயேசு திருச்சட்டம் மற்றும் இறைவாக்கு நூல்களின் மையமான அன்பைப் போதித்ததோடு மட்டுமல்லாமல், அதைத் தன்னுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டினார் என்பது உறுதியாகின்றது.
கட்டளைகளைக் கடைபிடித்துக் கற்பிக்கின்றவர் விண்ணரசில் பெரியவர்
திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றுகின்றேன் என்றும் கடைப்பிடிக்கின்றேன் என்றும் சொன்ன இயேசு, தன்னைப் பின்பற்றி வருகின்ற சீடர்களும் அவ்வாறு கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று செய்தியை இயேசு இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் கூறுகின்றார்.
ஆம், ஒருவர் இயேசுவின் சீடராக இருக்கின்றார் எனில், அவர் இயேசுவின் போதனையைக் கேட்பதாலோ அல்லது இயேசுவின் போதனையை மற்றவர்களுக்குப் போதிப்பதாலோ மட்டும் இயேசுவின் சீடராக இருந்துவிட முடியும். அவர் இயேசுவின் போதனையைக் கடைப்பிடிக்கவேண்டும். ஒருவேளை அவர் இயேசுவின் போதனையை மக்களுக்குக் கற்பிக்கின்றார் எனில், அதனைக் கடைப்பிடித்துக் கற்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர் இயேசுவின் சீடராக இருக்கமுடியும்; விண்ணரசில் பெரியவராகவும் இருக்கமுடியும். இல்லையென்றால் அவர் இயேசுவின் சீடராகவும் இருக்கமுடியாது; விண்ணரசில் பெரியவராக அல்ல, சிறியவராகத்தான் இருக்க முடியும். இதில் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் சொல்வது போல், ‘கடவுளின் வார்த்தை உயிருள்ளது’ (எபி 4: 12). ஆகையால், நாம் ஆண்டவரின் வார்த்தைகளையும் அவருடைய அன்புக் கட்டளையையும் கடைப்பிடித்து, விண்ணரசில் பெரியவர்கள் ஆவோம்.
சிந்தனை
‘இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் அதன்படி நடக்கிறவர்களாவும் இருங்கள்’ (யாக் 1: 22) என்பார் புனித யாக்கோபு. ஆகையால், நாம் வாழ்வளிக்கும் ஆண்டவரின் கட்டளைகளை, இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்பவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.