உலக இளையோர் நாள் 2020க்கு திருத்தந்தையின் செய்தி

ஒவ்வொரு புதிய மைல்கல்லையும் நாம் அடையும் வேளையில், ஒரு புதிய துவக்கத்தை உருவாக்க, கடவுளாலும், இவ்வுலக வாழ்வாலும், நமக்கு, சவால்கள் விடப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோருக்கு எழுதியுள்ள ஒரு மடல் வழியே, அழைப்பு விடுத்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், குருத்தோலை ஞாயிறன்று, உலகெங்கும் உள்ள மறைமாவட்டங்களில், இளையோரின் நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, இவ்வாண்டு, ஏப்ரல் 5ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாள் 2020க்கு, மார்ச் 5, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள செய்தியில், திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

துணிகறச் செயலாற்ற விழையும் இளையோர்

பயணங்களை மேற்கொள்வது, புதிய இடங்களையும், மக்களையும் கண்டுபிடிப்பது, புதிய அனுபவங்களைப் பெறுவது ஆகியவற்றில், இளையோர் தேர்ந்தவர்கள் என்பதை, தன் மடலின் துவக்கத்தில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துணிகறச் செயலாற்ற, இளையோர் கொண்டிருக்கும் இந்த மனநிலையை கருத்தில் கொண்டு, 2022ம் ஆண்டு உலக இளையோர் நாள் நிகழ்வுகள், போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

15, மற்றும், 16ம் நூற்றாண்டுகளில், லிஸ்பன் நகரிலிருந்து, இளையோர் பெரும் எண்ணிக்கையில், அதுவரை அறியப்படாத நாடுகளுக்கும், அங்குள்ள மக்களுக்கும் இயேசுவின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள சென்றனர் என்பதை திருத்தந்தை இளையோரிடம் நினைவுபடுத்தியுள்ளார்.

2020, 2021 மற்றும் 2022 இளையோர் நாள் மையக்கருத்துக்கள்

“மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்” (லூக். 1:39) என்ற சொற்கள், 2022ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளுக்கென தெரிவு செய்யப்பட்டிருக்கும் மையக்கருத்து என்பதை தன் மடலில் நினைவுறுத்தியுள்ள திருத்தந்தை, அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில், அதாவது, 2020ம் ஆண்டு, “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” (லூக். 7:14) என்ற சொற்களையும், 2021ம் ஆண்டு, “எழுந்து நில். நீ கண்டதுபற்றி சாட்சியாக உன்னை ஏற்படுத்தினேன்” (காண்க. தி.பணிகள் 26:16) என்ற சொற்களையும், இளையோருடன் இணைந்து சிந்திக்க தான் விழைவதாக இம்மடலில் கூறியுள்ளார்.

“இளைஞனே, எழுந்திடு”

நயீன் என்ற ஊரில், கைம்பெண்ணின் மகனை இயேசு உயிர்ப்பிக்கும் புதுமையில், (7) என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை, தன் மடலில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கனவுகள், நேர்மறை உணர்வுகள், தாராள குணம், உற்சாகம் ஆகியவற்றை நாம் இழந்திருந்தால், நம் முன்னே இயேசு நின்று, தன் உயிர்ப்பின் வல்லமையால், நம்மையும் எழுந்து நிற்கப் பணிக்கிறார் என்று, ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்ற திருமடலில் (எண் 20) தான் கூறியுள்ள கருத்தை இம்மடலில் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார்.

நயீன் நகர வாசலில் தன்னை நோக்கி வந்த ஒரு கூட்டத்தில், துயருற்றிருக்கும் கைம்பெண்ணை இயேசு அடையாளம் கண்டு, அவரது துயரத்தைத் துடைத்தார் என்பதை இந்நிகழ்வில் காண்கிறோம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, நாம் எவற்றைக் காண்கிறோம், எவை நம் உள்ளங்களைத் தொடுகின்றன என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இளையோர் சந்திக்கும் நிகழ்வுகளில்…

நாம் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளில், அந்நிகழ்வை நம் செல்லிடப்பேசிகளில் பதிவு செய்து, அதை மற்றவர்களோடு பகிர்வதில் நம் பெரும்பாலான நேரமும், சக்தியும் வீணாகிறது என்ற கவலையை வெளியிட்டுள்ள திருத்தந்தை, குறிப்பாக, வாழ்வை குறைக்கவும், இழக்கவும் செய்யும் நிகழ்வுகள் நடக்கும் வேளையில், வாழ்வை மீண்டும் கொண்டுவர நாம் என்ன முயற்சிகள் மேற்கொள்கிறோம் என்ற கேள்வியை விடுத்துள்ளார்.

துயரம் நிறைந்த சூழல்களில், ஒரு சில இளையோர், தங்கள் வாழ்வையும் பணயம் வைத்து, அத்துயரினை நீக்க முன்வருவதையும், வேறு சிலர், நம்பிக்கை இழந்து, அத்துயரத்தில் ஆழ்வதோடு, ஒரு சிலர், தங்கள் உயிரையும் இழக்க முடிவு செய்வது, வேதனை தருகிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் வெளிச்சமிட்டு காட்டுகிறார்.

இறந்துபோன இளைஞனின் உருவகம்

நயீன் நகர இளைஞன் இறந்த உருவகத்தைப் பயன்படுத்தி, இன்றைய இளையோர், மனத்தளர்ச்சி, போதைப்பொருள் பயன்பாடு, குற்றம் புரியும் குழுக்களில் இணைதல் என்ற வெவ்வேறு வழிகளில் இறந்துபோனதைப்போல் வாழ்ந்து வருவதை, திருத்தந்தை, இம்மடலில் வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரிவு கொண்டு இயேசு கைம்பெண்ணின் மகனை உயிர்ப்பித்தார் என்பதை குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் பலரும், பரிவினால் உந்தப்பட்டு, மக்களின் துயரங்களில் தங்களையே ஈடுபடுத்திக் கொள்வதை பெருமையுடன் கூறியுள்ளார்.

Comments are closed.