திருமுழுக்குப் பெற்ற நாம் கிறிஸ்துவில் மகிழ்கிறோம்

கடவுளின் மீட்புத் திட்டத்திற்குமுன் நமது வியப்பையும் நன்றியுணர்வையும் புதுப்பித்துக்கொள்வோம் என்று, ஆகஸ்ட் 30, இச்செவ்வாய் மாலையில், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாய் மாலையில், புதிய கர்தினால்கள் உட்பட 197 கர்தினால்களோடு தலைமையேற்று சிறப்பித்த கூட்டுத்திருப்பலியில் வாசிக்கப்பட்ட வாசகங்களின் அடிப்படையில், வியப்பு என்ற வார்த்தையை மையப்பொருளாகக் கொண்டு மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள் என்று கூறிய உயிர்த்த ஆண்டவரை, அவர்தம் சீடரும், புனித பவுலடியாரும் சந்தித்தது வியப்பான ஒன்றுதான் என்று இம்மறையுரையில் எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தியை அறிவிக்கவும், ஆண்டவருடைய அருளடையாளங்களை எல்லா மக்களுக்கு எடுத்துரைக்கவும் தூய ஆவியானவர் எவ்வாறு நம்மை வழிநடத்துகிறார் என்றும், முன்னோக்கி நகர்த்துகிறார் என்பதை நாம் இங்கே அறிந்துகொள்ளலாம் என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலகின் மகத்துவத்தைக் கண்டு நாம் அடிக்கடி வியப்படைவதைப் போலவே மீட்பின் வரலாற்றைக் கருத்தில் கொள்ளும்போது, ​​​​அனைத்தும் கிறிஸ்துவில் அவற்றின் தோற்றம், இருப்பு, முடிவு மற்றும் நோக்கம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும்போது நாமும் வியப்பால் நிறைக்கப்படுகிறோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

கடவுளின் மீட்புத் திட்டம்பற்றி நாம் வியப்படையும் அதேவேளையில், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்” (மத் 28:19-20) என்ற ஆண்டவர் இயேசுவின் அழைப்பை வாழ்வாக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள உலக ஆயர்கள் மாமன்ற அறையில் நடைபெற்ற கூட்டத்தில், அண்மையில் வெளியிடப்பட்ட, திருப்பீடத் தலைமையகத்தின் சீர்திருத்தம் பற்றிய Praedicate Evangelium என்ற புதிய திருத்தூது கொள்கைத்திரட்டை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 197 கர்தினால்களோடு, ஆகஸ்ட் 29, 30 ஆகிய இரண்டு நாள்கள் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு இத்திருப்பலி நடைபெற்றது.

Comments are closed.