ஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18

அக்காலத்தில்

மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவரிடம், “ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்’ எனச் சொல்” என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————–

“நான் ஆண்டவரைக் கண்டேன்”

I திருத்தூதர் பணிகள் 2: 36-41

திருப்பாடல் 31: 4-5, 18-19, 20, 22 (5b)

II யோவான் 20: 11-18

“நான் ஆண்டவரைக் கண்டேன்”

தேடுவோர் கண்டடைகின்றனர்

திருத்தூதர்கள் இயேசுவின் வார்த்தையை மக்களுக்கு அறிவித்தவர்கள். அவர்களுக்கே இயேசுவின் வார்த்தையை அறிவித்த ஒருவர் இருக்கின்றார் என்றால், அவர்தான் மகதலா மரியா. இந்த மகதலா மரியா, ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு எப்போதும் நாம் நன்றியுடைவர்களாக இருக்கவேண்டும் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டும்கூட

இயேசுவின் ஆண் சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி தங்களை அறைக்குள் அடைத்துக் கொண்டு வாழ்ந்த போது, மகதலா மரியா வாரத்தின் முதல் நாளில், விடியற்காலை வேளையில் இயேசு அடக்கம் செய்து வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு விரைந்து செல்கின்றார். அங்கே இயேசுவின் உடல் இல்லாததைக் கண்டு, என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ என்று தெரியவில்லையே எனக் கண்ணீர் விட்டு அழுகின்றார். முடிவில் தன்னுடைய தேடுதலின் விளைவாக உயிர்த்த ஆண்டவரை முதன்முதலில் கண்டுகொள்ளும் பேற்றினைப் பெறுகின்றார்.

மகதலா மரியா இயேசுவைக் கண்டுகொண்டது மட்டுமல்லாமல், அவர் சொன்ன செய்தியைத் திருத்தூதர்களுக்கு அறிவிக்கின்றார். இவ்வாறு திருத்தூதருக்கே திருத்தூதர் ஆகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் உயிர்த்த ஆண்டவரைக் கண்டு கொண்ட பின், மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று மூவாயிரம் பேர் ஒரே நாளில் திருமுழுக்குப் பெறுகின்றார்கள்.

ஆண்டவரை நாம் தேடவேண்டும் அது நாம் செய்ய வேண்டிய முதன்மையான செயல். அப்படித் தேடிக் கண்டடைந்த நாம், அவரை மற்றவருக்கு அறிவிக்க வேண்டும். அது நாம் செய்யவேண்டிய இரண்டாவது செயல். இவ்விரு செயல்களையும் செய்வதற்கு ஓர் அடிப்படைக் காரணம் இருக்கின்றது. அது என்னவென்றால், இன்று நாம் பதிலுரைப் பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 33 இல் சொல்லப்படுவது போல, ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

எனவே, பேரன்பு மிக்க ஆண்டவரைத் தேடிவோம். அவரை மற்றவருக்கும் அறிவிப்போம்.

ஆண்டவரைத் தேடிய துறவி

நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித ஜான் கிறிசோஸ்தமிற்குக் கடவுளைக் காணும் ஆவல் ஏற்பட்டது. ஆகையால், இவர் காட்டிற்குச் சென்று, கடுந்தவம் இருக்கத் தொடங்கினார். நாளடைவில் இவரது உடல் பலவீனமடையவே இவரால் தொடர்ந்து தவமிருக்க முடியவில்லை. அதே நேரத்தில் இவருக்குக் கடவுள் தன்னோடு இருக்கின்றார் என்பதும், அவரது துணையால் எதையும் செய்யவேண்டும் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இவர் தவத்தைப் பாதிலேயே முடித்துக்கொண்டு திரும்பி வந்தார். சில ஆண்டுகள் கழித்து இவர் கான்ஸ்டான்டிநோப்பிளின் ஆயராக உயர்த்தப்பட்டார். அங்கிருந்த யுடேசியா என்ற அரசி ஒழுக்கக்கேடாக வாழ்ந்தால், அவரைக் கடுமையாகக் கண்டித்தார் இவர். இதனால் இவர் அரசியால் பலமுறை நாடு கடத்தப்பட்டார்.

இப்படி யூடோசியா அரசி தன்னைப் பலமுறை நாடு கடத்தியபோதும் தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாக இருந்ததற்குக் காரணமாக ஜான் கிறிஸ்சோஸ்தம் சொல்லும் வார்த்தைகள் இதுதான்: “சாவைக் கண்டு அஞ்சமாட்டேன். ஏனெனில், நான் சாக நேர்ந்தால், கிறிஸ்துவோடு இருப்பதற்கு வாய்ப்பாக இருப்போம். நான் நாடு கடத்தப்படுவதற்கும் அஞ்ச மாட்டேன். ஏனெனில், எல்லா இடத்திலும் கடவுள் இருக்கின்றார். வறுமையிலும் வளமையிலும் என்னால் வாழ முடியும்.”

ஆண்டவரைத் தேடிக் கண்டுகொண்ட புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அவருக்குச் சான்று பகர்ந்தது மிகவும் சிறப்பானது. ஆண்டவர் இயேசுவை திருப்பலியின் மூலமாகவும் அருளடையயாளங்கள் மூலமாகவும் கண்டுகொள்ளும் நாம் அவருக்குச் சான்று பகர்கின்றோமா? சிந்திப்போம்.

.

Comments are closed.