COVID-19 தொற்றுக்கிருமிக்கு எதிராக வத்திக்கான் நடவடிக்கைகள்
COVID-19 தொற்றுக்கிருமியால் உருவாகியுள்ள நெருக்கடி நிலையை எதிர்கொள்ள, வத்திக்கான் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்து, வத்திக்கான் நலத்துறை அலுவலகத்தின் இணை இயக்குனர், ஆந்த்ரெயா அர்க்காஞ்செலி (Andrea Arcangeli) அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் விளக்கிக் கூறினார்.
மார்ச் 6, கடந்த வெள்ளிக்கிழமை, வத்திக்கான் மருத்துவமனையில், ஆய்வுக்காக வந்திருந்த ஒருவருக்கு, COVID-19 தொற்றுக்கிருமி உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த மருத்துவமனை முழுவதும் அடைக்கப்பட்டு, கிருமிக்கொல்லி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், அவரைத் தவிர, வேறு எந்த பணியாளரோ, வத்திக்கானுக்கு வருகை தந்தவர்களோ, இந்நோய் கிருமியால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றும், அர்க்காஞ்செலி அவர்கள் கூறினார்.
இத்தாலிய அரசு அறிவித்திருக்கும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், வத்திக்கான் நகரம் முழுமையாகப் பின்பற்றி வருகிறது என்றும், இந்நோயின் பாதிப்பு உள்ளதென கண்டுபிடித்ததும், விரைந்து செயலாற்றும் வகையில், ‘ஆம்புலன்ஸ்’ வசதிகள் தயாராக உள்ளன என்றும், அர்க்காஞ்செலி அவர்கள் எடுத்துரைத்தார்.
புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மக்கள் கூடிவருவதைத் தடுக்கும் நோக்கத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், மூவேளை செப உரையும், புதன் மறைக்கல்வி உரையும், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதையும், அர்க்காஞ்செலி அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வத்திக்கான் அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது என்றும், வத்திக்கான் மருந்தகத்திற்கு வருவோர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கவேண்டும் என்பதும், மருந்துகளை வழங்குவோர், பாதுகாப்பு கண்ணாடி காப்புத் திரைகளுக்கு பின் இருந்தவண்ணம் தங்கள் பணிகளை செய்வர் என்றும், அர்க்காஞ்செலி அவர்கள் அறிவித்தார்.
தற்போதையச் சூழலில், வத்திக்கான் பல்பொருள் அங்காடி, மற்றும், வத்திக்கான் உணவகம் ஆகியவை இயங்கி வருகின்றன என்றும், இவற்றில், குறிப்பிட்ட நேரத்தில் நுழைவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்றும், வத்திக்கான் நலத்துறை அலுவலகத்தின் இணை இயக்குனர், அர்க்காஞ்செலி அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்
Comments are closed.