குடிபெயர்ந்தோர் நாளையொட்டி, திருத்தந்தையின் டுவிட்டர்

அனைத்துலக குடிபெயர்ந்தோர் நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

“இன்றைய காலத்தில் நடைபெறும் குடிபெயர்தல் விடுக்கும் சவால்களுக்கு நாம் தரும் பதிலிறுப்பை, நான்கு வினைச்சொற்களில் சுருக்கிக் கூறலாம்: வரவேற்றல், காப்பாற்றுதல், ஊக்குவித்தல், மற்றும், ஒருங்கிணைத்தல். இவற்றை நாம் நடைமுறைப்படுத்தினால், இறைவன் மற்றும் மனிதரின் நகரை கட்டியெழுப்ப உதவி செய்வோம்” என்ற சொற்களை திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

அத்துடன், டிசம்பர் 13ம் தேதி, கடந்த வெள்ளியன்று, தன் அருள்பணித்துவ வாழ்வின் 50ம் ஆண்டு நிறைவும், டிசம்பர் 17ம் தேதி, இச்செவ்வாயன்று, தன் 83வது பிறந்தநாளும் இடம்பெற்றதையடுத்து, தனக்கு வாழ்த்துக்களையும், செபங்களையும் அனுப்பியிருந்த அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், நன்றி தெரிவித்தார்.

“என் அருள்பணித்துவ ஐம்பதாம் ஆண்டு நிறைவுக்கும், என் பிறந்தநாளுக்கும், பல்வேறு இடங்களிலிருந்து, நல் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அனுப்பியிருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். உங்கள் செபங்கள் என்ற கொடைக்காக சிறப்பான முறையில் நன்றி கூறுகிறேன்” என்பது திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டரில் இடம்பெற்ற சொற்களாக அமைந்தன.

டிசம்பர் 18, இப்புதன் முடிய, @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,254 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற பெயரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, வெளியிடப்படும் புகைப்படங்கள், மற்றும், காணொளிகள் அடங்கிய instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 810 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 64 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன

Comments are closed.