வாழ்வுதரும்வார்த்தை (பிப்ரவரி 03)

பொதுக் காலத்தின் நான்காம் வாரம்
வெள்ளிக்கிழமை
I எபிரேயர் 13: 1-9
திருப்பாடல் 27: 1, 3, 5, 8b-9 (1a)
II மாற்கு 6: 14-29
“உன்னைக் கைவிட மாட்டேன்; உன்னைவிட்டு விலக மாட்டேன்”
ஆண்டவரே நமக்குத் துணை என நம்புவோம்
ஒருவர் தன்னுடைய வாழ்வில் எவ்வளவு பெரிய துன்பத்தைச் சந்தித்தாலும், அவருக்கு எதிராக ஒரு படையே திரண்டு வந்தாலும், அவர் ஆண்டவர்மீது உறுதியான நம்பிக்கையோடு இருந்தால், எதற்கும் அசைவுற மாட்டார். இதற்குச் சான்றாக இருப்பவர்கள்தான் இன்றைய இறைவார்த்தையில் இடம்பெறும் மனிதர்கள்.
இஸ்ரயேலின் மன்னராக இருந்த தாவீதுக்கு அவரது எதிரிகளிடமிருந்தும் துரோகிகளிடமிருந்தும் ஆபத்துகள் வந்த வண்ணமாய் இருந்தன. இந்நிலையில் அவர் மனிதரின் உதவியை நாடாமல், ஆண்டவரை மட்டுமே உறுதியாய் நம்பி இருந்தார். அதனால்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 27 இல், தாவீது, “ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கும் நான் அஞ்சி நடுங்க வேண்டும்? (1), “எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினாலும் என் உள்ளம் அஞ்சாது” (3), ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்” (5) என்கிறார்.
ஆண்டவர் தனக்குத் துணையாய் இருக்கின்றார் என்று நம்பியதால், தாவீதால் துன்பங்களுக்கு நடுவிலும் அவ்வளவு உறுதியாய் இருக்க முடிந்தது.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவைப் பற்றிக் கேள்விப்படும் ஏரோது மன்னன், அவரைத் திருமுழுக்கு யோவானாக இருக்குமோ, ‘அவரைத்தான் நான் தலைவெட்டிக் கொண்டுபோட்டேனே! ஒருவேளை கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்துவிட்டாரோ?’ என்று மனம் குழம்புகின்றான். தன் சகோதரனின் மனைவியோடு வாழ்ந்து வந்த ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவானாக இருக்கட்டும், இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவித்த இயேசுவாக இருக்கட்டும் அவர்கள் யாருக்குமே அஞ்ச இல்லை. காரணம் அவர்கள் கடவுள் தங்களோடு இருக்கின்றார் என்பதை உறுதியாய் நம்பினார்கள்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுள் கூறிய வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பேசுகின்றார்.
கடவுள் நம்மைக் கைவிடாமலும், விலகாமலும் இருக்கும்போது, நாம் எதற்கு எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்? அதனால் நாம் தாவீதைப் போன்று, திருமுழுக்கு யோவானைப் போன்று, இயேசுவைப் போன்று கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, அவருக்கு ஏற்புடையவற்றை நாடுவோம்.
கடவுள்மீது ஆழமான நம்பிக்கைகொண்டிருந்த அருள்பணியாளர்:
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் அவர். போர்களாலும் புரட்சியினாலும் அனாதைகளான குழந்தைகளை வைத்து அவர் ஒரு விடுதியை நடத்தி வந்தார்.
1829 ஆம் ஆண்டில் ஒருநாள் விடுதியில் இருந்த குழந்தைகளுக்கு உணவுகொடுக்க எதுவுமே இல்லாத ஒரு சூழ்நிலையில், பங்குக் கோயிலில் இருந்த புனித பிரான்சிஸ் ரோஜரின் திருவெஞ்சிதத்தைச் (Holy Relics) சமையற்கட்டிற்கு எடுத்து வந்து, அதற்கு முன் எப்படியாவது உணவு கிடைக்கவேண்டும் என்று இரவு வேண்டிவிட்டுத் தூங்கச் சென்றார் அவர்.
மறுநாள் காலையில், அவர் சமையற்கட்டைத் திறக்கும்போது வேண்டிய மட்டும் உணவுப் பொருள்களும் காய்கறிகளும் இருந்தன. உடனே அவர் கடவுள் தன்னுடைய வேண்டுதலைப் புனித ரோஜர் வழியாகக் கேட்டிருக்கின்றார் என்று கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். அந்த அருள்பணியாளர்தான் புனித ஜான் மரிய வியான்னி.
கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோரைக் கடவுள் ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதைப் புனித ஜான் மரியா வியான்னியின் மூலம் அறிந்துகொண்டோம். நாம் எப்போது ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழப் போகிறோம்?.
இறை வார்த்தை
“நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்” (யோவா 16: 32)
தீர்மானங்கள்:
நமது அடைக்கலப் பாறையான ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்போம்.
கண் முன்னே நடக்கும் அநியாயத்தை சுட்டிக் காட்ட முயற்சி செய்வோம்.
மனித பலவினத்தால் தவறு செய்ய நேர்ந்தாலும், அதிலிருந்து வெளிவர நல்லதோர் ஒப்புரவு அருளடையாளம் செய்வோம்.

Comments are closed.