இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.” என யோவான் எழுதிய திருவெளிப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
அறுவடையின் பொழுது நல்லவற்றைக் கட்டுகளாகக் கட்டிக் களஞ்சியத்தில் சேர்த்து வைப்பார்கள்; கெட்டவற்றையோ தீயிலிட்டு எரிப்பதற்காக கட்டுகளாகக் கட்டுவார்கள். இவ்வாறு கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார் (மத் 16: 27) என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கிறது.
ஆகையால், நாம் இறுதித் தீர்ப்பின்பொழுது ஆண்டவருக்கு முன்பாக நிற்கத் தகுதியுடையவர்களாய் இருக்க, அவருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்வது தேவையான ஒன்றாக இருக்கின்றது. நாம் ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை வாழ இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில் (தி.வெ.2:10)
“இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்,” என்கிறார் ஆண்டவர்.
இப்பூவுலகில் நாம் வாழும் காலம் முழுவதும் தளரா நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். ஆண்டவர் மீது அத்தகைய விசுவாசத்தோடு இருந்து நித்திய வாழ்வு என்னும் மணிமுடியைப் பெற இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
““நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும் போது திகிலுறாதீர்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
இன்றைக்குப் பல பிழைப்பு வாதப் போதகர்கள் இயேசுவின் பெயரைச் சொல்லிக்கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அப்பாவி மக்கள் அவர்களிடம் ஏமாறாதவாறும், அவர்களுடைய வார்த்தைகளால் திகிலுறாமலும் இருக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இசைக்கலைஞர்களின் பாதுகாவலரும், இன்றைய புனிதருமான புனித செசிலியாவின் நினைவு நாளான இன்று ஆலயத்தில் உள்ள அனைத்து திருப்பலி பாடகற் குழுவிற்காக சிறப்பாக செபிப்போம். அவர்களின் ஆன்ம சரீர நலன்களுக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.