திருஅவையில் இடம்பெறும் முறைகேடுகள், ஒன்றிப்புக்கு இடையூறு

திருஅவையின் சில ஆண்கள், மற்றும் பெண்களால் இடம்பெறும் அதிகார அத்துமீறல்,  பாலியல் முறைகேடுகள் போன்றவற்றால், திருஅவை துன்புறுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

போர்த்துக்கல் நாட்டு தொலைக்காட்சியின் CNN அலைவரிசைக்கு அளித்துள்ள பேட்டியில், அந்நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள், உரையாடலின் முக்கியத்துவம், ஒன்றிணைந்து பயணம் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றம், திருஅவையில் சில மனிதர்களின் பாலியல் முறைகேடுகள், உக்ரைனில் அமைதி போன்ற தலைப்புகளில், தன் எண்ணங்களை எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சில அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள், ஒருபோதும் சகித்துக்கொள்ளவே முடியாதவை என்றும், திருஅவையின் ஆண்களும், பெண்களும், அவர்கள் அருள்பணியாளராகவோ, இருபால் துறவறத்தாராகவோ, பொதுநிலையினராகவோ யாராக இருந்தாலும், அதிகார வரம்பு மீறல், கொடியதீமை என்பதை தெளிவாகக் கூற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும் பணிபுரியவும், ஒன்றிப்பை உருவாக்கி அதை வளர்க்கவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றுரைத்துள்ள திருத்தந்தை, திருஅவையில் இடம்பெறும் முறைகேடுகள் அனைத்தும், இவ்வொன்றிப்பை எப்போதும் அழிக்கின்றன என்று கூறியுள்ளார்

Comments are closed.