டிசம்பர் 13 : நற்செய்தி வாசகம்

மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, `நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.

எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ `அவன் பேய் பிடித்தவன்’ என்கிறார்கள். மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார்.

இவர்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள்.

எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
காரணமின்றி விமர்சிப்பவர்கள்

நிகழ்வு

பிரபல சொற்பொழிவாளர் ஒருவர் இருந்தார். அவருடைய சொற்பொழிவைக் கேட்டு பலரும் அவரை வியந்து பாராட்டினார்கள். ஒருவர் மட்டும், ‘அவருக்குச் சரியாகச் சொற்பொழிவாற்றத் தெரியவில்லை’ என்று விமர்சித்துக்கொண்டே இருந்தார். இது அந்தப் பிரபல சொற்பொழிவாளருக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்தது. இப்படியிருக்கையில் ஒருநாள் அவரைப் பார்ப்பதற்கு அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வந்தார். அவர் அந்த நண்பரிடம் நடந்ததை எடுத்துச் சொன்னார்.

அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட அவருடைய நண்பர் அவரிடம், “நண்பா! நான் சொல்வதைப் பொறுமையாக கேள்! ஒருவேளை உன்னை விமர்சிக்கின்றவரின் விமர்சனத்தில் உண்மை இருப்பின், நீ சொற்பொழிவாற்றுவதைச் சரிசெய்; இல்லையென்றால், அதைக் கண்டுகொள்ளாதே” என்றார். நண்பர் சொன்ன இந்த ஆலோசனையை ஆழமான சிந்தித்துப் பார்த்த அந்தப் பிரபல சொற்பொழிவாளர், தன்னுடைய சொற்பொழிவில் குறையொன்றுமில்லை… பொறாமையால்தான் அவர் இப்படி விமர்சித்துக் கொண்டிருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்தார். இதற்குப் பின்பு அவர் அந்த விமர்சகருடைய விமர்சனத்தைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து நல்லமுறையில் சொற்பொழிவாற்றி வந்தார்.

இந்த நிகழ்வில் வருகின்ற விமர்சகரைப் போன்றுதான் இன்றைக்குப் பலர் காரணமில்லாமல் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். இப்படித் தேவையில்லாமல் விமர்சிப்பவர்கள் மட்டில் நாம் எப்படி நடந்துகொள்வது? இயேசு தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

யோவானும் இயேசுவும் சொன்னதைக் காதுகொடுத்துக் கேட்காமல், அவர்களைக் கண்மூடித்தனமாக விமர்சித்தவர்கள்

நற்செய்தியில் இயேசு, தன்னுடைய காலத்தில் வாழ்ந்த மக்கள், சந்தை வெளியில் விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள் என்று பேசுகின்றார். அதற்கு முக்கியமான காரணம், எளிமையான அதே நேரத்தில் தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்த திருமுழுக்கு யோவான் மக்கள் நடுவில் வந்தபோது, அவர்கள் அவரைப் பேய்பிடித்தவன் என்று விமர்சனம் செய்தார்கள். அவருக்கு முற்றிலும் மாறாக, மக்களோடு உண்டும் குடித்தும் அவர்களோடு பழகியும் வந்த இயேசுவைப் பெருந்தீனிக்காரன், பாவிகளின் நண்பன் என்று விமர்சித்தார்கள். இதனாலேயே இயேசு அவர்களை, சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள் என்று சாடுகின்றார்.

இதில் நாம் கவனிக்கவேண்டியது, மக்கள் திருமுழுக்கு யோவான் போதித்த மன்மாற்றச் செய்தியையும் இயேசு போதித்த விண்ணரசு பற்றிய நற்செய்தியையும் சிறிதளவுகூட செவிமடுக்கவில்லை என்பதுதான். இறைவாக்கினர் எசாயா உரைப்பாரே, “கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இருக்கும் மக்கள்” என்று (எசா 43:8). அதுபோன்றுதான் இயேசுவின் காலத்தில் இருந்த மக்கள் திருமுழுக்கு யோவான் என்ன போதித்தாரோ அதைக் கேளாமலும், இயேசு என்ன போதித்தாரோ அதைக் கேளாமலும் வெறுமென அவர்கள் இருவரையும் விமர்சித்து மட்டுமே வந்தார்கள்.

இன்றைக்கும்கூட ஒருவர் என்ன சொன்னார் அல்லது என்ன சொல்ல வருகின்றார் என்பதைச் செவிகொடுத்துக் கேளாமல், வெறுமென விமர்சித்துக்கொண்டு மட்டும் இருக்கின்றார்கள். இவர்கள் இயேசு குறிப்பிடுவது போன்று சிறுபிள்ளைகள் அல்லது முதிர்ச்சியற்றவர்கள். இத்தகையோர் தங்களுடைய வாழ்வைத் தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, நேரிய வழியில் நடப்பது மிகவும் நல்லது.

செயல்களே சான்று

திருமுழுக்கு யோவானையும் தன்னையும் காரணமின்றி விமர்சித்தவர்கள் யாவரும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள் என்று குறிப்பிடும் இயேசு, ஒருவர் முதிர்ச்சியடைந்தவராக அல்லது கடவுளுக்கு உகந்தவராக இருக்க என்ன செய்வது என்பதையும் குறித்துப் பேசுகின்றார். ஆம், ஒருவர் முதிர்ச்சியடைந்தவராக, கடவுளுக்கு உகந்தவராக இருக்க அவருடைய செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும். இது குறித்து இன்னும் தெளிவுபெற நாம், யோவான் நற்செய்தி 6: 28-29 ல் வருகின்ற இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இப்பகுதியில் யூதர்கள் இயேசுவிடம், “எங்களுடைய செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்கின்றபோது, இயேசு அவர்களிடம், “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்புடைய செயல்” என்று குறிப்பிடுவார். ஆம், ஒருவர் முதிர்ச்சியடைந்தவராகவும் கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்க, அவர் கடவுள் அனுப்பிய இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அந்த நம்பிக்கையைச் செயலில் வெளிப்படுத்தவேண்டும்.

Comments are closed.