வணங்குதல்’ என்பதை விளக்கும் டுவிட்டர் செய்திகள்

இத்தாலி நாட்டில் சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவையொட்டி, ‘வணங்குதல்’ என்பதன் பொருளை விளக்கும் டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே பொருளில், வேறு இரு டுவிட்டர் செய்திகளை, இப்புதனன்று வெளியிட்டுள்ளார்.

புதனன்று வெளியான டுவிட்டர் செய்திகள்

“வணங்குதல் என்பது, நாம் நமக்கே அடிமையாகும் தளையிலிருந்து விடுதலை பெற்று வெளியேறுவது. நம்மையல்ல, ஆண்டவரை மையமாக வைப்பதே, வணங்குதலின் பொருள்” என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

“நம் வாழ்வை ஆண்டவரிடம் கொணர்ந்து, அவரை அங்கு நுழைய அனுமதிப்பதே வணங்குதலாகும். அவரது ஆறுதல், இவ்வுலகில் இறங்கிவரவும், அவரது கனிவான அன்பு நம்மை நிரப்புவதற்கும் அனுமதிப்பதே வணங்குதல் என்பதன் பொருள்” என்ற சொற்களை தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாக பதிவு செய்திருந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

@pontifex விவரங்கள்

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

சனவரி 8, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2.296 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

@franciscus விவரங்கள்

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 825 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 65 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

Comments are closed.