மீட்பு, இறைவனால் விரும்பி வழங்கப்படும் கொடை
பாலை நிலம் பூத்துக் குலுங்கும் என்று இறைவாக்கினர் எசாயா பயன்படுத்தியுள்ள உருவகத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 19, இவ்வியாழனன்று தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருப்பலியாற்றிய திருத்தந்தை, கருவுற இயலாத நிலையில் இருந்த எலிசபெத் மற்றும் சிம்சோனின் தாய் ஆகிய இருவரைக் மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.
கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை
பிள்ளைப்பேறு இல்லாத இரு பெண்கள் கருத்தாங்குவது, வெறும் புதுமை மட்டுமல்ல, மாறாக, கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற உண்மையை நம் நம்பிக்கையின் அடித்தளமாக இச்செயல் நிறுவுகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
மீட்பு, இறைவனால் விரும்பி வழங்கப்படும் கொடை என்பதை உணர்த்தும் இரு அடையாளங்களாக திருமுழுக்கு யோவானும், சிம்சோனும் விளங்குகின்றனர் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.
மீட்பை நம் முயற்சிகளால் வாங்க முடியாது
நாம் கத்தோலிக்கர் என்பதாலோ, நாம் தவறாமல் கோவிலுக்குச் செல்கிறோம், உண்ணா நோன்பைக் கடைபிடிக்கிறோம் என்பதாலோ, நாம் மீட்படைவதில்லை. மீட்பு என்பதை நம் முயற்சிகளால் வாங்கிவிட முடியாது, மாறாக, அதை இறைவனிடமிருந்து வரும் கொடையாக மட்டுமே பெறமுடியும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
நம் வாழ்வில் நிகழும் அனைத்தும் இறைவனின் அருள் வரம் என்பதை ஏற்றுக்கொள்ளும் பணிவுள்ள மனதைப் பெறுவதற்கு செபிப்போம் என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு தயாரிப்பு
மேலும், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு நம்மையே எவ்விதம் தயாரிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வியாழனன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டார்.
“இன்னும் ஒரு வாரத்தில் கிறிஸ்மஸ் வந்துவிடும். இந்த விழாவைக் கொண்டாட தயாரிக்கும்போது, ‘என்னை நானே எப்படி தயாரிக்கிறேன்?’ என்ற கேள்வியைக் கேட்போம். குடிலை உருவாக்குவது, சிறந்ததொரு தயாரிப்பு” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
Comments are closed.