சிறாரே, உக்ரைனில் அமைதி நிலவ செபமாலை செபியுங்கள்

உக்ரைனிலும், உலகெங்கும் போர்களினால் சிதைக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் அமைதி கிடைப்பதற்காக, அக்டோபர் 18, இச்செவ்வாயன்று செபமாலை செபிக்குமாறு, உலகின் அனைத்துச் சிறாருக்கும் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் மீது தந்தையாம் கடவுள் கொண்டிருக்கும் அன்பை எடுத்துரைக்கும் விதமாக, ACN எனப்படும், தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவுகின்ற பாப்பிறை அமைப்பு “பத்து இலட்சம் சிறார் செபமாலை செபிக்கின்றனர்” என்ற தலைப்பில் ஒவ்வோர் ஆண்டும் பக்தி முயற்சி ஒன்றை நடத்தி வருகிறது.

இப்பக்தி முயற்சியில் உலகின் அனைத்து சிறாரும் இணைந்து, உலகில் அமைதி மற்றும், ஒன்றிப்பு நிலவ செபமாலை செபிக்குமாறு, இந்த அமைப்பு சிறாரை உற்சாகப்படுத்தி வருகிறது.

இவ்வாண்டு இச்செவ்வாயன்று நடைபெறும் இச்செபமாலை பக்தி முயற்சியில் இணைந்து உலகின் அமைதிக்காக அன்னை மரியாவிடம் செபிக்குமாறு சிறாரை ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை, இதில் இணையும் அனைத்து சிறாருக்கும் தன் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

போரால் சிதைக்கப்பட்டுள்ள உக்ரைனிலும், போர், வன்முறை, மற்றும் ஏழ்மையின் பிற வடிவங்களால் உலகின் மற்ற பகுதிகளிலும் துன்புறும் மக்களுக்காக, சிறாரோடு வயதுவந்தோரும் சேர்ந்து செபிக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

வறுமை ஒழிப்பு

மேலும், அக்டோபர் 17, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட வறுமை ஒழிப்பு உலக நாள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, சமுதாயத்தில் ஏழை என்பதற்காக எவரும் புறக்கணிக்கப்படுவதாக உணராமல் இருப்பதற்கு, அனைவரும் உதவுமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

Comments are closed.