கர்நாடகாவில் மிகப்பெரிய இயேசுவின் திருவுருவம்

இந்தியாவில், பெங்களூரு உயர்மறைமாவட்டத்திற்குச் சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தில், ஏறத்தாழ நூறு அடி உயரத்தில், இயேசுவின் திருவுருவத்தை அமைக்கும் பணி கடந்த வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திருவுருவம் அமைத்து முடிக்கப்படுகையில், அது போலந்து நாட்டில், 2010ம் ஆண்டில் அமைக்கப்பட்ட, 108 அடி உயர கிறிஸ்து அரசர் திருவுருவ அளவைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. போலந்து நாட்டிலுள்ள கிறிஸ்துவின் திருவுருவம், உலகிலே உயரமானது என்றும் நம்பப்படுகின்றது.

இந்த திருவுருவம் அமைக்கப்பட்டுவரும் நிலம் குறித்து ஊடகங்களிடம் பேசிய, பெங்களூரு உயர்மறைமாவட்டத்தின் சமூகத்தொடர்பு பணிக்குழுவின் தலைவர் அருள்பணி சிரில் விக்டர் ஜோசப் அவர்கள், Ramanagara மாவட்டத்திலுள்ள, இந்த நிலத்தை, கிறிஸ்தவர்கள் புனித வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப்பாதை பக்தி முயற்சிகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், அந்நிலத்தில் சிலுவை இருக்கும் இடத்தில், இயேசுவின் திருவுருவத்தை அமைக்க விரும்புகின்றனர் என்றும் கூறினார்.

அப்பகுதியில், பிரெஞ்ச் மறைப்பணியாளர்கள் பணியைத் தொடங்கிய 1906ம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அருள்பணி சிரில் விக்டர் ஜோசப் அவர்கள் மேலும் கூறினார்

Comments are closed.