மானுடத்திற்கு சிறப்பாகப் பணியாற்ற மாற்றங்கள் அவசியம்

மாறிவரும் உலகில், காலத்தின் ஓட்டத்தோடு ஒத்துணங்கிச் செல்வதற்காகவே திருப்பீடம், மாற்றத்தைக் கொண்டுவருகிறதேயொழிய, மாற்றத்திற்காக மாற்றத்தைக் கொண்டு வருவதில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று திருப்பீட அதிகாரிகளிடம் கூறினார்.

திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றுகின்றவர்களுடன், கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் பாரம்பரிய நிகழ்வில், டிசம்பர் 21, இச்சனிக்கிழமை காலையில் இடம்பெற்ற நிகழ்வில் நீண்ட உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

திருப்பீட தலைமையகத்தில் புதிய துறைகளின் தேவைகள் மற்றும், அவற்றின் நோக்கங்கள் பற்றி வலியுறுத்திப் பேசிய திருத்தந்தை, இறுக்கமானதன்மை மற்றும், அச்சத்தை மேற்கொள்ளவும், கிறிஸ்தவ விழுமியங்களுடன் வாழும் ஓர் உலகை மீண்டும் அமைக்க, நற்செய்தியை சிறப்பாக அறிவிக்கவும், திருப்பீட தலைமையகத்தில் மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்று விளக்கினார்.

மாற்றங்களின் அவசியம்

திருஅவை, கடவுளின் கண்ணோட்டத்தில் வாழ்கிறது மற்றும், வளர்கிறது என்றும், விவிலியமும்கூட, மறுமுறையும், மறுமுறையும் துவங்கும் பயணத்தால் குறிக்கப்பட்டுள்ளது என்றும் உரையாற்றிய திருத்தந்தை, அண்மையில் புனிதர்களாக உயர்த்தப்பட்டவர்களில் ஒருவரான கர்தினால் நியுமேன் அவர்கள், மாற்றம் பற்றிப் பேசுகையில், அவர் உண்மையில் மனமாற்றம் பற்றியே பேசினார் என்றும் குறிப்பிட்டார்.

திருப்பீட தலைமையகத்தில் தனக்கு மிக நெருக்கமாகப் பணியாற்றும் உடன்உழைப்பாளர்களை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து, இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் வெறுமனே மாற்றங்களின் காலத்தில் வாழவில்லை, மாறாக, காலங்களின் மாற்றத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று கூறினார்.

வசதியான வாழ்வுக்குள் நம்மை அனுமதிக்காமல், தெளிந்து தேர்தல் மற்றும், துணிச்சலுடன், இக்காலத்தின் சவால்களால் கேள்வி கேட்கப்பட நம்மையே நாம் அனுமதிப்பது நல்லது எனவும், புதிய ஆடைகளை அணிந்துகொண்டு, அதேநேரம், நாம் எப்படி முன்னர் வாழ்ந்தோமோ அதே வழியில் நாம் இருப்பது அடிக்கடி நிகழ்கின்றது எனவும் திருத்தந்தை கூறினார்

Comments are closed.