இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய ஞாயிறு திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.” என கூறப்பட்டுள்ளது.
நமது இன்பத்திலும், துன்பத்திலும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் தூய உள்ளத்தினை நாம் பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய ஞாயிறு நற்செய்தி வாசகத்தில்
“இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.” என வாசித்தோம்.
“நன்றியுணர்வே நற்பண்புகளின் தாய்” என்று பேரறிஞர் சிசரோ கூறுவார். அது முற்றிலும் உண்மை. ஏனெனில், நன்றியுணர்விலிருந்தே ஆண்டவரைப் புகழ்தல், மனநிறைவு, மகிழ்ச்சி போன்ற நற்பண்புகள் பிறக்கின்றன.
நம்முடைய வாழ்வில் நாம் என்றும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து
இந்த வாரம் முழுவதும் நமக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப்பெற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
திருஅவையின் மறுமலர்ச்சிக்காக தற்போது பல்வேறு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் தூய ஆவியானவரின் தூண்டுதல் நன்கு செயல்பட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.