ஜூன் 13 : நற்செய்தி வாசகம்

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!

அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————–

“உன் முக ஒளி வீசச் செய்யும்”

பொதுக்காலத்தின் பத்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I 2 கொரிந்தியர் 1: 18-22

திருப்பாடல் 119: 129-130, 131-132, 133, 135 (135a)

II மத்தேயு 5: 13-16

“உன் முக ஒளி வீசச் செய்யும்”

ஒளி பெற்று; ஒளி தருவோம்

நூற்று ஐம்பது திருப்பாடலில் ‘எவரெஸ்ட் சிகரம்’ போன்று உயர்ந்திருக்கின்ற இருக்கின்ற திருப்பாடல் என்றால் அது இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 119 தான். இத்திருப்பாடலின் ஆசிரியர், “உம் ஊழியர்மீது உமது முக ஒளி வீசிச் செய்யும்” என்று மன்றாடுகின்றார். கடவுளே ஒளியாய் இருப்பதால், அவரது முக ஒளி தன்மீது வீசச் செய்யுமாறு திருப்பாடல் ஆசிரியர் மன்றாடுவது கவனிக்கத் தக்கது.

இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்” என்கிறார். நாம் உலகிற்கு ஒளியாய் இருக்க வேண்டும் என்றால், கடவுளின் ஒளி நமக்குத் தேவைப் படுகின்றது. அவரது ஒளியில்லை என்றால், நாம் இடறிவிழ நேரிடும்.

நாம் எப்படி உலகிற்கு ஒளியாய் இருப்பது என்பதற்கு, இன்றைய முதல் வாசகத்தில் பவுல் அதற்கான விளக்கத்தைத் தருகின்றார். இரண்டாம் வாசகத்தில் பவுல் கடவுளைப் பற்றிக் குறிப்பிடும்போது, கடவுள் உண்மையுள்ளவராய் இருக்கின்றார் என்கிறார். ஆண்டவர் இயேசுவின் வாழ்வு இதற்கு மிகப்பெரிய சான்று. ஏனெனில், அவர் ஆம் என்று உண்மையை மட்டுமே பேசினார்.

ஆகையால், நாம் இயேசு சொல்வது போல் உலகிற்கு ஒளியாய் இருக்கவேண்டும் என்றால், அவரைப் போன்று உண்மையுள்ளவராய் இருக்கவேண்டும். உண்மையை மட்டுமே பேசுபவர்களாக இருக்கவேண்டும்.

கதிரவனும் மலரும்

ஹென்றி டர்பன்வில்லி என்ற எழுத்தாளர் தன்னுடைய ‘The Best is Yet to Be’ என்ற நூலில் குறிப்படும் நிகழ்வு இது.

ஒரு சமயம் இலண்டனில் மலர்க் கண்காட்சி நடைபெற்றபோது, அதையொட்டி ஒரு போட்டியும் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஒரு சிறுமிக்கு அவள் அற்புதமாக வளர்த்திருந்த மலர்ச்செடிக்கு முதற் பரிசு கிடைத்தது.

பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவளிடம், “கடுமையாகப் பனிபொழியும் காலச் சூழ்நிலையில், எப்படி உன்னால் இவ்வளவு அற்புதமாக இந்த மலர்ச்செடியை வளர்க்க முடிந்தது?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுமி, “இந்தச் செடியை நான் கதிரவன் மேலே படுகிற மாதிரி வைத்திருந்தேன். அதனால்தான் இந்த மலர்ச்செடி இவ்வளவு அற்புதமாக வளர்ந்திருக்கின்றது” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

சிறுமி, கதிரவன் மேலே படுகின்ற மாதிரி மலர்ச்செடியை வைத்திருந்ததால், அது அற்புதமாக வளர்ந்தது. நாமும் உலகின் ஒளியான இயேசுவின் ஒளியில் நடந்தால், நம்மாலும் உலகிற்கு ஒளியாய் இருக்க முடியும்.

Comments are closed.