#அந்தோனியாரின்மன்றாட்டுமாலை இறந்த ஓராண்டிற்குள் புனித நிலைக்கு உயர்த்தப்பட்டவர்”

அந்தோனியாருடைய கல்லறையில் ஒவ்வொரு நாளும் ஏராளமான புதுமைகள் நடந்ததால், அவரை உடனடியாகப் புனிதராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை திருத்தந்தைக்குச் சென்றது. அப்போது திருத்தந்தையாக இருந்தவர் ஒன்பதாம் கிரகோரி. அவர் இது தொடர்பாக ஓர் ஆய்வுக்குழுவை அமர்த்தி, தன்னிடம் அறிக்கையினைச் சமர்பிக்கச் சொன்னார். அக்குழுவும் அந்தோனியார் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு, அறிக்கையினைத் திருத்தந்தையிடம் சமர்பித்தது.
தன்னிடம் சமர்பிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளைக் கொண்டு திருத்தந்தை அந்தோனியாரைப் புனிதராக அறிவிக்கவிருந்த வேளையில். ஒருசில கர்தினால்கள். “அந்தோனியாரை அவ்வளவு அவசரமாகப் புனிதராக அறிவிக்க வேண்டிய தேவையென்ன?” என்று கொடியை உயர்த்தினார்கள். இதனால் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி அந்தோனியாரைப் புனிதராக அறிவிப்பதைத் தாமாதப்படுத்தினார்.
இதற்கு நடுவில் அந்தோனியாரைப் புனிதராக அறிவிப்பதற்கு எதிராகப் பேசிய கர்தினால்களில் ஒருவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் திருத்தந்தை புதிதாக ஓரு கோயிலை நேர்தளிக்கும் வழிபாட்டில் – அர்ச்சிப்புச் சடங்கில் – திருப்பீடத்தில் வைப்பதற்கான திருப்பண்டம் எங்கே?” என்று கேட்டார். உடனே, “திருப்பண்டம் எதுவும் இங்கே இல்லை” என்று கூட்டத்திலிருந்து பதில் வந்தது,
அப்போது கோயிலுக்குள் ஒருவரது சவப்பெட்டி கொண்டு வரப்பட்டது. அதைப் பார்த்துவிட்டுத் திருத்தந்தை, “அது திருப்பண்டமாகத்தான் இருக்கும். அதைத் தீருப்பீடத்தில் வைக்கலாம்” என்று சொல்ல, “அது திருப்பண்டம் அல்ல, இறந்த ஒருவரை அடக்கம் செய்ய இங்கே கொண்டு வந்திருக்கின்றார்கள்” என்று பதில் வந்தது, “எதற்கும் அந்தப் பெட்டியின் மூடியை அகற்றுங்கள்” என்று திருத்தந்தை சொன்னதும், அங்கிருந்தவர்கள் பெட்டியின் மூடியை அகற்றினார்கள். அந்தப் பெட்டியினுள் இருந்த உடல் மிகவும் அழகானதும், அதிலிருந்து அருமையான வாசனையும் வருவதைப் பார்த்துவிட்டு அங்கிருந்தவர்கள் மெய்ம்மறந்து நின்றார்கள்.
கனவில் தான் கண்ட உடல் அந்தோனியாருடையது என்பதை உணர்ந்த கர்தினால் அதை மற்ற கர்தினால்களிடம் சொல்ல, அவர்கள் அந்தோனியாரைப் புனிதராக அறிவிப்பதற்குத் தெரிவித்து வந்த எதிர்ப்பைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். இதையடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி 1232, மே 30 நாள் அந்தோனியாரைப் புனித நிலைக்கு உயர்த்தினார். இவ்வாறு அந்தோனியார் இறந்து ஓராண்டிற்குள்ளாகவே புனித நிலைக்கு உயர்த்தப்பட்டதால், “இறந்த ஓர் ஆண்டிற்குள் புனித நிலைக்கு உயர்த்தப்பட்டவரான புனித அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்” என்கிறோம்.
புனித அந்தோனியாரின் மன்றாட்டு மாலையில் இடம்பெறும் இந்த மன்றாட்டு நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.
அ. கடவுளை மாட்சிப்படுத்தியவர்
இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும் துன்புறும் ஊழியரைப் பற்றிய பாடல்களுள் ஒன்று 49 வது அதிகாரத்தில் இடம்பெறும். இந்த அதிகாரத்தில், வரும் மூன்றாவது இறைவார்த்தை, “நீ என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்” என்ற வார்த்தைகளைத் தாங்கியிருக்கும். ஆண்டவராகிய கடவுள் துன்புறும் ஊழியனிடம் சொல்வதாக இவ்வார்த்தைகள் இருந்தாலும் இது ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.
கடவுள் தந்திருக்கும் இந்த அழகிய வாழ்வினைக் கொண்டு கடவுளை மாட்சிப் படுத்த வேண்டும். துன்புறும் ஊழியனாம் இயேசு கடவுளை மாட்சிப்படுத்தினார். அவரைப் போன்று அந்தோனியாரும் கடவுளை மாட்சிப்படுத்தினார். எப்படியெனில் தன்னுடைய வல்லமைமிக்க போதனையாலும் முன்மாதிரியான வாழ்வாலும்!
தப்பறைக் கொள்கைகளால் திருஅவைக்கு அச்சுறுத்தல் நிலவியபோது, அந்தோனியார் தனது வல்லமை மிக்க போதனையால் தப்பறைக் கொள்கைகளுக்குச் சாவு மணியடித்தார். அதே வேளையில், அந்தக் காலத்தில் இருந்த போதகர்களைப் போன்று தன்னுடைய பெருமையை நிலைநாட்டாமல் கடவுளுக்குப் பெருமை சேர்த்தார். இதனாலேயே கடவுளும் அந்தோனியாரை மாட்சிப் படுத்தினார்.
ஆ. கல்லான இதயத்தை உடைத்து, உடைந்த நெஞ்சத்திற்கு மருந்திட்டவர்
“நான் போதனைக்கும்போது இரண்டு கருத்துகளை என்னுடைய மனத்தில் பதிய வைத்துக் கொள்வேன். ஓன்று கல்லான இதயத்தை உடைக்க வேண்டும். இரண்டு உடைந்து போன நெஞ்சத்திற்கு உருக்கொடுக்க வேண்டும்” – இப்படிச் சொன்னவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய மறைப்பணியாளரான ஜான் நியூட்டன் என்பவர்.
அந்தோனியாருடைய வாழ்வைப் பொறுத்த வரையில் அவர் உள்ளத்தில் செறுக்குடன் இருந்தவர்களையும், அநீதிக்குத் துணை போனவர்களையும், ஆண்டவர்மீது நம்பிக்கையில்லாமல் இருந்தவர்கiயும் கடுமையாகச் சாடினார். அதே வேளையில் தங்கள் பாவத்தை உணர்ந்து மனம் திரும்பி வந்தவர்களை ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக அவர்கள் உள்ளத்திற்கு மருந்திட்டார் அவர். இவ்வாறு அவர் காயப்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப் போட்டவர் என்ற அடிப்படையில் நல்ல ஆயராகவும் (எசே 34: 16) திகழ்ந்தார்.
இ. வாழ்வே சிறந்த போதனை
ஆப்ரிக்கக் கண்டத்தில் பல ஆண்டுகள் மருத்துவப் பணிக்கும் மறைப்பணியையும் ஆற்றிவிட்டு ஆல்பர்ட் சுவைட்சர் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்த போது, இரயில் நிலையத்தில் மூதாட்டி ஒருத்தி தன்னுடைய சுமையைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் ஆல்பர்ட் சுவைட்சர் அவர் போக வேண்டிய இடம் வரைக்கும் அவரது சுமையைச் சுமந்து கொண்டு சென்று அவருக்கு உதவினார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர், “எத்தனையோ மறையுரைகளைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் இன்றைக்குத் தான் ஒரு மறையுரை செயல்படுத்தப் பட்டதைப் கண்ணால் கண்டேன்” என்று எழுதினார்

Comments are closed.