யூதர்களும் கிறிஸ்தவர்களும் அமைதிக்கான பாதையை அமைக்க அழைப்பு

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், மனிதர் மற்றும், இடங்களின் புனிதத்துவத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றவேளை, அப்போரை முடிவுக்குக்கொணரவும், அமைதியின் பாதைகளுக்கு வழியமைக்கவும், நம்மால் இயன்ற அனைத்தையும் ஆற்றுவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் யூத சமுதாயத்திடம் கூறியுள்ளார்.

நவம்பர் 22, இச்செவ்வாய் காலையில், உலக யூதமத நிறுவனத்தின் ஏறத்தாழ 200 பிரதிநிதிகளை,  வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கேடு விளைவிப்பதற்கானவற்றை அல்ல, மாறாக அமைதிக்கான திட்டங்களைக் கொண்டிருக்கும் (எரே.29:11) இறைவன், அமைதிக்கான பயணத்தில் நம்மை ஒன்றிணைத்து அழைத்துச் செல்வாராக என்று கூறினார்.

இன்று உலகின் பல பகுதிகளில் அமைதி அச்சுறுத்தப்பட்டுள்ளது எனவும், எல்லாப் போர்களும், எப்போதும், எல்லா இடங்களிலும் மனித சமுதாயம் முழுவதற்கும் தோல்வியாகவே உள்ளது என்பதைக் கிறிஸ்தவர்களும், யூதர்களுமாகிய நாம் ஏற்கின்றோம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

நம் இரு சமுதாயங்களும் பகிர்ந்துகொள்ளும் ஒரே சமய மரபின் ஒளியில், இக்காலம் முன்வைக்கும் பிரச்சனைகள், நம்மை இணைக்கின்ற ஒரு சவாலாக உள்ளது என்றும், சமத்துவமின்மையின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராகப் போராடி, நீதியை அதிக அளவில் ஊக்குவித்து, உடன்பிறந்த உணர்வுள்ள ஓர் உலகை அமைக்கும் பணி, நம் இரு சமூகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இவ்வாறு நாம் பணியாற்றுவதன் வழியாக, அமைதி இவ்வுலகிற்கு உரியது அல்ல என்பதில் நிலைத்திராமல், இன்றைய நம் உலகிற்குத் தேவையானதாக அது மாறும் என்றுரைத்த திருத்தந்தை, நீதி, உண்மை, அன்பு மற்றும், சுதந்திரத்திலிருந்து அமைதியான நல்லிணக்க வாழ்வு தொடங்குகிறது என்று எடுத்தியம்பினார்.

Comments are closed.