பிப்ரவரி 11 : நற்செய்தி வாசகம்

நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றுகிறீர்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13.

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர். அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். `இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார். மேலும் அவர், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். `உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும் `தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, `நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது `கொர்பான்’ ஆயிற்று; அதாவது `கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————-
மாற்கு 7: 1-13

“இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்…”

நிகழ்வு

இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய இரு சக்கர வண்டியில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தான். இடையில், ஒரு திருப்பத்தில் எதிரில் வந்த ஒரு சுமையுந்து அவன்மீது மோதிவிட, அவனுடைய உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அடிபட்டுக் கிடந்த அந்த இளைஞனை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள்தான் தூக்கிக்கொண்டு மருத்துவ மனையில் சேர்த்தார்கள். மருத்துவ மனையில் அவனுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக அவன் உயிர்பிழைத்தான்.

இதற்கு நடுவில் அந்த இளைஞனுடைய நெஞ்சில் ‘ஜீசஸ்’ என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தியிருந்ததைப் பார்த்த மருத்துவர், உதவிக்கு இருந்த கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த செவிலியரிடம், “இந்த இளைஞன் ஓர் உண்மையான கிறிஸ்தவனாக இருக்கவேண்டும்” என்றார். இதற்கு அந்த செவிலியர் “நெஞ்சில் ஜீசஸ் என்று பச்சை குத்துவதைவிடவும், அவருடைய போதனையின்படி வாழ்ந்திருந்தால், இவன் உண்மையான கிறிஸ்தவனாக இருந்திருப்பான். இல்லையென்றால், இவன் பெயருக்குத்தான் கிறிஸ்தவன்” என்றார்.

ஒருசிலர் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்கையில், பலர் பெயருக்கு கிறிஸ்தவர்களாக அல்லது வெளிவேடத்தனமான வாழ்க்கை வாழ்வது மிகவும் வருத்தத்திற்கு உரியதாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களின் வெளிவேடத்தைப் போட்டு உடைக்கின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கைகழுவாததைப் பெரிதுபடுத்திய பரிசேயர்கள்

ஆண்டவராகிய இயேசு, இறைவார்த்தையை எடுத்துரைத்து, மக்கள் நடுவில் இருந்த நோயாளர்களைக் குணப்படுத்தி வந்தார். இதனால் மக்கள் நடுவில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு ஏற்பட்டது. இது குறித்துக் கேள்விப்பட்ட பரிசேயர்கள் மற்றும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர்கள் இயேசுவை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்று அவரிடம் வருகின்றார்கள். இந்நிலையில் இயேசுவின் சீடர்கள் கைகழுவாமல் உண்பதைப் பார்த்துவிட்டு, அவர்கள் மூதாதையரின் மரபை மீறிவிட்டதாக இயேசுவிடம் வாக்குவாதம் செய்கின்றார்கள். இதற்கு இயேசு என்ன பதிலளித்தார் என்று சிந்தித்துப் பார்ப்பது முன்பு, சீடர்கள் மீறிவிட்டதாக சொல்லப்படும் மூதாதையர் மரபு என்ன என்று தெரிந்துகொள்வது நல்லது.

“கழுவுவதற்கு ஒரு வெண்கல நீர்த்தொட்டியை அதற்கான வெண்கல ஆதாரத்தோடு செய்… இதிலிருந்து தங்கள் கைகளையும் கால்களையும் கழுவவேண்டும்…” என்று விடுதலைப் பயண நூல் 30: 17-21 இல் வாசிக்கின்றோம். இதன்படி இஸ்ரேயல் மக்கள் அதிலும் குறிப்பாக ஆரோனின் மக்கள் சந்திப்புக் கூடாரத்திற்குள் நுழைந்து, ஆண்டவருக்கென நெருப்புப் பலியினைச் சுட்டெரிக்கும் பணியினைச் செய்யும்பொழுது தங்களுடைய கைகளையும் கால்களையும் கழுவப் பணிக்கப்பட்டார்கள். ஆனால், பரிசேயர்கள் இதனை காலப்போக்கில் சாப்பிடுவதற்கு முன்பும் பாத்திரங்களைப் பயன்படுத்தும்பொழுதும் கடைத்தெருவிலிருந்து பொருள்களை வாங்கி வருகின்றபொழுதும் கைகளையும் பொருள்களையும் கழுவவேண்டும் என்று போதித்தார்கள். இதைக்கூட தூய்மை கருதி ஏற்றுக்கொள்ளலாம். கை கழுவாததை மிகப்பெரிய குற்றமாக அவர்கள் சொன்னதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் இயேசு அவர்களிடம் இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும் வார்த்தைகளை (எசா 29: 13) மேற்கோள் காட்டி, கடுமையாகச் சாடுகின்றார்.

கடவுளின் கட்டளையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மூதாதையர் மரபுக்கு முதலிடம்

இயேசு, பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் தன்னுடைய சீடர்கள் கைகழுவாமல் உண்டதைப் பெரிதுபடுத்தியதற்காகச் சாடியதோடு மட்டுமல்லாமல், அவர்கள் கடவுளின் கட்டளையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மூதாதையர் மரபுக்கு முன்னுரிமை கொடுத்ததற்காகவும் கடுமையாகச் சாடுகின்றார்.

‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ (விப 20:12) என்பது கடவுளின் சட்டம். இதை அவர்கள் வசதியாக மறந்துவிட்டு, கடவுளுக்குக் ‘கொர்பான்’ செலுத்தியவர், தாய் தந்தைக்கு எந்தவித உதவியும் செய்யத் தேவையில்லை என்ற மூதாதையர் மரபை முன்னிலைப்படுத்தினார்கள் அல்லது தூக்கிப்பிடித்தார்கள். இதனாலும் இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

பரிசேயர்கள் ஊருக்கு முன் நல்லவர்கள் போல் காட்டிக்கொண்டார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் உள்ளுக்குள் அன்பில்லாமல் இருந்தார்கள். நாம் உள்ளும் புறமும் உண்மையாக இருந்து, அன்பின் வழியில் நடக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களிடம், “வெளிவேடம் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவன் எழுந்து, “தாமதமாக வரும் ஒரு மாணவன், ஆசிரியர் தன்னை எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காகச் சிரித்துக்கொண்டே வருவதற்குப் பெயர்தான் வெளிவேடம்” என்றான். ஆம், உண்மையான இருக்கின்ற யாரும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசமாட்டார். எனவே, நாம் நம்மிடமிருந்து வெளிவேடத்தனத்தை அகற்றி, வாழ்வு தரும் கடவுளின் கட்டளைகளின்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.