உணவை வீணடித்தல் என்பது மக்களை வீணடிப்பதாகும்” -திருத்தந்தை

உணவை வீணடித்தல் என்பது உலக மக்களை வீணடிப்பதற்கு சமம் எனவும் உணவின்றி பசியோடு வாழும் பலர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் எனவும், உலக உணவு இழப்பு, மற்றும் வீணடித்தல் குறித்த விழிப்புணர்வு நாளுக்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக உணவு இழப்பு மற்றும் வீணடித்தல் பற்றிய விழிப்புணர்வு  நாளை முன்னிட்டு FAO என்னும் உலக உணவு, மற்றும் வேளாண் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், உணவை வீணடிப்பது அவமானத்திற்குரியது என்றும் அது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேவைக்கு அதிகமான உணவு ஒருபுறம், பசியால் இறப்பவர்கள் மறுபுறம் என சமநிலையற்ற சூழலில் வாழ்கின்ற நமக்கு, இன்றைய நாள் வலியுறுத்தும் பிரச்சனை மறுக்கப்பட முடியாத ஒன்று எனவும், உணவு மற்றும் அதை பெறுவதற்கான வழிவகைகள் இல்லாத பல மனிதர்கள் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து வைத்திருப்பது ஒவ்வொருவரின் அடிப்படையான மற்றும் முதன்மையான கடமை என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை .

உணவை சரியான முறையில் பயன்படுத்தாதிருத்தல், வீணாக்குதல், குப்பையில் வீசுதல், கெட்டுப் போக வைத்தல் போன்ற செயல்கள், “பயன்படுத்தி தூக்கி எறியும் கலாச்சாரத்தில்” நாம் வாழ்கின்றோம் என்பதை எடுத்துரைக்கின்றது எனவும், இத்தகைய செயல் அவமானத்திற்குரியதாகவும் கவலை தருவதாகவும் உள்ளது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

உணவு என்பது குருட்டு ஆதாய வேட்டைக்குரிய ஒரு பொருளல்ல எனவும், உணவு உற்பத்தியாளர்கள் தங்களை மேலும் செல்வந்தர்களாக மாற்றிக் கொள்ள தேவைக்கு அதிகமாக பொருள்களை வாங்க நுகர்வோரைக் கட்டாயப்படுத்துவதால்   மனிதர்களிடையே இத்தகைய ஏற்றத்தாழ்வு நிகழ்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், உணவு குறித்த இத்தகைய சிந்தனை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.