இறைவனை நோக்கி இறைஞ்சும்போது, நம்பிக்கை வளர்கிறது
இறைவனிடம், முழு நம்பிக்கையுடன் வேண்டும்போது நம் நம்பிக்கை வளர்கிறது என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சனவரி 10, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
“நம் துயரங்களை மறைக்காமல், நாம் யார் என்பதை வெளிப்படுத்தி, திறந்த இதயத்துடன் இறைவனை நோக்கி இறைஞ்சும்போது, நமக்குள் நம்பிக்கை வளர்கிறது” என்ற சொற்கள், இத்திங்களன்று, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், “இயேசு தன் சீடர்களை, உப்பாகவும், ஒளியாகவும் செயலாற்ற அழைப்பது, இயேசுவின் அருளை வாழ்ந்து, அதை பரப்புவோர், உப்பாகவும், தன் செயல்கள் வழியே நற்செய்தியின் ஒளி பரவிட உதவுவோர், ஒளியாகவும் செயல்படுகின்றனர் என்பதைக் குறிக்கிறது” என்ற சொற்களைப் பதிவு செய்திருந்தார்.
இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், சிரியாவில் இடம்பெறும் மோதல்களால் பெண்களும், குழந்தைகளும் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படும் சோகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்ற கவலையை வெளியிட்டு, மனிதாபிமானம் நிறைந்த சட்டங்கள் மதிக்கப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட அனைவரும் உதவவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
Comments are closed.