நற்செய்தி வாசக மறையுரை (டிசம்பர் 21)
ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்’
நிகழ்வு
ஜெர்மனியில் தோன்றிய மிகச்சிறந்த கவி ஹென்றிச் ஹெய்ன் (1797-1856) என்பவர். இவர் கலோன் (Cologne) நகரில், மிகப் பிரமாண்டமாக இருக்கும் பெருங்கோயிலை (Cathedral) பார்த்துவிட்டு, தன்னோடு இருந்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நம்முடைய முன்னோர்கள் ஆண்டவரிடம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்களால் இப்படியொரு பிரமாண்டமான கோயிலைக் கட்டி எழுப்ப முடிந்திருக்கின்றது. நம்மிடம் அத்தகைய நம்பிக்கை இல்லை; வெறும் கருத்துகள் மட்டும்தான் இருக்கின்றன. இந்தக் கருத்துகளைக் கொண்டு இப்படியொரு பிரமாண்டமான கோயிலைக் கட்டியெழுப்ப முடியாது. நம்பிக்கையால். நம்பிக்கையால்தான் கட்டியெழுப்ப முடியும்.”
ஹென்றிச் ஹெய்ன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு, “நீர் சொல்வது முற்றிலும் உண்மை” என்று அவரோடு இருந்தவர்கள் ஆமோதித்தார்கள்.
ஆம், நம்மிடம் நம்பிக்கை இருந்தால், எவ்வளவு பெரிய செயலையும் செய்து முடிக்க முடியும். அதே நேரத்தில் நம்மிடம் நம்பிக்கை இல்லையென்றால் எதையும் செய்ய முடியாது. இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர் சொன்னதை அப்படியே நம்பி வாழ்ந்த மரியாவைக் குறித்தும் அவருடைய உறவினரான எளிசபெத்தைக் குறித்தும் பேசுகின்றது. மரியா ஆண்டவரிடம் கொண்டிருந்த நம்பிக்கை எத்தகையது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்பிக்கையின் தாய் மரியா
நற்செய்தியில் மரியா தன்னுடைய உறவினரான எலிசபெத்தைச் சந்திக்க ஐம்பதிலிருந்து எழுபது மைல்கள் தூரம் ஓர் ஊருக்கு விரைந்து செல்கின்றார். அங்கு அவர் எலிசபெத்தைக் கண்டதும், வாழ்த்துகின்றார். எலிசபெத்தும் மரியாவை வாழ்கின்றார். அப்படி எலிசபெத் மரியாவை வாழ்த்துகின்றபோது, உதிர்கின்ற வார்த்தைகள்தான், ‘ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்பதாகும். இந்த வார்த்தைகளைக் குறித்த தெளிவினைப் பெற நாம் நேற்றைய நற்செய்தி வாசகத்தோடு (லூக் 1: 26-38) இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
நேற்றைய நற்செய்தி வாசகத்தில், வானதூதர் கபிரியேல் மரியாவிடம், இயேசுவின் பிறப்பைக் குறித்துச் சொல்கிறபோது, “இது எப்படி நிகழும்? நான் கன்னியாயிற்றே?” என்று மரியா தொடக்கத்தில் சொன்னாலும், வானதூதர் எல்லாவற்றையும் எடுத்துரைத்த பின்பு, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று ஆண்டவரின் வார்த்தையின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, அவருடைய திருவுளத்தை நிறைவேற்றத் தயாராகின்றார்.
திருவிவிலியத்தில் ஆண்டவரால் அல்லது அவரது தூதரால் ஒருவருடைய பிறப்புச் செய்தி முன்னறிவிக்கப்படுகின்றபோது, அதைக் கேட்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி எதிர்வினையாற்றுவார்கள். ஆண்டவர் ஆபிரகாமிடம், “… உமது மனைவி சாராவுக்கு மகன் பிறந்திருப்பான்” என்று சொல்கின்றது, அதைக் கேட்கும் சாரா நம்பமுடியாதவராய்ச் சிரிப்பார் (தொநூ 18: 9-15); செக்கரியாவோ “இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்?” என்று ஆண்டவரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாமல், ஐயம் கொள்வார் (லூக் 1:18); ஆனால், மரியா முன்னவர்களைப் போன்று இல்லாமல், ஆண்டவரின் வார்த்தையில் அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டு, “உமது சொற்படியே நிகழட்டும்” என்று சொல்லி, நம்பிக்கையின் தாயாகத் திகழ்கின்றார்.
மரியாவின் நம்பிக்கை இதோடு நின்றுவிடவில்லை. அவர் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையின் அடையாளமாக வேறொன்றையும் செய்தார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்பிக்கையைச் செயலில் வெளிப்படுத்திய மரியா
மரியா ஆண்டவருடைய வார்த்தையில் அசைக்க முடியாத கொண்டார். அந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளமாக அவர், பேறுகால வேளையில் இருந்த தன்னுடைய உறவுக்காரப் பெண்மணியான எலிசபெத்து உதவச் செல்கின்றார். மரியா எலிசபெத்திடம் சென்றபோது எலிசபெத் ஆறுமாதக் கர்ப்பிணி. அதற்கடுத்து மூன்று மாதங்கள் மரியா எலிசபெத்தோடு இருந்து, அவருக்கு எல்லாவிதத்திலும் உதவி செய்திருக்கவேண்டும். இவ்வாறு மரியா புனித யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுவதுபோன்று, நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பவராக விளங்குகின்றார் (யாக் 2:17)
மரியா ஆண்டவரிடம் கொண்டிருந்த நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக எலிசபெத்துக்கு உதவச் சென்றதையும் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்ற நாம், ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? அந்த நம்பிக்கையை நம்முடைய வாழ்வில் வெளிப்படுகின்றோமா? என்று சிந்தித்தப் பார்ப்போம். எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் இவ்வாறு கூறுவார், “நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராக இருக்க முடியாது.” (எபி 11: 6) ஆகையால், நாம் மரியாவைப் போன்று ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பவர்களாய் வாழ்வோம்.
சிந்தனை
‘தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன?’ என்பார் புனித யாக்கோபு (யாக் 2: 14). ஆகையால், நாம் மரியாவைப் போன்று இறைவனிடம் ஆழமான நம்பிக்கைக் கொண்டு, அந்த நம்பிக்கையை நம் வாழ்வில் வாழ்ந்து காட்ட முயற்சி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.