டிசம்பர் 3 : நற்செய்தி வாசகம்

படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20
அக்காலத்தில்
இயேசு பதினொருவருக்கும் தோன்றி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.
இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும்அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————————
டிசம்பர் 03 – புனித பிரான்சிஸ் சவேரியார் விழா
மறையுரைச் சிந்தனை
சவேரியார் இந்திய நாட்டில் கடலோரக் கிராமங்களில் உள்ள ஓர் ஊரில் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருக்கும்போது அவ்வூரைச் சுற்றி அரபு நாடுகளைச் சேர்ந்த கொள்ளையர்கள் சூழ்ந்துகொண்டு சூறையாடத் தொடங்கினார்கள்.
இதுபோன்ற நிகழ்வுகள் கடற்கரைக் கிராமங்களில் எப்போதும் நடக்கும் ஆதலால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அஞ்சி நடுங்கி சவேரியாரிடம் தஞ்சம் புகுந்தார்கள். அப்போது அவர் மக்களைப் பார்த்து, “நீங்கள் யாருக்கும் அஞ்சவேண்டாம், கடவுள் நம்மோடு இருக்கிறார்” என்று சொல்லிவிட்டு அவர் நற்செய்தி போதித்துக்கொண்டிருந்த ஆலயத்தை விட்டு வெளியே வந்தார்.
ஊரையே சூறையாட நினைத்த கொள்ளையர்களை சவேரியார் ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவுதான் எல்லாரும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இதைப் பார்த்து வியப்படைந்த மக்கள் யாவரும் இவர் உண்மையிலேயே இறைவனின் ஊழியன் என்று கடவுளை வாழ்த்தினர்.
அன்னையாம் திருச்சபை இன்று மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலரும், நம் இந்திய நாட்டின் பாதுகாவலருமான தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவருடைய விழாவைக் கொண்டாடும் இந்நாளில் இவருடைய வாழும், இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்களும் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறிது அறிந்துகொள்வோம். சவேரியார் ஸ்பெயின் நாட்டில் 1506 ஆம் சவேரியார்கோட்டை என்ற இடத்தில் ஒரு செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தார். இவருடைய தந்தை மூன்றாம் ஜான் என்ற மன்னனின் அரசபையில் ஆளுநராக இருந்தார்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த சவேரியார் தாய் மற்றும் சகோதரிகளின் பராமரிப்பிலே வளர்ந்தார். 1525 ஆம் ஆண்டில் தன்னுடைய மேல்படிப்பை பாரிசில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்தார். இவருடைய அறைவாசிகள்தான் பேதுரு ஃபேபர் மற்றும் இஞ்ஞாசியார். சவேரியார் ஒருமிகப் பெரிய பேராசிரியராக மாறவேண்டும் என்ற இலட்சிய வெறியோடு இருந்தார். அவர் இப்படி உலகக் காரியங்களில் அதிகமான ஈடுபாடுகொண்டு வாழ்வதைப்பார்த்த இஞ்ஞாசியார் “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் வரும் பயனென்ன?” (மத் 16:26) என்ற இயேசுவின் வார்த்தையை திரும்பத் திரும்ப அவரிடம் சொல்லி வந்தார். இது சவேரியாரின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
1534 ஆம் ஆண்டு ஏழு உறுப்பினர்களைக் கொண்டு உருவான ‘இயேசு சபை”யில் சவேரியார் ஒரு முக்கிய நபராக விளங்கினார். 1537 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் குருப்பட்டம் பெற்ற சவேரியார், ரோம் நகரில் ஓராண்டு காலம் நோயாளிகளிடம் பணிசெய்துவிட்டு, கிழக்காசிய நாடுகளுக்கு போதிய அருட்பணியாளர்கள் இல்லாததனால் 1542 ஆம் ஆண்டு பணிசெய்வதற்காக கோவாவில் இறங்கினார்.
அங்கே பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்று இருந்தவர்களுக்கு திருச்சபையின் அடிப்படைச் ஜெபங்களைச் சொல்லிக்கொடுத்தார்; அதற்காக மக்களின் மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஒருசிறிய மணியை எடுத்துக்கொண்டு அதனை தெருவில் அடித்துக்கொண்டேபோய் சிறுவர்களைக் கோவிலுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு மறைக்கல்வி சொல்லிக்கொடுத்தார். அத்தோடு நின்றுவிடாமல் மக்களுக்கு மருத்துவப் பணியும் செய்துவந்தார்.
ஒருமுறை சவேரியார் இஞ்ஞாசியாருக்கு கடிதம் எழுதும்போது இவ்வாறு குறிப்பிட்டார், “இங்கே இருக்கும் மக்களுக்கு அடிப்படைச் ஜெபங்கள்கூடத் தெரியவில்லை, அதனால் அவர்களுக்கு ஜெபங்களை எல்லாம் சொல்லித் தருகிறேன். மேலும் இம்மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்துக் கொடுத்து என்னுடைய கைகளே மரத்துப் போய்விட்டது” என்று எழுதினார். அந்தளவுக்கு நற்செய்திப் பணியை மிக ஆர்வத்தோடு செய்துவந்தார்.
ஒருநாள் ஒரு குடும்பஸ்தன் சவேரியாரை அணுகி வந்து தனக்கு பிறப்பதெல்லாம் பென்குழந்தைகளாகப் பிறக்கிறது, ஒரு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று கேட்டபோது அவர் அவருக்காகச் ஜெபித்தார். அடுத்த ஆண்டில் அவருடைய மனைவிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தளவுக்கு சவேரியார் கடவுளின் அருளை நிரம்பப் பெற்றிருந்தார். பாம்பு கடித்து இறந்தவரையும், கிணற்றில் விழுந்து இறந்தவரையும் சவேரியார் உயிர்ப்பித்தார் என்று இவரது வரலாறு நமக்கு எடுத்துக் கூறுகிறது.
சவேரியார் இந்தியாவின் கடற்கரை பகுதியில் நற்செய்தி அறிவித்துவிட்டு மலாக்கா மற்றும் ஜப்பானிலும் நற்செய்திப் பணியாற்றினார். அங்கே இறந்துபோன ஒரு பிரபுவின் மகளை உயிர்ப்பிக்கச் செய்தார். அதனால் மக்கள் அவரை ‘வெள்ளை உடை தரித்த புத்தராகவே’ பார்த்தனர். ஜப்பானில் நற்செய்தி அறிவித்தபோது மக்களிடமிருந்து ஒரு சில பிரச்சனைகளைச் சந்தித்தார். அதனால் அவர் அங்கிருந்து சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கப்ப் புறப்பட்டார். அப்படிச் செல்லும்போது சான்சியன் என்ற தீவிலே கொடிய காய்ச்சல் தாக்க சவேரியார் தன்னுடைய 46 வது அகவையில் இறந்துபோனார்.
வெளிநாட்டிலிருந்து இங்கே வந்து; பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து; தாம் சந்தித்த மக்களுக்கெல்லாம் நற்செய்தி அறிவித்து; மக்களை ஆண்டவரிடம் அழைத்துச் சென்ற தூய சவேரியாரைப் போன்று இன்று நற்செய்திப் பணிசெய்ய ஆளில்லை. தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடம் விளங்கிய நற்செய்தியின் மீதான ஆர்வம், பற்று எல்லாம் நம்மிடம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” என்ற பவுலடியாரின் வார்த்தைகளில் உள்ள உண்மையை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் தூய சவேரியாரைப் போன்று நற்செய்தியாளராக மாறவேண்டும்.
ஒருமுறை அரசன் ஒருவன் தன்னுடைய நாட்டு மக்கள் எந்தளவுக்கு சமூக அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சோதித்து பார்க்க விரும்பினார். அதனால் மக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் ஒரு பாறாங்கல்லைப் போட்டுவிட்டு, அதனை யார் அகற்றுகிறார்கள் என்று பார்க்குமாறு தன்னுடைய மந்திரிக்கு கட்டளையிட்டான்.
அதேபோன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த சாலையில் ஒரு பாறாங்கல் போடப்பட்டது. அதைப் பார்த்த மக்களில் ஒருசிலர் ஒன்றுமே அறியாதவர்கள் போன்று விலகிச் சென்றார்கள். இன்னும் ஒருசிலர் ‘சாலையில் இப்படி பாறாங்கல் கிடப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் அரசன் அப்படி என்ன செய்கிறார்’ என்று அரசனை இகழ்ந்து பேசிக்கொண்டே சென்றனர்.
அப்போது அந்த வழியாக தலையில் காய்கறிகளைச் சுமந்துகொண்டு சந்தைக்குச் செல்வதற்காக ஒரு விவசாயி வந்தார். பாதையின் குறுக்கே இப்படி பாறாங்கல் கிடப்பதைப் பார்த்த அவர் தன்னுடைய தலையில் இருந்த சுமையை இறக்கிவைத்துவிட்டு பாறாங்கல்லை பாதையில் இருந்து அப்புறப்படுத்தினார். அவ்வேளையில் பாறாங்கல்லுகுக் கீழே ஒரு துணிப்பை கிடந்தது. அதைத் திறந்து பார்த்தவருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ஏனென்றால் அந்தப் பை முழுவதும் பொற்காசுகள். அந்தப் பையில் ஒரு காகிதமும் இருந்தது அதில் இவ்வாறு எழுதி இருந்தது, “இந்த கல்லை அகற்றுவோருக்கே இந்த பொற்காசுகள்” என்று. கல்லை அகற்றிய எனக்கு இவ்வளவு பொற்காசுகள் தந்திருக்கிறார் அரசர் என்று மிகவும் மகிழ்ச்சியோடு சந்தையை நோக்கிப் புறப்பட்டார்.
பாதையில் கிடந்த கல்லை யாரும் அகற்ற முன்வராதபோது ஒரு சாதாரண விவசாயி அதனை அகற்ற முன்வந்தார். அதனால் அவர் பொற்காசுகளைப் பரிசாகப் பெற்றார். அதேபோன்றுதான் உலகப் போக்கில் வாழ்ந்து யாருமே நற்செய்தி அறிவிக்க முன்வராத சூழலில் தூய சவேரியார் நற்செய்தி அறிவிக்க முன்வந்ததார். அதனால்தான் கடவுள் அவருடைய உடலை இன்று வரைக்கும் அழியாமல் காத்து வருகின்றார்.
நாமும் இன்றைய நற்செய்தியில் படிப்பது போன்று ‘உலகெங்கும் நற்செய்தி அறிவிக்கும்’ நற்செய்திப் பணியாளர் ஆவோம். தூய சவேரியாரைப் போன்று இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.