பெண் குலத்தை மதிக்கக் கற்பிப்பது, குடும்பத்தின் கடமை

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் குறித்து தலத்திருஅவை கவலையும் வெட்கமும் கொள்வதாக, உத்திரப்பிரதேசத்தின் இலக்னோ மறைமாவட்டத்தின் ஆயர், ஜெரால்டு ஜான் மத்தியாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

தன் மறைமாவட்டப் பகுதியில், அண்மையில், 23 வயதுடைய பெண் ஒருவர், தீயிட்டுக் கொளுத்தப்பட்டது, ஹைதராபாத்தில் கால்நடை இளம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைகளுக்குப்பின் எரிக்கப்பட்டது ஆகியவற்றைக் குறித்து கவலையை வெளியிட்ட இலக்னோ ஆயர், மத்தியாஸ் அவர்கள், இவை மனித மாண்புக்கு எதிரான பெருங்குற்றம், மற்றும், பாதுகாப்பு குறித்த பெரும்பிரச்னை என்று கூறினார்.

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வைத் தந்து, தன் தியாகங்கள் வழியாக நம்மை வளர்த்தெடுக்கும் பெண் குலத்தை மதிக்கக் கற்றுத் தருவது, ஒவ்வொரு குடும்பத்திலும் இடம்பெற வேண்டும் எனவும் கூறினார், ஆயர் மத்தியாஸ்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது ஒரு பக்கம் கவலையை தருவதுடன், இக்குற்றங்கள் குறித்து பேசுவோருக்கு அச்சுறுத்தலும், அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுவது, மேலும் அச்சத்தை பிறப்பிக்கின்றது என்றார் ஆயர்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், Unnao நகருக்கு சாட்சி சொல்ல சென்ற வழியில், நால்வரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடமும் பாலியல் தொடர்புடைய குற்றம் ஒன்று நிகழ்வதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன

Comments are closed.