டிசம்பர் 11 : நற்செய்தி வாசகம்

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————
“என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது”

நிகழ்வு

ஒரு ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியர், தனக்கு முன்பாக இருந்த கரும்பலகையில், “என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்ற சொற்களை எழுதிவிட்டு, “நுகம் என்றால் என்ன?” என்று கேட்டார். உடனே ஒரு மாணவி எழுந்து, “வண்டியை இழுத்துச் செல்லும் காளை மாட்டின் கழுத்தில் வைப்பார்களே ஒரு மரக்கட்டை. அதுதான் நுகம்” என்றாள்.

“மிகவும் அருமை” என்று அந்த மாணவியைப் பாராட்டிய ஆசிரியர் மாணவர்களிடம் மீண்டுமாக, “கடவுளின் நுகம் என்றால் என்ன?” என்று கேட்டார். மாணவர்கள் நடுவில் நீண்ட அமைதி நிலவியது. அப்பொழுது ஒரு மாணவன் எழுந்து, “கடவுளின் நுகம் என்பது, அவர் தன்னுடைய கையை நம்முடைய கழுத்தில் போட்டுக்கொள்வது” என்றான். அந்த மாணவனிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்த்திராத அந்த ஆசிரியர், “கடவுளின் நுகம் என்பதற்கு இதைவிட சிறப்பானதொரு பதிலை யாரும் தரமுடியாது” என்று அவனை வெகுவாகப் பாராட்டினார்.

ஆம், கடவுள் தன்னுடைய கையை நம்முடைய கழுத்தில் அல்லது தோள்மேல் போடும்போது சுமையாக இருக்குமா என்ன? அது சுகம்தரும் சுமையாக அல்லவா இருக்கும். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு தரும் இளைப்பாறுதலைக் குறித்துப் பேசுகின்றது. அவர் தருகின்ற இளைபாறுதல் எத்துணை சிறப்பானது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சட்டம் என்ற பெருஞ்சுமை

நற்செய்தியில் இயேசு, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்…” என்று கூறுகின்றார். இயேசு இங்கு குறிப்பிடுகின்ற ‘சுமை’ என்பது எதைச் சுட்டிக்காட்டுகின்றது என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

இயேசுவின் காலத்தில் யூதர்கள், உரோமையர்களின் அதிகாரத்தின்கீழ் இருந்தார்கள். அவர்கள் யூதமக்களைப் பலவிதங்களில் சுரண்டினார்கள், வஞ்சித்தார்கள். அவை மக்களுக்குச் சுமையாக இருந்தன. அவை ஒருபுறமிருக்க இருந்தாலும், யூத சமயத் தலைவர்களாக இருந்த பரிசேயர்கள், ‘அதைச் செய்’, ‘இதைச் செய்யாதே’ என்று சட்டங்களின் பெயரில் மக்கள்மீது அதிகமான சுமைகளை இறக்கி வைத்தார்கள் (மத் 23: 4). இதனால் சாதாரண மக்கள் சொல்லொண்ணா வேதனையை அன்றாடம் அனுபவித்து வந்தார்.

இயேசுவின் நுகம் எளிய, சுகமான சுமை

சாதாரண மக்கள் பரிசேயர்கள் விதித்த சட்டங்களால் சொல்லொண்ணாத் துயரத்தை அடைந்துகொண்டிருந்த தருணத்தில்தான் ஆண்டவர் இயேசு, “எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று கூறுகின்றார். இங்கு இயேசு தருகின்ற இளைபாறுதல் எத்தகையது? அதைப் பெற்றுக்கொள்வதற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும்? என்பதன பற்றித் தெரிந்துகொள்வத் நல்லது.

இயேசு தருகின்ற இளைப்பாறுதால் துன்பமே இல்லாத வாழ்வு என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. இன்றைக்குப் பலர் இயேசுவைப் பின்பற்றி, அவர் வழியில் நடந்தால் துன்பமே இருக்காது என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இயேசுவைப் பின்பற்றுகின்றவர்களுக்குத்தான் துன்பங்களும் இடர்களும் (மத் 10: 17-42) அதிகம் வரும். ஆனால், அந்தத் துன்பங்கள், இடர்பாடுகளுக்கு நடுவில் இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொண்டு நாம் வாழ்ந்தோமெனில் அவையெல்லாம் துன்பமாகத் தெரியாது என்பது உறுதி.

இயேசு ‘என் நுகம்’ என்று குறிப்பிடுகின்றாரே, அதுவும் என்னவாக இருக்கும் எனத் தெரிந்துகொள்வது நல்லது. என் நுகம் என்று இயேசு குறிப்பிடுவது, அவரிடம் விளங்குகின்ற கனிவும் மனத்தாழ்மையும்தான். ஆம், நாம் நம்முடைய வாழ்க்கையில் இயேசுவிடம் விளங்கிய கனிவையும் மனத்தாழ்மையையும் கொண்டு வாழ்கின்றபோது, நமக்கு உண்மையான இளைப்பாறுதல் கிடைக்கும். புனித பவுல் இயேசுவின் உள்ளக்கிடக்கையை அல்லது அவரது மனநிலையை அறிந்தததால்தான் எபேசு நகரச் திருஅவையாரிடம், “முழு மனத்தாழ்மையுடனும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்” (எபே 4:2).

ஆதலால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் அவர் தருகின்ற உண்மையான இளைப்பாற்றியைப் பெற்றுக்கொள்வதற்கு அவரிடம் விளங்கிய கனிவோடும் மனத்தாழ்மையோடும் வாழ்வது இன்றியமையாதது. பலருடைய உள்ளத்தில் கனிவும் மனத்தாழ்மையும் இருப்பதில்லை. அதனாலேயே அவர்கள் மனநிம்மதியின்றி அலைந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் நாம் இயேசு தருகின்ற இளைப்பாற்றியைப் பெற அவரிடம் விளங்கும் கனிவையும் மனத்தாழ்மையையும் நமதாக்குவோம்.

Comments are closed.