அருட்தந்தை பொலிசாரால் தாக்கப்பட்ட சம்பவம்-மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் பேரவை கண்டனம்.

மன்னார் மறைசாட்சியர் இராக்கினி திருத்தலப் பகுதியில் அதன் பரிபாலகரும்; பங்குத்தந்தையுமான அருட்தந்தை. அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார் மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதும், அவமதித்து நடத்த எத்தனித்ததையும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க சமுகம் வன்மையாக கண்டிக்கின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மறைமாவட்டப் பொது நிலையினர் பேரவையின் பொதுச் செயலாளர் எஸ்.சதீஸ் கண்டன அறிக்கை ஒன்றை இன்று (19) விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
குறித்த பகுதியில் திட்டமிட்ட வகையில் மண் அகழ்வு நடை பெறுவதாகவும், அதனால் அப்பகுதி வாழ் குடி மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதுடன் தேசிய சொத்துகள் சுறண்டப்படுவதாகவும் தெரிவித்து மக்கள் பங்குத்தந்தையிடம் அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து தம்மை காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10.12.2019 அன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இக்குறிப்பிட்ட பிரதேசத்தில் மண்அகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில் மன்னார் தீவுப்பகுதி தாழ் நிலப் பிரதேசமாக காணப்படுவதுடன் அடிக்கடி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டும் வருவதால் இந்நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்யுமாறு அரச அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே புதன் கிழமை (18)மண் அகழ்வு தொடர்ந்த போது அதை செய்ய வேண்டாம் என கூறி தடுக்க முனைந்த மக்களையும், பங்குத்தந்தையையும் அவ்விடத்திற்கு வந்த பொலிசார் அவமரியாதையாக நடத்தவும், தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதுடன் மிரட்டியும் பங்குத்தந்தையை தாக்கியும் உள்ளனர்.

சகல மதத்தினரும் சமமாக மதிக்கப்படுவதையும், மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் சூழலையும் உருவாக்கியுள்ள புதிய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் ஒரு மத குரு மீது இலங்கை பொலீஸ் உத்தியோகத்தரின் மேற்படி நடவடிக்கை மன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க மக்களையும் தாண்டி ஒட்டு மொத்த மக்களையும் விசனத்திற்கும், அதிருப்திக்கும் தள்ளியுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் போற்றி மதிக்கத்தகு வணக்கத்துக்குரிய மதகுருக்கள் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். ஜனநாயக நாட்டில் வாழுகின்ற எமக்கு இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து உடனடி விசாரணையும் தக்க நீதியும் கிடைக்க உரியவர்கள் வழி செய்யுமாறு நாம் வலியுறுத்த விளைகின்றோம்.

மலர்ந்திருக்கின்ற ஆட்சியில் பொறுப்புமிகு பொலிஸ் அதிகாரிகள் மக்களின் பாதுகாப்பை பேண வேண்டிய பெரும் கடப்பாடு உடையவர்களே இவ்வாறு மிலேச்சத்தனமாக நடந்து கொள்வது எந்தவகையிலும் மன்னிக்க முடியாத ஒன்றாகும்.

எனவே கத்தோலிக்க பொது மக்களின் மனங்களின் ரணங்களை மேலும் ஆழப்படுத்தாது உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பொறுப்பான அதிகாரிகளை கேட்டு நிற்கின்றோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.