வாசக_மறையுரை (டிசம்பர் 06)

திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I எசாயா 40: 1-11
II மத்தேயு 18: 12-14
“ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்”
ஆயனும் வழிதவறிச் சென்ற ஆடுகளும்:
நகர்ப்புறத்தில் இருந்த பங்குத்தளம் அது. அந்தப் பங்குத்தளத்தில் இருந்த பங்குப்பணியாளர், தன்னுடைய பங்கைச் சேர்ந்த இளைஞர்களைச் சிலர் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதாகக் கேள்விப்பட்டார் ஆகவே அவர் அந்த இளைஞர்களை அவர்களிடமிருந்து விடுவிக்கும் பொருட்டு, கடுமையாகப் போராடினார். இதனால் பெரிய பிரச்சனை ஏற்பட்டு, நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்தது.
நீதி மன்றத்தில் எதிர்த்தரப்பு வழக்குரைஞர் பங்குப் பணியாளரிடம், “அருள்பணியாளருக்கு இன்னொரு பெயர் மேய்ப்பரா?” என்றார். “ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்” என்று பங்குப் பணியாளர் சொன்னதற்கு, எதிர்த்தரப்பு வழக்குரைஞர், “மேய்ப்பர் என்றால், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களைப் பேணிக் காக்கவேண்டியதுதானே! எதற்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்?” என்றார். அதற்குப் பங்குப்பணியாளர், “நான் ஓநாய்களிடம் மாட்டிக்கொண்ட ஆடுகளை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். அதுவும் ஒரு மேய்ப்பரின் பணிதான்” என்றார். இதற்கு எதிர்த்தரப்பு வழக்குரைஞரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.
ஆம், ஒரு மேய்ப்பர் அல்லது ஓர் ஆயர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை நல்வழியில் வழிநடத்துவது மட்டுமல்லாமல், அவர்களை ஓநாய்களிடமிருந்து விடுவிக்கவேண்டும். அதுவும் அவரது கடமை. இன்றைய இறைவார்த்தை ஆண்டவர் இயேசு எப்படி நல்ல ஆயராக இருக்கின்றார் என்பதை எடுத்துக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கடவுளுக்கு ஒவ்வொருவரும் முக்கியம். ஒருவர் ஏழை என்பதற்காகவோ, பாவி என்பதற்காகவோ கடவுள் அவரைப் புறந்தள்ளி விடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இழந்துபோனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்தார் (லூக் 19:10).
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லும் காணாமல் போன ஆடு உவமை, இயேசுவுக்கு ஒவ்வொருவருக்கும் முக்கியம், அவர் இழந்து போனதை, அல்லது காணாமல் போனதைத் தேடிக் கண்டுபிடிக்கவே வந்திருக்கின்றார் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது. வழிதவறிப் போன ஆடு, போலி இறைவாக்கினர்களின் பின்னால் போயிருக்கலாம். அதனால் இயேசுவே அந்த ஆட்டைத் தேடிச் சென்று மீட்கின்றார்.
இயேசு காணாமல் ஆட்டைத் தேடிச் செல்வது, இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் வருகின்ற, “ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்…” என்ற இறைவார்த்தையை நிறைவுசெய்கின்றது. ஆண்டவர் இயேசு தனக்கு ஒவ்வொருவரும் முக்கியம் என்று வழிதவறிச் சென்றவர்களைத் தேடிச் சென்றதுபோல, நாமும் வழிதவறிச் சென்றவர்களைத் தேடிச் சென்று, ஓர் ஆயருக்குரிய கடமையைச் செய்வோம்.
சிந்தனைக்கு:
ஆயர் என்பவர் தன் மந்தைக்கு முன்மாதிரியாய் இருக்கவேண்டும். அப்போதுதான் ஆடுகள் மந்தையை விட்டு விலகிச் செல்லாது.
வலியவர்கள் மட்டுமல்ல, வறியவர்களும் மந்தையில் இருப்பார்கள். அவர்கள்மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஆடுகள் ஆயரின் குரல் கேட்டு நடப்பது மிகவும் முக்கியம்.
இறைவாக்கு:
‘உங்களை விட்டு நான் சென்றபிறகு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியும்’ (திப 20:29) என்று பவுல் கூறுவார். நம் நடுவிலும் கொடிய ஓநாய்கள் இருக்கலாம். அத்தகையோரிடமிருந்து நாம் மந்தையைக் காத்து, மந்தைக்கு முன்மாதிரியாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.